கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலியை சேர்ந்தவர் பத்மகுமார். இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்தார். அந்தப் பூனைக்கு லல்லுக்குட்டி என்று பெயர் சூட்டியிருந்தார். பத்மகுமாரின் வீட்டில் ஒரு குழந்தை போல லல்லுக்குட்டி வளர்ந்தது. அதேவேளையில், இந்தப் பூனை பக்கத்தில் வசிக்கும் ஷாஜூ ஜோசப் என்பவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளது. இது, ஷாஜூ ஜோசப்புக்கு பிடிக்கவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை ஷாஜூ ஜோசப் வீட்டுக்குப் பூனை சென்றுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவர், ஏர் கன்னால் பூனையை சுட்டுள்ளார். முதுகில் படுகாயமடைந்த அந்தப் பூனை அங்கிருந்து தப்பி பத்மகுமார் வீட்டுக்குள் வந்துள்ளது.
ரத்தக்காயத்துடன் வீட்டுக்கு வந்த பூனையைப் பார்த்த பத்மகுமார் குடும்பத்தினர் பதறிப் போனார்கள். உடனடியாக, பூனையை, கக்கநாடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மருத்துவர்கள் சிகிச்சையளித்தும் பூனையைக் காப்பாற்ற முடியவில்லை. பரிதாபமாக இறந்து போனது. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பூனை ஏர் கன்னால் சுடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வேதனையடைந்த பத்மகுமார் குடும்பத்தினர் பூனையை வீட்டுக்கு கொண்டுவந்து தங்கள் வீட்டு வாளகத்திலேயே இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்தனர். பலியான பூனைக்கு ஒரு வயதுதான் ஆகியிருந்தது.
தொடர்ந்து, பத்மகுமார் தங்கள் பூனையை சுட்டுக் கொன்றதாக ஷாஜூ ஜோசப் மீது அங்கமாலி காவல் நிலையத்தில் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷாஜூ ஜோசப்பின் வீட்டில் ஆய்வு நடத்தினர். அப்போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏர்கன்னை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தனது பூனை குறித்து பத்மகுமார் கூறுகையில், "லல்லு குட்டி எங்கள் வீட்டிலுள்ள அனைவருடனும் பாசமாக இருக்கும். விளையாட்டுத்தனம் நிறைந்தது. குழந்தை போல நாங்கள் வளர்த்து வந்தோம். ஆனால், வன்மம் நிறைந்த மனிதர் ஒருவர் அதை கொன்று விட்டார் "என்கிறார் வேதனையுடன்.
வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளில் நாய்களும் , பூனைகளும் முதன்மையானது. கேரளா உள்பட இந்தியா முழுவதுமே நாய்கள் மனிதர்களை, குழந்தைகளை கடிப்பது பெரும் பிரச்னையாக பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டின் மட்டும் சுகாதாரத் துறை அளிக்கும் தகவலின்படி 2024-ஆம் ஆண்டில் மட்டும் ரேபிஸ் நோயால் 43 பேர் இறந்துள்ளனர். 2023-ஆம் ஆண்டில் 121 பேர் இறந்துள்ளனர். இது நாய்க்கடியால் ஏற்பட்ட இறப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, உச்சநீதிமன்றம் நாய்கள் தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
தற்போது, உத்தரபிரதேச மாநிலத்தில் நாய்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 'பொதுமக்கள் யாரையாவது தெருநாய் கடித்தால் அந்த நாயை உள்ளாட்சி நிர்வாகம் பிடித்து சென்று 10 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருந்து, பின்னர் விடுவிக்க வேண்டும். அப்படி, விடுவிக்கப்படும் தெருநாய் மீண்டும் மீண்டும் கடிக்கும் பட்சத்தில் அந்த நாய் நிரந்தரமாக முகாம்களில் அடைக்கப்படும். முகாம்களில் அடைக்கப்படும் தெருநாய்களை பொதுமக்கள் தத்து எடுத்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்படும். தத்து எடுப்பவர்கள் அந்த நாயை மீண்டும் தெருவில் விடமாட்டேன் என்று உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுக்க வேண்டும்' என்றும் உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், பூனைகளால் ரேபிஸ் பரவும் அபாயம் இருந்தாலும், பூனைகள் எப்போதாவதுதான் மக்களை கடித்து வைக்கும். நாய்களை போல கூட்டமாக சேர்ந்து , மக்களை கடிக்கும் பழக்கம் பூனைகளிடத்தில் இல்லை. ஆனாலும், பூனைக்குட்டி ஒன்றை பக்கத்து வீட்டில் வசிப்பவர் வன்மத்துடன் சுட்டுக் கொண்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.