இந்தியாவில் சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் கேரளாவும் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் முதன் முதலில் கார் விபத்து ஏற்பட்டதும் உயிர்பலி நடந்ததும் கேரளாவில்தான். கடந்த 1914ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி நடந்த கார் விபத்தில் கேரள காளிதாசன் தம்புரான் என்ற மன்னர் உயிரிழந்தார். இவர், பரப்பநாடு மன்னர் ஆவார். அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் பணக்காரர்கள் மட்டுமே கார்கள் வைத்திருப்பார்கள். அந்த வகையில், மன்னர் கேரள காளிதாஸ் தம்புரானும் கார் வைத்திருந்தார். எங்கு சென்றாலும் காரில் செல்வது மன்னரின் வழக்கமாக இருந்தது .
அந்த வகையில், ஹரிபாட் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு காரில் வந்து கொண்டிருந்த போது, வழியில் பாலம் என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. காரில் இருந்த 4 பேரில் காளிதாசன் தம்புரானுக்கு மட்டுமே பலத்த காயம் ஏற்பட்டது. டிரைவர், உதவியாளர் அவரின் உறவினர் லேசான காயத்துடன் தப்பி விட்டனர். பலத்த காயமடைந்த தம்புரான் மருத்துவமனையில் சிகிச்சை பலனிக்காமல் இரு நாட்கள் கழித்து இறந்து போனார். இந்தியாவில் நடந்த முதல் கார் விபத்தும் இதுதான். கார் விபத்துக்கு பலியான முதல் நபரும் தம்புரான்தான்.
அப்போது முதல் இப்போது வரை, கேரளாவில் விதவிதமாக விபத்துகள் நடக்கின்றன. ஆண்டுக்கு நிகழும் 40 ஆயிரம் சாலை விபத்துகளில் கேரளாவில் ஆண்டுக்கு 3 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் உயிரை இழக்கின்றனர். குறுகலாக சாலை, டிரைவர்களின் அதிவேகம், அஜாக்கிரதை, மது போதையில் வாகனங்களை ஓட்டுவதே விபத்துகளுக்கு மூலகாரணமென்று கூறுகிறார்கள். குறிப்பாக , கேரளாவில் குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இதை, கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், முடியாத நிலையே காணப்படுகிறது. இதற்கு, உதாரணமாக சமீபத்தில் கேரளாவில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது.
சமீபத்தில் கர்நாடகத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் டிராவல் ஏஜன்சியின் பேருந்து வந்துள்ளது. கேரளாவில் சுற்றுலாவை முடித்து விட்டு, பெங்களூருக்கு மீண்டும் பேருந்து புறப்பட்டுள்ளது. பேருந்தை எடுக்கும் போதே, டிரைவர் போதையில் இருந்ததாக தெரிகிறது. வழிக்கடவு அருகே குட்டியாடிசுரம் என்ற இடத்தருகே பேருந்து வந்த போது , அதிக போதையால் டிரைவர் இருக்கையிலேயே மட்டையாகி போனார். இதனால், அதிர்ச்சியடைந்த பயணிகள் தவிக்க தொடங்கினர். பேருந்தில் பெண்கள், குழந்தைகளும் இருந்தனர்.
தொடர்ந்து, திருநெல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து டிரைவரை அள்ளிக் கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அவரது ரத்தத்தில் அதிகளவில் மது கலந்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர், கிட்டத்தட்ட 5 மணி நேரம் கழித்தே மாற்று டிரைவர் அங்கு வந்து, பேருந்தை கர்நாடகத்துக்கு ஓட்டி சென்றார். அதுவரையில், பயணிகள் அதே பேருந்தில் தவித்தபடி இருந்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனம் கூறுகையில், 'பெங்களுருவை சேர்ந்த அந்த டிரைவர் தங்கள் பேருந்துக்கு மாற்று ஓட்டுநராக வந்தவர் என்றும் ரெகுலர் டிரைவர் இல்லை' என்றும் விளக்கம் அளித்துள்ளது.
எது எப்படி இருந்தாலும், டிரைவர்களைப் பற்றி முறையாக விசாரிக்காமல் , பேருந்தைக் கொடுத்து, பயணிகளில் உயிருக்கு வேட்டு வைக்கும் டிராவல் ஏஜன்சிகள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.