கடந்த டிசம்பர் 21ல், ‘பொருநை அருங்காட்சியம்’ திறக்கப்பட்ட போதே, உடனே போய்ப் பார்த்துவிட வேண்டும் என்ற ஓர் உள்ளார்ந்த ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. தமிழகத்தின் ஒவ்வொரு நகரத்துக்குமே தனித்துவமான அடையாளங்கள் என்று ஏதாவது ஒன்று இருக்கும். ஆனால், நெல்லைக்கு மட்டும் அப்படியொன்று சிறப்பானதாக அமைந்திடவில்லையோ என்றொரு எண்ணம் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. அதைத் தீர்ப்பதற்கு மட்டுமல்ல, தமிழனின் தொல்வரலாறே தாமிரபரணிக் கதையிலிருந்துதான் தொடங்குகிறது அல்லது அப்பெரும் வரலாற்றுக்கான சான்றுகளை தாமிரபரணிக் கரையே அள்ளித் தந்திருக்கிறது எனும் செய்தி அக்குறையைப் போக்கிப் பேருவுகையைத் தந்தது என்று சொன்னால் அதில் மிகையில்லை!
நல்லதொரு பொங்கல் விடுமுறை தினத்தில், குடும்பம் குட்டியோடு அங்கே போய்ச் சேர்ந்தால், மொத்த மாவட்டமும் இங்கே வந்துவிட்டதோ என்று ஆச்சரியப்படும்படியான மக்கள் வெள்ளம் அங்கே இருந்தது. அவர்களோடு கலந்தோம்.
திருநெல்வேலி- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் நெல்லைக்கு அருகே, ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் சுமார் 13 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது இந்த அருங்காட்சியகம். மதுரை மாவட்டம், கீழடியில் தமிழர்களின் 2600 ஆண்டுகள் தொன்மையான வரலாறு கண்டெடுக்கப்பட்ட போது அதைவிடப் பழமையான சான்றுகள் கிடைக்க வாய்ப்பில்லை என்று ஆய்வுலகால் கருதப்பட்டது. ஆனால், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய ஊர்களில் இருந்து கிடைத்திருக்கும் சுமார் 3200 ஆண்டுகள் பழைமையான, எண்ணற்ற சான்றுகள் கீழடியை விஞ்சும் வண்ணம் அமைந்திருக்கின்றன.
1870 களிலேயே, ஆதிச்சநல்லூரில் ஜெர்மானிய, ஆங்கிலேயே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் தொடங்கப்பட்ட அகழாய்வுகள், ஒன்றிய அரசின் சரியான ஒத்துழைப்பில்லாமல் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகராமல் மிக மெதுவாக நடந்து வந்தன. சுமார் 150 வருடங்களுக்குப் பின்னர், தற்போதுதான் அந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, பல சான்றுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
இப்பகுதியில் முதலாவதாக நாம் அறிந்திருந்தது, ஆதிச்சநல்லூர் ஈமக்காடும், அங்கிருந்து கிடைக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளும்தான். ஆனால், அதன் அருகிலேயே இருந்திருக்க வேண்டிய மக்களின் வாழ்விடப்பகுதிதான் நீண்டகாலமாகத் தேடப்பட்டுக் கொண்டிருந்தது. அது, தற்போதுதான் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆதிச்சநல்லூர் வாழ்விடப்பகுதி மட்டுமல்லாது, சிவகளை, கொற்கை பகுதியிலும் இதே காலகட்டத்தைச் சார்ந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மூன்று தொல் தளங்களிலிருந்தும் ஏராளமான சுடுமண் பானைகள் மட்டுமல்லாது, சுடுமண் சிற்பங்கள், தங்கப் பட்டயங்கள், முப்பத்திரண்டு வகையான இரும்பு ஆயுதங்கள், கருவிகள், வெண்கலப் பொருட்கள், தந்தத்திலான மணிகள், சங்கு வளையல்கள், மணிமாலைகள் என வியக்க வைக்கும் ஒரு நாகரிக வாழ்வின் அடையாளங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இன்னும் அழிந்துபோகாதிருந்த நெல்மணிகள் கண்டெடுக்கப்பட்டதுதான் சிறப்புக்கும் சிறப்புச் சேர்ப்பதாக ஆகிவிட்டது. அவையனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் அதன் தொன்மையும், பெருமையும் குலையாமல், சீருர கண்ணாடிப் பேழைகளில் பாதுகாப்பாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
இன்றிலிருந்து சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பாக, நாம் வாழும் இதே பகுதியில், இதே பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்த நம் முன்னோர், அவர்கள் சாப்பிட்ட உணவு, பயன்படுத்திய கருவிகள், செய்த வணிகம், மேற்கொண்ட இறப்புச் சடங்குகள் வரை எல்லாம் மிக எளிமையாக, ஆனால் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. நிதானமான ஒரு சில மணி நேர நடை போதும், அந்தப் பெருவாழ்வை நம்மால் ஒரு காட்சிப் படமாக உணரமுடியும்.
சுமார் 9 குளிரூப்பட்டப்பட்ட காட்சியரங்குகளில், இரண்டு தளங்களில் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. முதன்மைக்கூடத்தின் ஒரு பகுதியில் நாற்பது பேர் அமரத்தக்க வகையில் ஒரு சிறிய தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. அகழாய்வு செய்யப்பட்ட பகுதிகள், காலம், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், ஆய்வாளர்களின் கருத்துகளோடு கூடிய 20 நிமிட அளவிலான ஆவணப்படம் ஒன்று ஒளிபரப்பப்படுகிறது. காத்திருக்க நேர்ந்தாலும் கூட, அதைக் காணத் தவறாதீர்கள்!
நமது வரலாறு, நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இந்தச் சீரிய பொறுப்பை உணர்ந்து, அவற்றைக் கற்பதோடு, நம் சந்ததியினருக்கும் உணர்த்திச்செல்ல வேண்டும். குழந்தைகள், மீண்டும், மீண்டும் உடைந்த பானைகளையும், துருப்பிடித்த கத்திகளையும் பார்த்துப் போரடித்து “வீட்டுக்கு எப்போது போவோம்?” என்ற முகபாவனையோடு நடந்து கொள்ளக்கூடும், அதில் தவறில்லை. ஆயினும் பக்குவத்தோடு அவர்களைக் கையாண்டு, தகுந்த செய்திகளைப் போரடிக்காமல் அளவோடும், வியப்போடும் சொல்லிக் கொடுங்கள். இளைஞர்களாக இருப்பின், நிச்சயம் அதன் முக்கியத்துவத்தை அறியச் செய்யுங்கள். ’பொருநை அருங்காட்சியகம்’, அதற்கான ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்!