சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான்  
செய்திகள்

சவுதி அரேபியாவில் மேலும் இரு நகரங்களில் மது பார்; பின்னணி என்ன?

வுதி இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில், அராம்கோ நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள டகரான் நகரில் புதிய மது பார் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எம். குமரேசன்

சவுதி அரேபியா வளைகுடா நாடுகளில் பலம் பொருந்திய நாடு. உலகம் முழுக்க வாழும் இஸ்லாமிய மக்கள் புனிதபூமியாக கருதும் மெக்கா, மெதீனா இந்த நாட்டில்தான் உள்ளன. இதனால் ஆண்டுக்கு பல கோடி பேர் இந்த நாட்டுக்குப் புனித பயணம் மேற்கொள்கிறார்கள். அதோடு இந்த நாட்டில் மிகத் தீவிரமாக இஸ்லாமிய ஷரியத் சட்டம் பின்பற்றப்படுகிறது. இதனால், யாராவது குற்றமிழைத்தால் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது. மேலும் , சர்வசாதாரணமாக தூக்குத்தண்டனையும் இந்த நாட்டில் வழங்கப்படும். உலகிலேயே தூக்குத்தண்டனை அதிகம் விதிக்கப்படும் நாடு இதுதான். இந்த நிலையில், சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், சவுதி நாட்டில் தூக்குத்தண்டனை வழங்கப்படுவது படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அந்த நாட்டை மிகுந்த கட்டுப்பாட்டுடன் கூடிய நாடு என்ற பிம்பத்தில் இருந்து கொஞ்சம் மாற்றியமைக்க கொஞ்சம் மெனக்கெடுகிறார் என்றே சொல்லலாம்.

2034ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடரை நடத்தும் வாய்ப்பையும் இந்த நாடு பெற்றுள்ளது. இதற்காக, பிரமாண்ட மைதானங்களை கட்டும் பணியிலும் சவுதி அரசு ஈடுபட்டுள்ளது. அதோடு, நியாம் என்ற பிரமாண்ட நகரத்தை துபாய்க்கு நிகராகவும் சவுதி கட்டி வருகிறது. இந்த நகரின் கட்டுமானத்துக்காக மட்டும், 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை சவுதி அரேபியா செலவழிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், சவுதி அரேபியாவில் மற்றொரு விஷயமும் நடந்துள்ளது. அது, அந்த நாட்டில் முதன்முறையாக மதுக்கூடம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதுதான்.

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக சவுதி கட்டவுள்ள மைதானம்

சவுதி அரேபியாவில் கடந்த 1952ம் ஆண்டு மதுவுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. அந்த நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களுக்காக மதுக்கடைகளை திறக்க வேண்டுமென நீண்ட நாள் கோரி வந்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு ரியாத்தில் முதன்முறையாக மது பார் திறக்கப்பட்டது. இந்த பாரில், இஸ்லாமியர்கள் அல்லாத வெளிநாட்டுக்காரர்கள் மட்டுமே மது அருந்த முடியும். அதுவும், உயர் சம்பளம் வாங்கும் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே அனுமதியும் வழங்கப்பட்டது. வெளிநாட்டு இன்வெஸ்டர்ஸ், தொழில்முனைவோர்கள் இங்கு மது அருந்த முடியும்.

இந்த நிலையில், உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோ, தங்களின் வெளிநாட்டு ஊழியர்களுக்காக மதுபார் திறக்க வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தது. இதையடுத்து, சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில், அராம்கோ நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள டகரான் நகரில் புதிய மது பார் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் பணி புரியும் முஸ்லிம்கள் அல்லாத வெளிநாட்டவர் மது அருந்த அனுமதிக்கப்படுவார்கள்.

அதேபோல, தலைநகர் ரியாத்துக்கு அடுத்ததாக சவுதி அரேபியாவின் முக்கிய துறைமுக நகரம் ஜெட்டா. இந்த நகரில் ஏராளமான வெளிநாட்டுத் தூதரக அலுவலகங்கள் அமைந்துள்ளன. எனவே ஜெட்டாவிலும் மதுபார் தொடங்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருந்தது. தொடர்ந்து, ஜெட்டாவிலும் மதுபாரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் 2026ம் ஆண்டு இந்த இரு நகரங்களிலும் மது பார் செயல்பட தொடங்கும். இது குறித்து, அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் ராய்ட்டர்ஸ் நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

2034ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் போது, லட்சக்கணக்கான ரசிகர்கள் சவுதி அரேபியாவுக்கு வருவார்கள். அந்த ரசிகர்களுக்கும் மது விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 2017ம் ஆண்டுதான் சவுதிஅரேபியாவில் முதன்முறையாக பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.