இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே 2023ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருகிறது. காசாவில் மையம் கொண்டுள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், காசா கிட்டத்தட்ட அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 65 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அப்பாவி மக்கள் தினமும் உயிரிழந்து வருகின்றனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், 'ஹமாஸை ஒழிக்காமல் விடமாட்டோம்' என உறுதியாக நிற்கிறது இஸ்ரேல். அதனால், ஐ.நா-வின் தீர்மானத்தை சட்டை செய்யவே இல்லை. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சமரசம் செய்ய முயன்ற கத்தார் மீதும், இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இது, இன்னமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜி 20 உறுப்பு நாடுகளில், 13 நாடுகள் காசா போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்துள்ளன. தவிர, பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஆப்பிரிக்க ஒன்றியம், அணிசேராத இயக்கம் போன்றவையும் போரை முடிவுக்குக் கொண்டு வர கோரியுள்ளன. ஐ.நா அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில் 151 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. அப்படியிருந்தும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை. இஸ்ரேலின் நடவடிக்கை 'இனப் படுகொலை' எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, ஐநா-வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும், எதையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முடியாமல் அமெரிக்கா தனது வீட்டோ பவரால் தடுத்து வருகிறது. அமெரிக்காவின் முழு ஆதரவுடன்தான் இஸ்ரேல் காசாவில் போரை நடத்துவதாக கூறி வருகிறது. இதற்கிடையே, தான் 7 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறி, தனக்கு நோபல் பரிசு தர வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேறு காமெடி செய்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே, இஸ்ரேல் பிரதமர் மீது போர்க்குற்றம் செய்துள்ளதாக கூறி சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ராணுவ அமைச்சர் யாவ் கேல்லண்ட் ஆகியோரை போர்குற்றவாளிகளாக அறிவித்து வாரண்டும் பிறப்பித்துள்ளது. அயர்லாந்து நாடு தங்கள் எல்லைக்குள் நெதன்யாகு விமானம் வந்தால் கண்டிப்பாக கைது செய்வோம் என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டது. எனினும், நெதன்யாகு காசா மீதான தாக்குதலை கைவிடவில்லை.
இதற்கிடையே, ஐ.நா.வில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெதன்யாகு தனது தனி விமானமான விங்ஸ் ஆஃப் சீயோன் மூலம் நேற்று நியூயார்க் புறப்பட்டார். அப்போது, ஐரோப்பிய வான்வெளியை பயன்படுத்தாமல், மாற்று வான்வெளியை பயன்படுத்தி அமெரிக்க சென்றடைந்தார். சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் 125 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அவற்றில் பல, தங்கள் வான்வெளிக்குள் இஸ்ரேல் பிரதமர் வந்தால், கண்டிப்பாக கைது செய்வோம் என்று அறிவித்துள்ளன. இதன் காரணமாக ஐரோப்பிய வான்வெளியை நெதன்யாகுவின் விமானம் தவிர்த்துள்ளது. பிரான்ஸ் வான்வெளியை பயன்படுத்த நெதன்யாகுவின் விமானம் அனுமதி கேட்டுள்ளது. அனுமதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரான்ஸ் வான்வெளியை அந்த விமானம் பயன்படுத்தவில்லை.
நெதன்யாகுவின் ஜெட் விமானம் கிரீஸ் மற்றும் இத்தாலியின் எல்லைகளுக்குள் மட்டும் கொஞ்ச நேரம் பறந்துள்ளது. பின்னர், மத்திய தரைக் கடலைக் கடந்து ஜிப்ரால்டர் ஜலசந்தி, அட்லாண்டிக் வழியாக அமெரிக்கா சென்றுள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளின் வான்வெளியை பயன்படுத்தவே இல்லை. சதாரணமாக, அமெரிக்காவிற்குச் செல்லும் இஸ்ரேலிய விமானங்கள் பிரான்ஸ் வான்வெளி , மத்திய ஐரோப்பா வான்வெளியை முழுமையாக பயன்படுத்தி அமெரிக்கா செல்லும். மாற்று பாதை காரணமாக கிட்டத்தட்ட 600 கி.மீ சுற்றி நெதன்யாகுவின் விமானம் அமெரிக்கா சென்றுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்கும் நெதன்யாகு தொடர்ந்து, வாஷிங்டன் சென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்துப் பேசவுள்ளார்.