Victim Deepak alongside Shimjitha Musthafa 
செய்திகள்

கேரளாவை உலுக்கிய தீபக்கின் மரணம்.. குற்றம் சாட்டிய ஷிம்ஜிதா கைது!

தீபக் எடுத்த தற்கொலை முடிவு கேரள மாநிலத்தை அதிர வைத்துள்ளது. குற்றம் சாட்டிய பெண் கவுன்சிலராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம். குமரேசன்

கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 42). டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், கடந்த 16ம் தேதி கண்ணூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் சென்றபோது, அருகில் நின்று பயணித்த இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக, அந்தப் பெண் வீடியோ எடுத்து பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானதையடுத்து , தீபக்கை பலரும் சந்தேகப்பட்டு தவறாகப் பேசியதாக தெரிகிறது. சோசியல் மீடியாவிலும் தீபக் விமர்சனத்துக்குள்ளானார். இதனால், அவமானம் தாங்க முடியாமல் தீபக், கடந்த 18ம் தேதி இரவு 7 மணியளவில் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.

தீபக்கின் தற்கொலைக்குப் பிறகு, சோசியல் மீடியாவின் முகம் மாறியது. அந்தப் பெண்தான் தீபக் மீது வேண்டுமென்றே உரசி, வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் எனவும் வியூஸ்க்காக அந்த பெண் இத்தகைய மோசமான செயலில் இறங்கியதாகவும் நெட்டிசன்கள் குற்றம் சாட்ட தொடங்கினர்.

இந்த நிலையில், தீபக்கின் நெருங்கிய நண்பரான அக்ஷர் அலி என்பவர் நடந்த சம்பவம் குறித்து சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அவர், கூறுகையில், ''சிதைந்த குடும்ப வாழ்க்கையில் இருந்து தீபக் மீண்டு வந்து கொண்டிருந்தார். அந்த வீடியோவை நான்தான் முதன் முதலில் பார்த்து தீபக்கிடம் கூறினேன். அதுவரை, தீபக்குக்கு அப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாமல்தான் இருந்தார். தீபக் ஏதாவது தவறான செயலில் ஈடுபட்டிருந்தார் என்றால் அது பற்றித் தெரியாமல் இருப்பாரா? அவர் ஒரு அப்பாவி. இந்த விவகாரத்தால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அதே தருணத்தில், உண்மை அறியாமல் , பலரும் அவரை விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர். கடைசியாக நான் அவரிடத்தில் பேசிய போது, 'வக்கீலை அணுகி அந்தப் பெண் மீது மானநஷ்ட வழக்கு தொடர வேண்டும்' என்று கூறினார். ஆனால், இப்படி ஒரு சோகமான முடிவை எடுத்து விட்டார். அந்தப் பெண்ணை கண்டிப்பாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் '' என்றார்.

Shimjitha Musthafa was a member of the Indian Union Muslim League, Kerala

பலரும், அந்தப் பெண்ணைக் கைது செய்து, உண்மையைக் கண்டறிய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே, அந்த பெண் தீபக் தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து டெலிட் செய்து விட்டார். பின்னர், தனது செய்கைக்கு விளக்கம் அளித்து மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தீபக்கின் குடும்பத்தினர் கோழிக்கோடு மாவட்ட போலீஸ் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடத்தில் தீபக்கின் மரணத்துக்கு காரணமானவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

தீபக் வீடு இருக்கும் வார்டு பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் இந்திரா கூறுகையில், ''தீபக் மீது இது போன்று எந்த குற்றச்சாட்டும் இதற்கு முன், வந்ததில்லை. மிகவும் ஒழுக்கமான குடும்பத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். தனது மகனை வளர்த்து கொண்டிருந்த தந்தை அவர். தீபக்கின் இறப்புக்குக் காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கை'' என்று தெரிவித்துள்ளார்.

All Kerala Men's Association மற்றும் மனித உரிமை ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளன.

தீபக் மீது குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்ட ஷிம்ஜிதா முஸ்தபா (வயது 35) என்ற பெண் கோழிக்கோடு அருகேயுள்ள வடகராவைச் சேர்ந்தவர்.16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு, வெல்லேரி என்ற பகுதிக்கு குடி பெயர்ந்துள்ளார். இவரின், கணவர் துபாயில் பணி புரிந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு வெல்லேரி வார்டில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த வார்டில் 3 ஆண்டுகள் கவுன்சிலராக இருந்த ஷிம்ஜிதா துபாய் சென்றுள்ளார். அங்கு, ஒரு நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து, கணவருடன் கேரளா திரும்பியவர், தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு , சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துள்ளார்.

Women are present on the bus… please be cautious - has written in private bus in kerala

தீபக் தற்கொலை தொடர்பாக, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் முதலில் 'இயற்கைக்கு மாறான மரணம்' என்று வழக்கு பதியப்பட்டிருந்தது. தீபக்கின் குடும்பத்தினர் அளித்த புகாரையடுத்து, தற்கொலைக்குத் தூண்டியதாக பிஎன்எஸ் பிரிவு 108-ன் கீழ் ஷிம்ஜிதா முஸ்தபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், குற்றம் உறுதி செய்யப்பட்டால் 8 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் கிடைக்கலாம். ஜாமீன் மறுக்கப்படவும் வாய்ப்புள்ளது. தீபக் மீது குற்றம் சாட்டியிருந்த ஷிம்ஜிதாவை கோழிக்கோடு போலீசார் வடகரா பகுதியில் உறவினர் வீட்டில் இருந்த போது, நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 14 நாட்கள் ரிமாண்டில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் பையனூர்- ராமன்தாலி இடையே ஓடும் தனியார் பேருந்து ஒன்றில் ,'பேருந்தில் பெண்கள் இருக்கிறார்கள்... ஜாக்கிரதை' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது.