ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி 26 பொதுமக்களைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நடத்தியது. சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி மற்றும் இந்திய விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடத்தில் விளக்கமுடன் பேசினர். இது, இந்தியாவின் பாலின சமத்துவத்தை உலகுக்குக் காட்டுவதாகவும் இருந்தது. அதோடு, ராணுவத்தில் பணிபுரியும் பல நாட்டு பெண்களுக்கு முன்னுதாரணமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஐநா பொதுச்சபை கூட்டத்தில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சிந்தூர் ஆபரேஷன் குறித்து, திரித்துப் பேசினார். மே 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்த மோதலில் தாங்கள் வெற்றி பெற்றதாக கூச்சமே இல்லாமல் பேசினார். இதற்கு ஐநா கூட்டத்தில் இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதரகத்தின் முதன்மை செயலாளர் பெட்டல் கெலாட் பேசியதாவது, " இந்த சபை காலையில் பாகிஸ்தான் பிரதமரிடமிருந்து பல அபத்தமான நாடகங்களைப் பார்க்க நேரிட்டது. மீண்டும் ஒருமுறை அவர் பயங்கரவாதத்தை பெருமைப்படுத்தினார்.
இந்தியப் படைகளால் பாகிஸ்தானின் பல விமானத் தளங்கள் அழிக்கப்பட்டது. அந்த சேதத்தின் படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு கிடைக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் கூறியது போல் அழிக்கப்பட்ட ஓடுபாதைகள் மற்றும் எரிந்த ஹங்கர்கள் வெற்றியாகத் தெரிந்தால், பாகிஸ்தான் அதை என்ஜாய் செய்யட்டும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு மன்றாடியது. மே 9 வரை, பாகிஸ்தான் இந்தியா மீது மேலும் பல தாக்குதல்களை நடத்துவதாக மிரட்டி வந்தது. ஆனால், மே 10 ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் சண்டையை நிறுத்துமாறு நேரடியாக எங்களிடம் கெஞ்சியது. போர் நிறுத்தத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் நாங்கள் இடம் கொடுக்கவில்லை. இந்தியப் படைகளால் பல பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் அழிக்கப்பட்டது. பஹாவல்பூர் மற்றும் முரிட்கே பயங்கரவாத முகாம்களில் இந்தியப் படைகளால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் புகைப்படங்களை அனைவருமே பார்த்தோம். ஒரு புகைப்படம் ஆயிரம் சொற்களுக்கு சமம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்கிறது. பாகிஸ்தான் பிரதமர் மிகவும் பொய்யான கதைகளை கூறுவது குறித்து எந்த வெட்கமும் படவில்லை.
கடந்த காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவது போல பாகிஸ்தான் நடித்து வந்துள்ளது.10 ஆண்டு காலமாக ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்ததை பாகிஸ்தான் மறுக்க முடியாது. அந்த நாட்டின் அமைச்சர்களே, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் பல ஆண்டுக்காலமாக இயங்கி வருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
அணுசக்தி மிரட்டலின் கீழ் பயங்கரவாதத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. உலகிற்கு இந்தியா தெளிவாக ஒன்றைக் கூறுகிறது. பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறார். அதற்கான பாதை திறந்தே இருக்கிறது. அப்படியென்றால், அனைத்து தீவிரவாத முகாம்களையும் பாகிஸ்தான் உடனடியாக மூட வேண்டும். இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும்."
இவ்வாறு பதிலடி கொடுத்தார்.
களத்தில் மட்டுமல்ல பல நாட்டு தலைவர்கள் நிறைந்த சபையிலும் இந்தியாவின் பெண் தூதர் கொடுத்த பதிலடியால் பாகிஸ்தான் பதில் சொல்ல முடியாமல் திணறுவதாகத்தான் பார்க்க முடிகிறது.