அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகள் (ICE - Immigration and Customs Enforcement மற்றும் Border Patrol) சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து, கைது செய்து, காவலில் வைத்து, நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, இத்தகைய நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. வீடுகள், வணிக வளாகங்கள், மெக்சிகோ உள்ளிட்ட நாட்டின் எல்லை பகுதிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2025-2026ம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதக் குடியேறிகள் என்று அடையாளம் காணப்பட்டு, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அகதிகளாக தஞ்சமடைந்தவர்களும் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில், பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்களுக்கு எதிராகக் கடுமையான ஒடுக்குமுறை தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை மினசோட்டாவில் Columbia Heights Public மழலையர் பள்ளியில் இருந்து 5 வயது ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த சிறுவன் ரமோஸ் ICE (Immigration and Customs Enforcement) அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டான். சிறுவனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்த தந்தை கோனெஜா அரியாசும் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மாஸ்க் அணிந்த ICE அதிகாரிகளுடன் சிறுவன் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சிறுவன் மட்டுமல்ல 17 வயதிலுள்ள இரு சிறார்கள் மற்றும் 10 வயது சிறுவன் ஒருவனையும் ICE அதிகாரிகள் இந்தப் பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றனர்.
பின்னர், அதிகாரிகள் அந்த சிறுவனை டெக்ஸாஸின் புறநகர் பகுதியான டில்லே என்ற இடத்திலுள்ள குடும்பத் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனின் தாய் இருந்ததாக கூறப்படும் வீட்டின் கதவை சிறுவனை வைத்து தட்ட வைத்தனர். ஆனால், அதற்கு முன்னதாக சிறுவனின் தந்தை மனைவியை போனில் தொடர்பு கொண்டு கதவைத் திறக்க வேண்டாம் என்று கூறி விட்டதால், அவர் கதவைத் திறக்கவில்லை. இதனால், ICE அதிகாரிகளால் அந்தப் பெண்ணை கைது செய்ய முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து Columbia Heights Public பள்ளியின் சூப்பரிடென்டன்ட் ஜெனா ஸ்டென்விக் கூறுகையில், ''சிறுவனின் வீட்டுக்குச் சென்ற குடியேற்ற அதிகாரிகள் சிறுவனின் வீட்டு கதவைத் தட்டக் கூறியுள்ளனர். அந்த வீட்டுக்குள் வேறு யாராவது தங்கியிருப்பார்களா? என்பதை அறிய அவர்கள் முயற்சித்துள்ளனர். வீட்டைத் திறக்க வைக்க சிறுவனை ஒரு கருவியாக பயன்படுத்தியுள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு ரமோஸின் குடும்பம் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளது. இந்த குடும்பத்தினர் புகலிடம் கோரிய வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நாட்டை விட்டு அவர்களை வெளியேறும்படி உத்தரவிடப்படவில்லை . அப்படியிருக்கையில், ஒரு 5 வயது குழந்தையை ஏன் காவலில் வைக்க வேண்டும்? இந்தக் குழந்தையை வன்முறைக் குற்றவாளியாக மிகைப்படுத்திக் காட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது '' என்கிறார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (டி.எச்.எஸ்) நிராகரித்துள்ளது. செய்தி தொடர்பாளர் டிரிசியா மெக்லாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
'' ICE அமைப்பு ஒரு குழந்தையை குறிவைக்கவோ, கைது செய்யவோ அல்லது "தூண்டிலாகப்" பயன்படுத்தவோ இல்லை. தந்தையும், தாயும் எனக் கூறப்படுபவர்கள் குழந்தையை விட்டு ஓடிவிட்டனர். ஜனவரி 20ம் தேதி ICE அதிகாரிகள் கோனெஜோ அரியாஸை கைது செய்ய முயன்ற போது, அவர் தப்பி ஓடினார். அப்போது, குழந்தையின் பாதுகாப்புக்காக மட்டுமே அவனுடன் அதிகாரிகள் இருந்தனர். மற்ற அதிகாரிகள் தப்பியேடிய கோனெஜோ அரியாஸைக் கைது செய்தனர். எங்கள் அதிகாரிகள், வீட்டிற்குள் இருந்த தாய் எனக் கூறப்படுபவரிடம் குழந்தையை ஒப்படைக்க பலமுறை முயற்சி செய்தனர். அந்தப் பெண்ணிடத்தில், அவர் கைது செய்யப்பட மாட்டார் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். எனினும், தாய் எனக் கூறப்படுபவர் குழந்தையை ஏற்க மறுத்துவிட்டார். இந்தத் தருணத்தில் குழந்தை தன்னுடன் இருக்க வேண்டும் என்று தந்தை அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்தார்.
இந்தச் சூழ்நிலையில், அங்கிருந்த சிலர் அந்த இடத்தைச் சூழ்ந்துகொண்டு, கூச்சலிட்டும், ஹாரன் அடித்தும் குழந்தையை பயமுறுத்தினர். இதனால், எங்கள் அதிகாரிகளின் குழந்தையின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டனர். தாய் குழந்தையைக் கைவிட்ட பிறகு, குழந்தையைத் தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தந்தையின் விருப்பத்திற்கு அதிகாரிகள் மதிப்பளித்தனர். குழந்தைக்கு மெக்டொனால்ட்ஸில் இருந்து பர்கர் வாங்கி கொடுத்தனர். அவனுக்குப் பிடித்த இசையையும் ஒலிக்கச் செய்தனர். தற்போது தந்தையும் மகனும் டில்லே பகுதியில் ஒன்றாக இருக்கிறார்கள்."
இத்தகைய விவகாரத்தில் பெற்றோர் குறிப்பிடும் ஒரு பாதுகாப்பான நபரிடம் ICE அமைப்பு குழந்தைகளை ஒப்படைப்பதை வழக்கமாக வைத்துள்ளது. பெற்றோர் விருப்பப்பட்டால், இலவச விமானப் பயணத்துடன் 2,600 டாலர்களைப் பெற்றுக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறலாம். இதற்காக, CBP (U.S. Customs and Border Protection ) ஹோம் செயலியில் விண்ணப்பிக்கலாம். இந்த செயலி வழியாக சட்டவிரோத குடியேறிகள் சட்டப்பூர்வமான வழியில் மீண்டும் சொந்த நாடு திரும்புவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.