பிரபல மலையாள நடிகர் ஶ்ரீனிவாசன் 20 டிசம்பர் அன்று காலமானார். அவருக்கு வயது 69.
மலையாளத்தில் பல காமெடி நடிகர்களில் ஶ்ரீனிவாசனும் ஒருவர். குணச்சித்திர வேடங்களிலும் பல படங்களில் நடித்துள்ளார். கதாசிரியரும் கூட. 55 படங்களுக்கு கதை எழுதியுள்ளார். சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.
தமிழில் புள்ளக்குட்டிக்காரன், லேசா லேசா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான 'வடக்குநோக்கியந்திரம்' படத்திற்கு கேரள அரசின் சிறந்த பட விருதும், 'சிந்தாவிஷ்டயாய ஷியாமளா' படத்திற்கு தேசிய விருதுடன் மாநில அரசின் விருதும் கிடைத்தது அவரது படைப்புத் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். சித்ரம், நாடோடிகாற்று, பட்டினபிரவேசம், வரவேல்பு, தேன்மாவின் கொம்பத், தலையணைமந்திரம், உதயநானுதாரம் போன்ற படங்கள் பெரும் வெற்றியை பெற்றன.
கடந்த சில ஆண்டுகளாக ஶ்ரீனிவாசன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் செய்து வந்தார். ஒரு நாள் விட்டு, ஒரு நாள் டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில், திடீரென கடந்த சனிக்கிழமை அவரின் உடல் நலம் மோசமடைந்தது. இதையடுத்து, எர்ணாகுளம் அருகேயுள்ள திருப்பனித்துரா தாலுகா மருத்துவனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு, ஶ்ரீனிவாசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். ஶ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும் வினீத், தியான் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். மகன்களும் மலையாள திரையுலகில் பன்முகத்தன்மை கெண்டவர்களாக பணியாற்றி வருகின்றனர். ஶ்ரீனிவாசனின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் தலச்சேரியில் பள்ளி ஆசிரியரின் மகனாக 1956ம் ஆண்டு பிறந்த ஶ்ரீனிவாசன் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். சினிமா மீதுள்ள ஆர்வம் காரணமாக மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து படித்தார். இங்கு, நடிகர் ரஜினிகாந்த் ஶ்ரீனிவாசனுக்கு சீனியர். இருவருக்கும் நெருங்கிய நட்பும் உண்டு.
ஒருமுறை, மற்றொரு மாணவர் நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து 5 ரூபாய் கடன் வாங்கி விட்டுத் திருப்பிக் கொடுக்கவில்லை. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் ஶ்ரீனிவாசனிடத்தில் கூறியுள்ளார். தொடர்ந்து, அந்த மாணவனிடத்தில் இருந்து பணத்தைத் திரும்பப் பெற ஶ்ரீனிவாசன் உதவிய கதையும் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக உயர்ந்த பின்னரும், ஶ்ரீனிவாசனிடத்தில் தொடர்ந்து நட்பில் இருந்துள்ளார். இந்த நட்பை மையப்படுத்தி அவர் எழுதிய கதைதான் குசேலன். மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான 'கதபறையும் போள்'. இந்தப் படம் தமிழில் குசேலனாக ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பசுபதி நடித்த வேடத்தில்தான் மலையாளத்தில் ஶ்ரீனிவாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1977ம் ஆண்டு பி.ஏ பாக்கர்ஸ் இயக்கத்தில் மணிமுழக்கம் என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, ஏராளமான படங்களில் நடித்தார். மொத்தம் 255 படங்களில் நடித்துள்ளார். மோகன்லாலுடன் இவர் நடித்த பல படங்கள் சக்கைப் போடு பேட்டன. மம்முட்டி, மோகன்லாலுக்கு இணையாக மலையாளத்தில் சிறந்த நடிகராக ஶ்ரீனிவாசன் வலம் வந்தார்.
இவரது படங்கள் சமூகத்தில் நிலவும் பல பிர்ச்னைகளைப் பேசும். அதேபோல, நிஜ வாழ்க்கையிலும் விவசாயத்தில் அக்கறை கொண்டவராக இருந்தார். தான் வசித்து வந்த கன்டநாடு பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வந்தார். அந்தச் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல விவசாயிகளுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டார். இங்கு, விளையும் காய்கறிகளை விற்பனை செய்யவும் தனியாக விற்பனை மையத்தை ஏற்படுத்தியிருந்தார். இதனால், சுற்றுவட்டார விவசாயிகளும் பயனடைந்தனர்.
ஶ்ரீனிவாசனுக்கு கம்யூனிஸ்ட் மீது பற்று இருந்தது. இதனால், சீன நாட்டுக்கு செல்ல வேண்டுமென்பது அவரின் ஆசை. இரு முறை சீனாவுக்கு பயணமும் மேற்கொண்டார். பெய்ஜிங் நகரில் தியான்மென் சதுக்கத்தை பார்வையிட்டார். அப்போது, அங்கு வந்த சீன மக்களிடத்தில் ஶ்ரீனிவாசன் கம்யூனிசம் பற்றி கேட்க விருப்பப்பட்டார். அவர்களிடத்தில் நீங்கள் கம்யூனிஸ்டா?'என்று ஶ்ரீனிவாசன் கேட்ட போது, `இல்லை நான் புத்திஸ்ட் 'என்றே பதில் வந்துள்ளது. "பெரும்பாலான சீன மக்கள் கம்யூனிசத்தை விரும்பவில்லை. சிறு பிரிவினரே கம்யூனிசத்தை நம்புகின்றனர். நான் கேள்விப்பட்ட சீனா வேறு, ஆனால், நிஜத்தில் நான் கண்ட சீனா வேறு 'என்று இந்தியா திரும்பிய பிறகு ஶ்ரீனிவாசன் ஒரு பேட்டியில் சீனா பற்றி குறிப்பிட்டார்.
நடிகர் மோகன்லாலுடன் ஶ்ரீனிவாசனுக்கு நெருங்கிய நட்பு இருந்தது. ஒரு கட்டத்தில், இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில், ஶ்ரீனிவாசன் மோகன்லாலை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். தனது வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் மோகன்லாலை விமர்சித்ததற்காக ஶ்ரீனிவாசன் வருத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, ஹிருதயபூர்வம் படத்தின் படபிடிப்பு நடந்த இடத்துக்கே சென்று மோகன்லாலிடம் ஶ்ரீனிவாசன் மன்னிப்பு கேட்டார். அப்போது, மோகன்லால், `அதை விடு சீனி... அதை பற்றி பேச ஒன்றுமே இல்லை ` என்று ஆறுதல் கூறி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில், ஶ்ரீனிவாசன் உடல் நலம் குன்றிய நிலையில் பங்கேற்றார். அப்போது, மோகன்லால் ஶ்ரீனிவாசனுக்கு மேடையில் முத்தமிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.