Woman marries dead boyfriend AI Generated
செய்திகள்

இளைஞர் ஆணவக்கொலை: இறுதிச்சடங்கில் காதலி செய்த சம்பவம்!

காதலன் கொல்லப்பட்டதும், சடலத்தை எரிப்பதற்கு முன்பு காதலி செய்த செயலை கண்டு உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

எம். குமரேசன்

ஆணவக் கொலைகள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே பரவலாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல சட்டங்கள் போட்டும் அரசால் தடுக்க முடியவில்லை. சமீபத்தில் திருநெல்வேலியில் கவின் என்ற மென்பொருள் ஊழியர், அவரது காதலியின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சுர்ஜித்தின் தாய், தந்தை இருவரும் தமிழக போலீசில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சாதி மாறிக் காதலிப்பதால் மட்டும் ஆணவக் கொலைகள் நடப்பதில்லை. ஒரு சாதிக்குள் பிரிவு மாறி காதலித்தால் கூட ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற இளைஞர் தான் வசிக்கும் பகுதியில் பட்டியலினத்தில் வேறு பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு கடந்த ஜூன் 24ஆம் தேதி மதுரைக்குத் தன் உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு அழகேந்திரன் சென்றார். பின்னர், மதுரை வேளான்பூர் கண்மாய் அருகே அவரின் சடலம்தான் கிடந்தது. உறவினரின் வீட்டிற்கு சென்ற அவரை, பெண்ணின் சகோதரரான பிரபாகரன் அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டதாக அழகேந்திரனின் பெற்றோர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.

இப்படி, பல காரணங்களுக்காக ஆணவக் கொலைகள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில், மகாராஸ்டிராவில் நடந்த ஒரு ஆணவக் கொலையும் அதை தொடர்ந்து காதலி செய்த செயலும் மக்களை உருக வைத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நன்டெட் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சல். இவர் ஷாக்சம் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், ஆஞ்சலின் காதலுக்கு பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், ஆஞ்சல் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். காதலை கைவிட பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மிரட்டிப் பார்த்துள்ளனர். எந்த பலனும் இல்லை. இதையடுத்து, ஆத்திரமடைந்த ஆஞ்சலின் சகோரர்கள் காதலர் சாக்சமை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை சாக்சமை கடத்திச் சென்ற அவர்கள், அவரை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். பின்னர், தலையில் துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்துள்ளனர். அப்படியும் , வெறி அடங்காமல் தலையில் கல்லை போட்டு முகத்தையே நசுக்கி சிதைத்து விட்டனர். பின்னர், தப்பி ஓடி விட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆஞ்சலின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

காதலன் கொல்லப்பட்டதை அறிந்த ஆஞ்சல் கதறி அழுதார். பின்னர், தனது வீட்டை விட்டு வெளியேறிய அவர், காதலர் சாக்சம் வீட்டுக்கு வந்தார் . இறுதிச்சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது, தனது காதலரின் சடலத்துக்கு நெற்றியில் பொட்டு வைத்து, மாலை அணிவித்து கணவராக ஏற்றுக் கொண்டார். ஆஞ்சலின் செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்து விட்டது. ஆனாலும், யாரும் தடுக்கவில்லை.

பின்னர் , ஆஞ்சல் கூறுகையில், 'எனது காதலரை நான் இழந்து விட்டேன். ஆனாலும், எனது காதல் வென்று விட்டது. எனது பெற்றோரும், சகோதரர்களும் எனது காதல் முன்பு தோற்று விட்டனர். இனிமேல், சாக்சமின் வீட்டில் மருமகளாக வாழப் போகிறேன் 'என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மகாரஷ்டிர மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.