இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ. 3 கோடி மதிப்புக்கு சொத்து உள்ளது. தன்னிடத்தில் நிலம், ஆடம்பர வீடு, சொகுசு கார்கள் என எதுவும் இல்லை என்று தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். சொத்துகள் எதுவும் இல்லையென்றாலும், பிரதமர் மோடி அணியும் ஆடைகளுக்காக பலமுறை எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டுள்ளார். ஒருமுறை காங்கிரஸ் தலைவரும் குஜராத் முன்னாள் முதல்வருமான அமர்சிங் சவுத்ரி , மோடி 250 ஜோடி உடைகள் வைத்திருந்தாக குறை கூறியிருந்தார். அப்போது, '250 கோடி திருடிய முதல்வர் வேண்டுமா அல்லது 250 ஜோடி உடைகள் வைத்திருக்கும் முதல்வர் வேண்டுமா?' என்று மக்களிடம் தான் கேட்டதாக மோடி கூறியதும் உண்டு. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் மோடி விலையுயர்ந்த ஆடைகளை அணிவதாக விமர்சித்திருந்தார்.
கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபமா இந்தியா வந்தார். அப்போது, அவருடன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி , மெல்லிய தங்க இலை டிசைனிலான கோடுகள் இடம் பெற்ற குர்தாஅணிந்திருந்தார். இந்த ஆடையில் தங்க நிறக் கோடுகளில் நரேந்திர மோடி, நரேந்திர மோடி என்ற எம்பிராய்டரி இடம் பெற்றிருந்தது. இந்த ஆடையின் விலை கிட்டத்தட்ட 10 லட்சம் என்று சொல்லப்பட்டது. பின்னர், இந்த ஆடை ஏலம் விடப்பட்டது. இதனை, குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ. 4.31 கோடிக்கு ஏலம் எடுத்தார். உலகில் அதிக விலைக்கு ஏலம் போன ஆடை என்கிற வகையில், இது கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றது. ஏலத் தொகையும் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன், ஒரு முறை மோடியிடத்தில் அவர் அணியும் ஆடைகளின் பிராண்ட் பற்றி கேட்டபோது, “பிராண்ட் என்றால் என்ன? அது பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. எனது அரசியல் வாழ்க்கையையும் அன்றாடப் பணிகளையும் மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராகவும், 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்து வருகிறேன். ஆனால், எனது 100 வயது தாயார் தனது கடைசி நாட்களை அரசு மருத்துவமனையில் கழித்து வருகிறார்' என்று பதில் அளித்திருந்தார்.
பிரதமர் மோடி அணியும் ஆடைகள் போலவே, தற்போது அவர் அணியும் கைக்கடிகாரமும் இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, பிரதமர் ஜெய்ப்பூர் வாட்ச் கம்பெனி தயாரித்துள்ள 'ரோமன் பாக்' என்ற கைக்கடிகாரத்தை அணிந்துள்ளார். இந்த கைக்கடிகாரத்தின் விலை 66 ஆயிரம் ஆகும். இதன், டயல் பகுதியில் கடந்த 1947ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் அச்சடித்த கடைசி ஒரு ரூபாய் நாணயம் இடம் பெற்றுள்ளது சிறப்பம்சம் . அதோடு, புலி ஒன்று நடப்பது போன்ற உருவமும் இடம் பெற்றிருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்று வீறு கொண்டு நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் பிரிட்டிஷார் கடைசியாக அச்சடித்த 1 ரூபாய் நாணயமும் , புலி படமும் இந்த கைக்கடிகாரத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜெய்ப்பூர் வாட்ச் கம்பெனி தெரிவித்துள்ளது. இதனால் பிரதமர் மோடி சென்டிமென்டால் ஈர்க்கப்பட்டு இந்த கைக்கடிகாரத்தை விரும்பி அணிவதாகச் சொல்கிறார்கள்.
இந்தியாவில் ஜெய்ப்பூர் வாட்ச் கம்பெனி விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. 2016ம் ஆண்டு கவரவ் மேத்தா என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பழங்காலப் பொருட்களைப் பயன்படுத்தி வாட்ச்சுகளை தயாரிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அமிதாப்பச்சன் போன்ற பிரபலங்களும் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை விரும்பி வாங்கும் வாடிக்கையாளர்கள்.