நமது அண்டை நாடான இலங்கைக்கு பல வெளிநாட்டவர்கள் தனியாக சுற்றுப்பயணம் செல்வது உண்டு. அந்த வகையில், நியூசிலாந்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இலங்கைக்கு சுற்றலா சென்றுள்ளார். ஆட்டோ ரிக்ஷா ஒன்றை வாடகைக்கு எடுத்தபடி, இலங்கையைத் தனியாக சுற்றிப் பார்க்கத் தொடங்கியுள்ளார். அவரின் சுற்றுப்பயணத்தின் 4வது நாளில் இளம்பெண்ணின் ஆட்டோவை ஸ்கூட்டரில் ஓர் இளைஞர் பின் தொடர்ந்துள்ளார். பின்னர் ஆட்டோவை முந்தி சென்று மெதுவாக ஓட்டத் தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில், ஆட்டோவை மறித்து அந்த பெண்ணிடத்தில் அந்த இளைஞர் பேச்சு கொடுத்துள்ளார் .
பின்னர், நேரடியாகவே, பாலியல் உறவுக்கு அழைப்பு விடுக்கும் வண்ணம் செயல்பட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் அந்த இளைஞரை கண்டித்து அனுப்பியுள்ளார். பின்னர் அந்தப் பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், 'என்னிடத்தில் அந்த இளைஞர் அநாகரீகமாக நடந்து கொண்டார். முதலில் என்னிடத்தில் நன்றாக பேசிய அவர், பின்னர் அசிங்கமாக பேசத் தொடங்கினார். பார்வையும் வேறு மாதிரியாக இருந்தது. இதனால், நான் அவரிடத்தில் பேச விரும்பவில்லை. ஆனால், என்னிடத்தில் அவர் மோசமான நடந்து கொண்டார்' என்று கூறியிருந்தார். அதே வேளையில், இலங்கையில் தனக்கு பாசிடிவான அனுபவங்களும் கிடைத்தது. சில உள்ளுர் மக்கள் தன்னிடத்தில் கருணையுடனும் அன்புடனும் நடந்து கொண்டனர் என்றும் அந்த பெண் தான் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். இளம் பெண்ணின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து , இலங்கை போலீசார் அந்த 23 வயது இளைஞரை கைது செய்து 'தக்க நடவடிக்கை' எடுத்தும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
இலங்கை பொருளாதாரத்துக்கு சுற்றுலாதான் முக்கிய ஆணி வேராக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயைப் இலங்கை சுற்றுலா மூலம் ஈட்டியுள்ளது. உலகம் முழுவதுமிருந்து கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை 17 லட்சத்து 25,494 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்து 75 ஆயிரத்து 292 ஆகும். இலங்கைக்கு சுற்றுலா செல்பவர்களில் இந்தியர்கள்தான் அதிகம். இதற்கு இரு நாடுகள் இடையேயான ஆன்மிக, கலாச்சார, மத மற்றும் வரலாற்றுத் தொடர்புகள் முக்கியக் காரணங்களாகும்.
வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளிடத்தில் இலங்கை மக்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அந்த நாட்டு சுற்றுலாத்துறை அதிகாரிகள் அடிக்கடி வேண்டுகோள் விடுப்பார்கள். ஏனென்றால், இலங்கையின் கடற்கரைகளில் அடிக்கடி வெளிநட்டு பெண்கள் லோக்கல் மக்களால் பாதிப்புக்குள்ளாவது உண்டு. ஆனாலும், அதையும் மீறி இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. பொதுவாக, பெண்களின் உடைகளை பார்த்து, இலங்கை இளைஞர்கள் தவறாக நடந்து கொள்வதாக, அந்த நாட்டு சுற்றுலாத்துறையே தனது இணையதளத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டவர்கள் தனியாக சுற்றுலா செல்ல ஏற்ற நாடு கிடையாது என்று அமெரிக்கா அரசு வெளிப்படையாகவே கூறியுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை, தீவிரவாதம், கண்ணிவெடிகுண்டு போன்றவை குறித்தும் தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது. பொதுப் போக்குவரத்தின் போது , திருட்டு அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்தல் நடக்கலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. எனவே, இலங்கையில் முன்பின் பழக்கம் இல்லாதவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.