People waiting in Railway Ticket counter AI GENERATED
செய்திகள்

பயணத் தேதியை மாற்ற வேண்டுமா? IRCTC-யின் புதிய அறிமுகம்!

பயணத் தேதியை மாற்ற வேண்டுமா? இனி டிக்கெட் கேன்சல் செய்ய வேண்டாம். மாறாக மாற்றுத் திட்டத்தை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே.

எம். குமரேசன்

கடந்த சில ஆண்டுகளாக இந்திய ரயில்வே துறை நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. நாட்டில் ரயில்வே பாதை அமைக்க முடியாது என்று கருதப்பட்ட இடங்களுக்கு கூட பாதை அமைத்து ரயில்கள் சென்று வருகின்றன. சமீபத்தில் மிசோரமின் தலைநகர் ஐஸ்வாலை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் புதியதாக 51.38 கி.மீ. ரயில் பாதை அமைக்கப்பட்டது. பிரமாண்டமாக, பிரமிக்கும் வகையிலான பாலங்கள் நாட்டின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஜம்மு காஷமீரிலுள்ள செனாப் பாலம் உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள ரயில்வே பாலமாக பார்க்கப்படுகிறது. இந்திய ரயில் பாதைகள் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் மின்மயமாக்கப்பட்டு விட்டது. மேட்டுப்பாளையம்- உதகை போன்ற பாரம்பரிய ரயில்களே, நிலக்கரி அல்லது டீசல் இன்ஜீன்களில் இயங்கி வருகின்றன.

வந்தேபாரத் போன்ற ரயில்கள் நாட்டின் பல பகுதிகளில் ஓட தொடங்கியுள்ளன. அதோடு, வந்தேபாரத் ஸ்லீப்பர் வகை ரயில் பெட்டிகளை தயாரிக்க இந்தியா வெளிநாடுகளுட்ன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, ரஷ்யாவின் கைனெட் ரயில்வே சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இந்திய ரயில்வே ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் இந்திய ரயில்வேக்காக 1,920 ஸ்லீப்பர் வந்தே பாரத் பெட்டிகளை உற்பத்தி செய்து தரும். விரைவில், வந்தேபாரத் ரயில் 200 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும். தற்போது, இந்த ரயில்கள் அதிகபட்சமாக 180 கி.மீ வேகத்தில் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ரயில்வேயின் உச்சபட்ச சாதனையாக மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் புல்லட் ரயிலும் ஓட தொடங்கும்பட்சத்தில் , இந்திய ரயில்வேயின் முகம் முற்றிலும் மாறி விட வாய்ப்புள்ளது.

இப்படி, இந்திய ரயில்வே பல முன்னேற்றங்களை கண்டு வரும் நிலையில், மற்றொரு முக்கிய மாற்றத்தை இந்திய ரயில்வே துறை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. சமீபத்தில் , ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "ரயில்வே பயணிகள் பயணத் தேதியை மாற்ற வேண்டுமென்றால், தாங்களாகவே ஆன்லைனில் பயணத் தேதியை மாற்றிக் கொள்ளலாம்" என்று அறிவித்திருந்தார். இது அடிக்கடி ரயில் பயணம் மேற்கொள்ளும் மக்களின் வயிற்றில் பால் வார்க்கும் தகவலாக பார்க்கப்பட்டது. இந்தப் புதிய முறை, 2026 ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

Happy Customers

இது நாள் வரை, ரயில் பயணிகள் பயணத் தேதியை மாற்ற நேர்ந்தால், ஏற்கனவே புக் செய்திருந்த டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டு, மாற்று தேதியில் பயணத் தேதியை பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. இதனால், பயணிகளுக்கு பண விரயமும் ஏற்பட்டது. இந்தப் புதிய முறையில், பயணிகளுக்கு பண விரயம் ஏற்படாது. வழக்கமாக விமானங்களில் பயணிக்கும் போது, தேதியை மாற்றினால், கூடுதல் பணம் செலுத்த வேண்டியது இருக்கும். ஆனால், இந்திய ரயில்வேயில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மாற்றுத் தேதியில் இருக்கும் டிக்கெட்டுகளின் அடிப்படையில்தான் டிக்கெட்டுகள் ஒதுக்கி தரப்படும். ஒருவேளை, மூன்றாம் வகுப்பில் நீங்கள் பதிவு செய்து, அந்த வகுப்பில் மாற்றுத் தேதியின் டிக்கெட் இல்லையென்றால், இரண்டாம் வகுப்பில் மாற்றி எடுத்துக் கொள்ள முடியும். அதற்கான, கூடுதல் கட்டணங்களை செலுத்த வேண்டியது இருக்கும். உறுதியாக நீங்கள் கேட்கும் தேதியில் டிக்கெட் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது.

இதற்காக, இந்திய ரயில்வே மொபைல் ஆப், மற்றும் இணையதளம் ஒன்றை விரைவில் அறிவிக்கிறது. வரும் ஜனவரி மாதம் முதல் இந்த ஆப், இணையதளம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தெரிகிறது.