துபாயில் உள்ள அல் மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 17-ம் தேதி முதல் விமான கண்காட்சி நடந்து வந்தது . கடைசி நாளான (நவ.21) இந்திய விமானப் படையின் தேஜாஸ் விமானத்தின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியைக் காண ஏராளமானோர் கூடியிருந்தனர்.
ஹெச்.ஏ.எல் நிறுவனத்தால், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானமான தேஜாஸ், தனது முதல் விமானத்தைக் கடந்த 2001, ஜனவரி 4-ம் தேதி தொடங்கியது. ஒற்றை எஞ்சின் கொண்ட இந்த உள்நாட்டுப் போர் விமானத்துக்கு அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ‘தேஜாஸ்’ என பெயர் சூட்டினார்.
இந்தியாவின் பெருமைமிகு அடையாளமாக தேஜாஸ் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் துபாயில் நடந்த கண்காட்சியின்போது, திடீரென்று தேஜாஸ் விமானம் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தை ஓட்டிய விமானியால், விமானத்தை விட்டு வெளியேறி உயிர் தப்பிக்க முடியவில்லை.
விமானத்தை இயக்கிய இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விங் கமாண்டர் நமன்ஸ் சியால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடந்த பாகங்களை ஆய்வு செய்த மீட்புக் குழுவினர், விமானத்தின் மிக முக்கியப் பாகமான கறுப்பு பெட்டியும் மீட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தேஜாஸ் விமானத்தின் இரண்டாவது விபத்து ஆகும். இதற்கு முன், கடந்த 2024 மார்ச் மாதத்தில் ஜெய்சல்மாரில் தேஜாஸ் விபத்தில் சிக்கியது. அப்போது, விமானி பாதுகாப்பாக வெளியேறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் பலியான விங்கமாண்டர் நமன்ஸ் சியால் உடல் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு துபாயில் இருந்து கொண்டு வரப்பட்டது. அங்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், இமாச்சல் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பலியான விமானிக்கு மனைவியும், ஐந்து வயதில் மகளும் உள்ளனர்.
விங்கமாண்டர் நமன்ஸ் சியால் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் காவாஜா ஆஷிப்பும் பாகிஸ்தான் சார்பில் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, 'துபாய் விபத்தில் இறந்த இந்திய விமானப்படை வீரரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விமானத்தில் இருந்து பைலட் வெளியேற முடியாமல் போனது துரதிரஷ்டவசமானது. குரானின் வார்த்தைகளின்படி, எந்த ஒரு துயரமான சம்பவத்தையும் பாகிஸ்தான் கொண்டாடுவதில்லை. துணிச்சல்மிக்க அந்த வீரருக்கு எனது சல்யூட். ' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Pakistan Strategic Forum என்ற பாதுகாப்புத்துறை அமைப்பும் இந்திய விமானியின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு தரப்பில் வெளியான இரங்கலில், 'ஒரு விமானியின் உயிரிழப்பு சர்வதேச விமானத்துறைக்கே நடந்த இழப்பாகும். இது நாடுகள், எல்லைகளை கடந்து பார்க்க வேண்டிய விஷயம். விபத்தில் பலியான விமானியின் குடும்பத்தாருக்காக எப்போதும் நாங்கள் பிரார்த்தனை செய்வோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் தேஜாஸ் விமானத்துக்கு அடுத்ததாக, அமெரிக்காவின் எப் 16 விமான குழுவினர் தயாராக இருந்தனர். இந்தக் குழுவுக்கு ஃபெமா ஹீஸ்டர் என்பவர் தலைமை தாங்கியிருந்தார். இந்திய விமானம் விபத்தில் சிக்கியதையடுத்து, ஃபெமா ஹீஸ்டர் குழுவினர் சாகச நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இந்திய விமானி விபத்தில் பலியானதால், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த முடிவெடுக்கப்பட்டதாக ஃபெமா ஹீஸ்டர் பின்னர் தெரிவித்தார்.