Man afraid of Snake AI GENERATED
செய்திகள்

"ஐயா, என் மனைவி இரவானா நாகப்பாம்பாகிடறாங்க!" - அதிர்ச்சி சம்பவம்

மனைவி மீது கணவர் சொன்ன புகாரால் ஆடிப் போன மக்கள்.

எம். குமரேசன்

வாழ்க்கையில் மனைவியால் கணவருக்கு டார்ச்சர், கணவரால் மனைவிக்கு டார்ச்சர் என பல விஷயங்களை கேள்விபட்டுள்ளோம். அவ்வளவு ஏன் பல நேரங்களில் சின்னச் சின்ன சண்டை சச்சரவுகள்கூட விவகாரத்துக்கு வித்திட்டு விடும். அந்த வகையில், தன்னை மனதளவில் மனைவி கொடுமைப்படுத்துவதாக இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் வரை சென்று புகார் கொடுத்ததுதான் இப்போது, உத்தரபிரதேசத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

வழக்கமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மக்கள் தங்கள் பிரச்னைகளை மனுவாக கொடுப்பது உண்டு. தண்ணீர் இல்லை, சாலை சரியில்லை, மின்சாரம் இல்லை என்றுதான் பெரும்பாலும் அந்தப் புகார்களில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால், கணவர் ஒருவர் தனது மனைவி இரவானதும் பாம்பாக மாறி விடுவதாக புகார் மனு கொடுத்ததால் மாவட்ட ஆட்சியரே ஆடிப் போய் விட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று (அக்.6) நடைபெற்றது. அப்போது, மக்மூதாபாத் பகுதியை சேர்ந்த மேரஜ் என்ற இளைஞர் ஆட்சியரிடத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரில், "எனது மனைவி இரவு நேரத்தில் நாகப்பாம்பாக மாறி கடித்து கொல்ல முயல்கிறார்" என்று பரிதாபமாகக் கூறியிருந்தார்.

மற்றவர்கள் மேரஜின் புகாரை காமெடியாக பார்த்தாலும் மாவட்ட ஆட்சியர் சற்று சீரியசாகவே பார்த்தார். உடனடியாக,மேலதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை செய்யவும் உத்தரவிட்டார். மேரஜிடம் இருந்து எழுத்துபூர்வமாகவும் புகார் வாங்கப்பட்டது.

ஆட்சியரை சந்தித்து விட்டு வெளியே வந்த பிறகு, செய்தியாளர்களிடத்தில் மேரஜ் கூறுகையில், "எனது மனைவி பல முறை என்னை கடித்துக் கொல்ல முயன்றுள்ளார். ஒவ்வொரு முறையும் நான் கண் விழித்ததால், பிழைத்துக் கொண்டேன். என்னை மனதளவில் மிகுந்த கொடுமைப்படுத்துகிறார். எந்த நேரத்திலும் என் மனைவி என்னைக் கொல்லலாம். ஏற்கனவே ஒருமுறை என் மனைவி என்னைக் கடித்து வைத்துள்ளார்" என்று பயத்துடன் தெரிவித்தார்.

மேரஜின் இந்த பேட்டி உடனடியாக எக்ஸ் தளத்தில் வைரலாக பரவியது. இதையெடுத்து, பலரும் அவரின் பேட்டி பதிவின் கீழ் ஜாலியாக கமெண்ட் செய்துள்ளனர். அதில், ஒருவர், 'நீங்கள் அவரின் நாகமணியை எடுத்து மறைத்து வைத்து விட்டீர்களா? என்று கேட்டுள்ளார். மற்றொருவர் , 'உங்கள் மனைவி போல நீங்களும் பாம்பாக மாறி விடலாமே" என்று அட்வைஸ் கூறியுள்ளார்.

Nagina Movie Poster

இன்னெருவர் ஒரு படி மேலே போய், 'ஐயா... நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். உங்களுக்கு நடிகை ஸ்ரீதேவியே மனைவியாக கிடைத்துள்ளார்" என்று ஜாலியாக பதில் அளித்துள்ளார். கடந்த 1986ம் ஆண்டு வெளியான நாகினி படத்தில் நடிகை ஸ்ரீதேவி பாம்பாக மாறுவதை வைத்து இந்த நெட்டிசன் இப்படி கூறியிருக்கிறார்.

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்னை. மேரஜ்க்கு, அவரது 'மேரேஜே' பிரச்னையாக மாறி போனதுதான் விசித்திரமாக இருக்கிறது.