இந்திய விமானப் படையின் ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அக்.29ம் தேதி பறந்தார். ஹரியானாவின் அம்பாலா விமான படை தளத்திற்கு நேற்று வந்த திரெளபதி முர்மு, அங்கு தயாராக இருந்த ரஃபேல் போர் விமானத்தில் ஏறினார். சிறிது நேரத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் அந்த ரஃபேல் போர் விமானம் வானில் சீறிப் பாய்ந்தது. இமயமலை, பிரம்மபுத்திரா நதி போன்ற பகுதிகள் மீது அவர் பயணித்த விமானம் பறந்தது . சுமார், 30 நிமிடங்களுக்கு பிறகு முர்முவுடன் ரஃபேல் விமானம் தரையிறங்கியது. முன்னதாக, சுகோய் 30 எம்.கே.ஐ விமானத்தில் முர்மு பறந்துள்ளார்.
விமானத்தில் பறப்பதற்கு முன்பு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராணுவ உடை (flight suit) அணிந்து, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். ரஃபேல் விமானத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 2,222 கிமீ. தரையிறங்காமல் 3,700 கி.மீ தொலைவு பறக்கும் திறன் கொண்டது. .ரஃபேல் விமானம் ஒரே நேரத்தில் வான்வழிப் போர், தரைவழித் தாக்குதல், மின்னணு ஜாமிங் மற்றும் அணுசக்தித் தாக்குதல் பணிகள் போன்ற செயல்பாடுகளைச் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அம்பாலா விமானப்படை தளத்தில் குடியரசுத் தலைவர் முர்மு சில விமானப்படை வீரர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். அவர்களில் ஒருவர்தான் ஸ்குவாட்ரன் லீடர் ஷிவாங்கி சிங். இவர்,வேறு யாருமல்ல... ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியாவின் 6 ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து குதித்த இந்திய பெண் விமானி ஷிவாங்கி சிங்கை பிடித்து வைத்திருப்பதாகவும் அந்த நாட்டு ராணுவம் கூறியது. பாகிஸ்தான் மீடியாக்களும் பல்வேறு புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு , அந்த நாட்டு மக்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தன. உச்சக்கட்டமாக, இந்திய விமானப்படைத் தளபதி ஷிவாங்கி சிங்கின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறுவது போல ஜோடிக்கப்பட்ட புகைப்படங்களையும் பாகிஸ்தான் மீடியாக்கள் வெளியிட்டன. அப்படி, பாகிஸ்தான் பிடித்து வைத்திருந்ததாக கூறிய அதே ஷிவாங்கி சிங்குடன்தான் அம்பாலாவின் இந்திய குடியரசுத் தலைவர் முர்மு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படத்தின் வழியாக பாகிஸ்தான் கூறிய தகவல்கள் பொய் என்பது தெரிய வந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த 29 வயதான ஷிவாங்கி சிங், 2017 ஆம் ஆண்டு விமானப்படையில் பெண் போர் விமானிகளின் ஒரு பகுதியாக சேர்ந்தார். 2020 ஆம் ஆண்டு ரஃபேல் பிரிவுக்கு மாற்றப்படுவதற்கு முன்பு, ஷிவாங்கி சிங் மிக்-21 பைசனை ஓட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஃபேல் விமானத்தை ஓட்டும் ஒரே இந்தியப் பெண் விமானி இவர்தான்.
முன்னதாக, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அப்போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் மிக் -21 பைசன் விமானத்தை கொண்டு பாகிஸ்தானின் எப்- 16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார். பாகிஸ்தான் எல்லைக்குள் நடந்த இந்த dogfight- ல் அபிநந்தனின் மிக்- 21 விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட அபிநந்தன் பின்னர், விடுவிக்கப்பட்டார். இதே, அபிநந்தனிடம்தான் ஷிவாங்கி சிங் பயிற்சி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்திய விமானப்படையில் 1,600 பெண் அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் பணியாற்றுகின்றனர். அவர்களில் சுமார் 50 பேர் வரை பைலட்டுகளாக உள்ளனர்.