Skytrax என்பது, உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் தரவரிசை, மதிப்பீடு மற்றும் விருது வழங்கும் விமானப் போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனம். பிரிட்டிஷைச் சார்ந்த இந்த நிறுவனம் உலகம் முழுக்கவுள்ள விமான நிலையங்களை ஆய்வு செய்து, உலகின் சுத்தமான விமான நிலையங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது. இது, விமானப் போக்குவரத்துத் துறையில் மிக முக்கியமான விருதாகக் கருதப்படுகிறது. கடந்த 2025 ம் ஆண்டுக்கான சுத்தமான விமான நிலையங்களின் பட்டியலை ஸ்கை ட்ராக்ஸ் நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் பத்தில் 9 இடங்களை ஆசிய நாட்டு விமானநிலையங்கள் பெற்றுள்ளன. முதலிடத்தை டோக்கியோவின் ஹனீடா விமான நிலையம் பிடித்துள்ளது. டோக்கியோ சர்வதேச விமான நிலையம் என்றும் இது அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறும் இந்த விமான நிலையம், நான்காவது இடத்தில் இருந்து, தற்போது, ஐந்து நட்சத்திர புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. ஜப்பானின் முன்னணி விமான நிறுவனங்களான ஜப்பான் ஏர்லைன்ஸ், ஏர் நிப்பான் ஏர்வேஸ் இந்த விமான நிலையத்தில் இருந்து உலகம் முழுக்க சேவைகளை வழங்குகின்றன.
மூன்று டெர்மினல்கள் கொண்டுள்ள இந்த விமான நிலையம், 94 ஆண்டு காலம் பழமையானது. ஆனால், உலகிலேயே அதி நவீனமானது. கழிவறைகள் தங்களை தாங்களே சுத்தப்படுத்திக் கொள்ளும் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சுத்தமான விமான நிலையங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உள்ளது. மூன்றாவது இடத்தில் தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையமும் நான்காவது இடத்தில் சியோலின் இன்ஷியான் விமான நிலையமும் உளளன. அடுத்தடுத்த இடங்களில் ஹாங்காங், ஜப்பானின் சென்ட்ரைர் நகோயா,டோக்கியோவின் நரிதா, ஜப்பானின் கன்சாய் , தைவானின் தையூன், சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையங்கள் இருக்கின்றன.
முதல் 10 இடங்களுக்குள் ஐரோப்பா கண்டத்தில் இருந்து ஒரே ஒரு விமான நிலையம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மற்றவை, அனைத்தும் ஆசிய விமான நிலையங்கள்தான். அதேபோல, அமெரிக்காவில் இருந்தும் முதல் 10 இடங்களுக்குள் எந்த விமான நிலையமும் இடம் பெறவில்லை.
அதேவேளையில், ஒட்டு மொத்தமாக சிறந்த விமான நிலையங்கள் பட்டியலும் Skytrax வெளியிட்டுள்ளது. சுத்தம் மட்டுமல்லாது, விமானப்பயணத்தின் போது பயணிகளை எந்த விதமான மன உளைச்சலுக்கும் உள்ளாக்காமல் மகிழ்ச்சியுடன் விமானம் ஏற்றி வைப்பது, பயணிகளுக்கு உதவுவது, பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சியான மனநிலையை அளிப்பது, சுவைமிகுந்த உணவுகளை வழங்கும் உணவகங்களை கொண்டிருப்பது, விமானப் பயணிகளுக்கு நல்ல ஷாப்பிங் அனுபவத்தைக் கொடுக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் வளாகம் என பல தரவுகளின் அடிப்படையில் இந்த விருது அளிக்கப்படுகிறது. அதன்படி, சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆம்ஸ்ட்ராங், மாட்ரிட், ஷென்ஷென், நியூயார்க் ஜான் எப். கென்னடி விமான நிலையங்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.
இவை தவிர பல பிரிவுகளிலும் விமான நிலையங்கள் தர வரிசைப் படுத்தப்பட்டிருக்கிறன. சிறந்த உள்நாட்டு விமான நிலையங்கள், சிறந்த விமான சேவை வழங்கும் நிறுவனங்கள், சிறந்த ஷாப்பிங் அனுபவம் தரும் விமான நிலையம், பாதுகாப்பான விமான நிலையம், சிறந்த உணவகங்கள் இருக்கும் விமான நிலையம் என்று பல பிரிவுகள் அத்தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன, இதில் எந்த இந்திய விமான நிலையங்களும் இல்லையா என்று Skytrax இணையதளத்தில் சென்று தேடிய போது , நமது டெல்லி விமானநிலையத்தின் பெயர் ஒரு பிரிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. உலகில் ஆண்டுக்கு 7 கோடிக்கும் மேல் பயணிகளை கையாளும் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் 8வது இடத்தில் டெல்லி விமான நிலையம் இருந்தது.
கோவாவில் கடந்த 2022ம் ஆணடு திறக்கப்பட்ட மனோகர் விமான நிலையம், தெற்காசியாவின் கிளீனஸ்ட் விமான நிலையமாக ஸ்கைட்ராக்ஸ் தேர்வு செய்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் ஸ்கை ட்ராக்ஸ் நிறுவனம் உலகின் சிறந்த விமான சேவை நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில், கத்தார் ஏர்வேஸ் முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து, 9வது முறையாக இந்த நிறுவனம் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இரண்டாவது இடத்தைப் பெற்றது. கத்தே பசிஃபிக் , ஏமிரேட்ஸ், ஆல் நிப்பான் ஏர்வேஸ், டர்கிஸ் ஏர்வேஸ், கொரியன் ஏர், ஏர் பிரான்ஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ் அடுத்தடுத்த இடங்களை பெற்றிருந்தன. இதில், டர்கிஸ் ஏர்லைன்ஸ் ஐரோப்பாவின் சிறந்த விமான சேவை நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. ஆப்பிரிக்காவின் சிறந்த விமான சேவை நிறுவனமாக தொடர்ந்து 7வது முறையாக எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் அறிவிக்கப்பட்டது.
இது தவிர சிறந்த ஸ்டார்ட் அப் விமான நிறுவனம், அதிக வளர்ச்சி பெறும் விமான நிறுவனம், குறைந்த செலவில் விமான பயணம் தரும் நிறுவனம் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.