கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது கொல்லூர் மூகாம்பிகை கோவில். தேவி மூகாம்பிகை இங்கு சக்தி தேவதையாக வழிபடப்படுகிறார். தமிழகத்தின் இரு பிரபலங்கள் கொல்லூர் மூகாம்பிகையின் தீவிர பக்தர்கள். ஒருவர் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அரிதாகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாக வெளி மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடுவார். அப்படி , அரிதாகச் சென்று ஜெயலலிதா வழிபட்ட கோவில்களில் இந்தக் கோவிலும் ஒன்று. கடந்த 2004ம் ஆண்டு தனது நெருங்கிய தோழி சசிகலாவுடன் தனி ஹெலிகாப்டரில் உடுப்பி சென்று அங்கிருந்து காரில் தாய் மூகாம்பிகை கோவிலை வந்தடைந்தார். அங்கு, அம்மனை மனதுருக வழிபட்டு, தமிழகம் திரும்பினார். ஜெயலலிதா, இந்தக் கோவிலுக்கு சென்று வந்த பிறகு, தமிழகத்தில் இருந்து விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுத்ததும் நடந்தது.
ஜெயலலிதா போலவே தமிழகத்தின் இன்னொரு பிரபலமும் கொல்லூர் மூகாம்பிகையின் தீவிர பக்தர். அவர் வேறு யாருமல்ல; சாட்சாத் இளையராஜாதான்.
இசை மேதை இளையராஜா, கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தர். ஏற்கனவே பலமுறை இந்த கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்திருக்கிறார்.
கொல்லூர் மூகாம்பிகா தேவிக்கும் வீரபத்ர சுவாமிக்கும் எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாள் காணிக்கையாக செலுத்தினார் இளையராஜா. கடந்த புதன்கிழமை காலை கொல்லூருக்கு வந்த இளையராஜா கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்னர், சுப்பிரமணியரின் முன்னிலையில் நகைகளை காணிக்கையாக செலுத்தினார். அவரது மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவும் இளையராஜாவுடன் இருந்தார். காணிக்கைகயை கோவில் தலைமை குரு சுப்ரமணிய அடிகளார் பெற்றுக் கொண்டார்
நகைகளை வழங்கும் முன், கோயில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்களுடன் இளையராஜா ஊர்வலத்தில் கலந்துகொண்டார். அப்போது, பக்திப் பரவசத்தில் தன் வாழ்வில் அன்னையின் அருளால் நிகழ்ந்த அற்புதங்களை நினைவுகூர்ந்து இளையராஜா நெகிழ்ந்து போனார். மூகாம்பிகை அம்மனால் தன் வாழ்வில் அசாதாரண முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் பக்தியுடன் குறிப்பிட்டு பேசினார்.
தொடர்ந்து, இளையராஜாவுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பிரபல இசையமைப்பாளரிடமிருந்து கோயிலுக்கு இவ்வளவு பெரிய நன்கொடை கிடைத்தது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் நகை சமர்ப்பணம் மட்டுமல்ல, ஒரு மகத்தான கலைஞர் தனது இஷ்ட தெய்வத்தின் மீது கொண்டுள்ள அளவற்ற நம்பிக்கை மற்றும் பக்திக்குச் சான்று என்றும் பக்தர்கள் நெகிழ்ந்து போய் கூறுகின்றனர்.