ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் - நேற்று - செப்டம்பர் 25ஆம் தேதி துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் – வங்கதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 135/8 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 124 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப் 28) நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி சந்திக்கிறது.
ஆசிய கோப்பை தொடர் கடந்த 41 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 17 முறை நடந்த இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் ஒரு முறை கூட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதியதில்லை. இதனால், இந்த இறுதிப் போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. நடப்பு ஆசிய கோப்பை தொடரில், ஏற்கனவே பாகிஸ்தான் அணி லீக் மற்றும் சூப்பர் நான்கு சுற்று ஆட்டங்களில் இந்தியாவிடம் தோல்வியடைந்துள்ளது. இதனால், இறுதிப் போட்டியில் எப்படியாவது வென்று விட வேண்டுமென பாகிஸ்தான் வீரர்கள் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, பாகிஸ்தான் அணி நேற்று வங்க தேசத்தை தோற்கடித்ததும், அந்த அணியின் வீரர் ஹாரீஸ் ரவுப் ரசிகர்களுக்கு கை கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பாகிஸ்தான் ரசிகர் அவரின் கையை பிடித்துக் கொண்டு, இன்னோரு முறை இந்தியாவிடம் தோற்று விடக் கூடாது, நாம் யாரென்று காட்ட வேண்டுமென்று கூறி அவரிக் கையை பிடித்து கொண்டு உணர்ச்சி பெருக்கில் குமுறினார். கடைசியாக, கை எடுத்தும் கும்பிடவும் செய்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கடந்த 8 நாட்களில் இந்தியாவிடம் இருமுறை தோற்ற காரணத்தினால், பாகிஸ்தான் ரசிகர்கள் மனதளவில் கடுமையாக சோர்வடைந்துள்ளதையே இது காட்டுகிறது.
முன்னதாக, ஆசிய தொடரில் பாகிஸ்தான் அணியை இரண்டாவது முறை தோற்கடித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் சூரிய குமார் யாதவ், "பாகிஸ்தான் அணியெல்லாம் ஒரு எதிரியே கிடையாது" என்று பங்கம் செய்து விட்டார். இது வேறு பாகிஸ்தான் ரசிகர்களை கொந்தளிக்கச் செய்து விட்டது. இதன் காரணமாக, இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்று சந்தித்த அவமானத்தை போக்கிட வேண்டுமென அந்த அணியின் ரசிகர்கள் விரும்புகின்றனர்.
நடப்பு ஆசிய தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில்கூட தோல்வியடையாமல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டிக்குப் பிறகு, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது அணியின் வெற்றியை பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களுக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறியிருந்தார். இந்தக் கருத்துகள் "அரசியல் ரீதியானவை" என்று குற்றம் சாட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), ICC-யிடம் புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன், சூர்யகுமார் யாதவை "அரசியல் ரீதியாகக் கருதப்படும் கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று எச்சரித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் மீது பிசிபி புகார் அளித்ததால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) ஐசிசியிடம் புகார் ஒன்றைப் பதிவு செய்தது. கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி துபாயில் நடந்த சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஆகியோர் களத்தில் ஆத்திரமூட்டும் வகையில் சைகைகள் செய்தததாக புகாரில் சொல்லப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்தும் ஐ.சி.சி விசாரணை செய்து வருகிறது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக, பாகிஸ்தான் வீரர்களுக்கு தண்டனை அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.