அனுராக் அனில் 
செய்திகள்

டாக்டராக விருப்பமில்லை- 99.99 மார்க் எடுத்த மாணவன் விபரீத முடிவு

நீட் தேர்வில் பாஸாக முடியவில்லை என்று பல மாணவர்கள் உயிரை மாய்க்க, மாணவன் அனில் மார்க் டாக்டராக விருப்பமில்லாமல் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

எம். குமரேசன்

இந்தியாவில், அதிக மாணவர் தற்கொலைகள் நிகழும் மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மத்திய அரசு வெளியிட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் 2022ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 13,044 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாட்டில் மட்டும் அதே காலக்கட்டத்தில் 1,416 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தானிலுள்ள கோட்டா நகரில் அதிகமான பயிற்சி மையங்கள் உள்ளன. இங்கு, ஏராளமான மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு தரப்படும் மன அழுத்தமே தற்கொலைக்கு காரணமென்றும் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

நீட் தற்கொலைகள், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலைகள், பெற்றோர் திட்டியது தாளாமல் இளஞ்சிறார்கள் தற்கொலை, காதல் விவகாரத்தால் நிகழும் தற்கொலை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ப்ளூவேல் ஆன்லைன் விளையாட்டின் காரணமாகத் தற்கொலை என பல்வேறு சூழல்களில் இந்திய மாணவர்கள் உயிரை மாய்க்கும் முடிவை எடுத்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில், நீட் தேர்வில் 99.9 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவர் ஒருவர் டாக்டராக விரும்பாத காரணத்தினால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூர் மாவட்டம் நவகிரான் நகரை சேர்ந்த மாணவர் அனுராக் அனில். 19 வயதான இவர் நீட் தேர்வில் 99.99 சதவிகித மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் ஓ.பி.சி பிரிவில் 1475வது இடம் பிடித்திருந்தார்.

ஆனால், அனுராக் அனிலுக்கு டாக்டராவதில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. கேராக்பூரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படிக்கவும் இடம் கிடைத்திருந்தது. எனினும் , குடும்பத்தினர் அவரை சமாதானம் செய்து கோரக்பூருக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 23ம் தேதி மாலை 4 மணியளவில் கோரக்பூர் செல்ல மறுத்து வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டார். வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த குடும்பத்தினர் அனுராக் சடலமாகத் தொங்குவதை கண்டு கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த நவகிரான் நகர போலீசார் மாணவரின் சடலத்தை மீட்டு உடற் கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

அனுராக்கின் வீட்டில் இருந்து தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், 'டாக்டராவதில் எனக்கு விருப்பம் இல்லை. 5 ஆண்டுகள் படிக்க வேண்டும். பின்னர், போஸ்ட் கிராஜூவேட் படிக்க வேண்டும். இதை விட பிசினஸ்மேனாக மாறினால் நன்றாக சம்பாதிக்கலாம்' என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும், இந்த கடிதத்தை போலீசார் வெளியிடவில்லை. டாக்டராக விரும்பாத காரணத்தினால் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக மட்டும் போலீசார் கூறியுள்ளனர்.

பொதுவாக, டீன் ஏஜ் பருவ மாணவர்களை அதுவும் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களை அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி படிக்க பெற்றோர் அனுமதிக்க வேண்டும். தங்களின் விருப்பத்தை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள் என்று மனதத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதையும் மீறி, தங்கள் விருப்பத்தை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிப்பதால், இது போன்ற துயரமான சம்பவங்கள் நடந்து விடுகின்றன.