ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே நடைபெறும் புஷ்கர் விழா, இந்தியாவின் மிகப்பெரிய கால்நடைத் திருவிழாக்களில் ஒன்று. இது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் , நவம்பர் மாதங்களில் புஷ்கர் ஏரிக்கரையில் நடைபெறும். ஒட்டகங்கள், குதிரைகள், மாடுகள் போன்ற கால்நடைகளின் விற்பனை இங்கு களை கட்டும். இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான கால்நடை வியாபாரிகள் ஒட்டகங்கள், குதிரைகள், எருமைகள் மற்றும் ஆடுகளை வாங்கவும் விற்கவும் இங்கு கூடுவார்கள். கல்பெலியா நடனம், உள்ளூர் கைவினைப்பொருட்கள் விற்பனை, இசை நிகழ்ச்சிகள் மற்றும் நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெறும். இங்கு நடைபெறும் ஒட்டகப் போட்டியும் மக்களை வெகுவாகக் கவரும்.
இந்த ஆண்டுக்கான புஷ்கர் விழா கடந்த அக்டோபர் 23 ம் தேதி தொடங்கியது. இதில், பங்கேற்க 3,000 குதிரைகள் மற்றும் 1,300 ஒட்டகங்கள் உட்பட 4,300-க்கும் மேற்பட்ட விலங்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. சண்டிகரைச் சேர்ந்த தொழிலதிபர் கேரி கில் என்பவரின், 'ஷபாஸ்' என்ற குதிரை, 15 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கில் என்பவர் வளர்க்கும், 'அன்மோல்' எனும் ஆண் எருமை, 23 கோடி ரூபாய் என கூறப்பட்டது. இந்த எருமை 1,500 கிலோ எடை கொண்டது. தினமும் 20 முட்டைகள், உலர் பழங்கள், பசுந்தீவனங்களை அன்மோல் உண்ணும். தினமும் ஆயில் மசாஜூம் இதற்கு செய்யப்படும்.
இங்கு அழைத்து வரப்படும் சில குதிரைகள், இனப்பெருக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை, உரிமையாளர்கள் விற்பதில்லை. ஆனால், குதிரைகள் விற்பனைக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி. அமலில் உள்ளது. மற்ற விலங்குகள் விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதால் அவற்றுக்கு ஜி.எஸ்.டி வரி இல்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு புஷ்கர் விழாவில் ஒரு மிகப் பெரிய சோகம் நிகழ்ந்து விட்டது . கடந்த வெள்ளிக்கிழமை கண்காட்சியில் பங்கேற்ற 21 கோடி ரூபாய் மதிப்புள்ள எருமை மாடு திடீரென்று சுருண்டு விழுந்தது. தகவல் கிடைத்ததும் கால்நடை மருத்துவர்கள் இந்த எருமையை காப்பாற்றப் போராடினர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனது. இந்த கண்காட்சியின் முக்கிய அடையாளமாக இருந்த எருமை மாடு இறந்து போனதால், நிகழ்ச்சி அமைப்பாளர்கள், மக்கள் கடும் வேதனையடைந்தனர். இது தொடர்பான , வீடியோவும் வெளியாகி வைரலானது.
தற்போது, இந்த எருமை திடீரென்று இறந்து போனதற்கான காரணங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று இந்த எருமையின் உரிமையாளர் அதன் எடையை அதிகரித்து காட்டுவதற்காக அதிகப்படியான உணவுகளை கொடுத்துள்ளார். எடையை அதிகரிப்பதற்காகவும் அதிக விந்து உற்பத்தியாவதற்கும் ஊசி வழியாக மெடிசின்களை செலுத்தியுள்ளார். இதன் காரணமாக, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு எருமை மாடு இறந்து போனது தெரிய வந்துள்ளது.
இந்தத் தகவல் வெளியானதையடுத்து, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 'அதிகப்படியான ஆண்டிபயோடிக் மருந்துகளை கொடுத்தது தவறு. இயற்கைக்கு மாறாக செய்யும் எதுவுமே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மனிதர்கள் நோயுற்ற சமூகமாக மாறியது போல, கால்நடைகளையும் மாற்றுகின்றனர்' என பிரபல நடிகை ஸ்னேகா உல்லல் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இன்னும் சிலர் , 'வர்த்தகம் என்ற பெயரில் மிருகவதை நடைபெற்றுள்ளது. இன்சூரன்ஸ் பணத்துக்காக இந்த எருமை கொல்லப்பட்டிருக்கலாம் 'என்றும் கூறுகின்றனர்.
எது எப்படியோ, அநியாயமாக ஒரு உயிர் மனிதர்களின் அலட்சியத்துக்கு பலியாகியிருக்கிறது என்பது மட்டும் நிச்சயமான உண்மை.