GenZ என்பது 1990களின் பிற்பகுதி முதல் 2010களின் தொடக்கத்தில் பிறந்தவர்களைப் பொதுவாக குறிக்கிறது. இவர்களை டிஜிட்டல் அடிமைகள் என்றும் கூறுவார்கள். இந்தக் குழந்தைகள் பிறந்தது முதலே இணையம், சமூக ஊடகங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்ற தொழில்நுட்பங்களுடன் வாழ தொடங்கியவர்கள்.
தகவல் தொடர்பு, கல்வி, பொழுதுபோக்கு என அனைத்திற்கும் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். இந்தத் தலைமுறை இளைஞர்களை 90ஸ் கிட்ஸ் என்றும், Zoomers என்றும் அழைப்பவர்களும் உண்டு. இவர்களின் எண்ணங்களும், பழக்கவழக்கங்களும் மக்களுக்குப் பயன்படாது என்று சிலர் குறைகூறினர். ஆனால், இந்த எண்ணத்தைத் தவறு என்று 90ஸ் கிட்ஸ் நிரூபிக்கத் தொடங்கியுள்ளனர். அதற்கு முதல் உதாரணமாகியுள்ளது நேபாள நாடு.
இந்த 90s தலைமுறை இளைஞர்களின் போராட்டத்தால் அரசியல் நிலையற்ற நேபாள நாட்டில் கே.பி. சர்மா ஒலியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் ராஜினாமா செய்த கே.பி. சர்மா ஒலி நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. சமூக வலைதள முடக்கம், மற்றும் ஊழலுக்கு எதிராக நேபாளத்தில்புரட்சி வெடித்து தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற GenZ போராட்டக்காரர்கள் மீது, போலீசார் நடத்திய கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டில் 19 இளைஞர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர், சீருடையில் இருந்த பள்ளி மாணவர்கள். இதையடுத்து, சமூக வலைதளங்கள் மீதான தடையை அவசர அவசரமாக நீக்கியது நேபாள அரசு. ஆனாலும், போராட்டக்காரர்கள் அடங்கவில்லை. முதலில், நாடாளுமன்ற கட்டடத்திற்குத் தீ வைத்தனர். பின்னர், குடியரசுத் தலைவர் ராம் சந்திர பவுடல் , பிரதமர் சர்மா ஒலி ஆகியோரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. அமைச்சர்களையும் போராட்டக்காரர்கள் விட்டு வைக்கவில்லை.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் அர்சு ரானா தவுபா காத்மாண்டு விமான நிலையத்தில் அமெரிக்கா பரிசளித்த இரு விமானங்களை அறிமுகம் செய்து உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால், தற்போது, அவர் தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஓடி ஒளிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். காத்மாண்டுவில் தனது கணவரும் முன்னாள் நேபாள பிரதமரான ஷேர் பகதூத் தவுபாவுடன் இவர் வசித்து வந்தார். போராட்டக்காரர்கள் இவரது வீட்டை அடித்து துவம்சம் செய்தனர். அர்சு ரானா அவரது கணவர் இருவரையும் போராட்டக்காரர்கள் தாக்கினர். அர்சு ரானாவுக்கு முகத்தில் குத்து விழுந்ததாகவும் தெரிகிறது. இதனால், அவரின் முகம் வீங்கிக் காணப்பட்டது. அவரது கணவரும் ரத்தம் வழிய வீட்டை விட்டு வெளியே வந்தார். இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பி விட்டனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவிலும் பரவி வருகிறது.
போராட்ட அமைப்பினரின் முக்கிய கோரிக்கைகள் என்ன?
GenZ இளைஞர்களுக்கு வழிகாட்டியாக சுதன் குருங் என்பவர் இருக்கிறார். அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் நேபாள மக்களுக்கு உதவ தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் ஹமி நேபாளம் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த அமைப்பு ஊழலுக்கு எதிராகவும் போராடி வருகிறது. ஊழலில் திளைக்கும் நேபாள அரசியல்வாதிகளை புரட்டிப் போடும் அமைப்பாக தற்போது, இது மாறி விட்டது. இதனால், பல நேபாள அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அமைப்பினர் வைத்துள்ள 5 முக்கிய கோரிக்கைகளை பார்ப்போம்.
1.தற்போதைய பிரதிநிதிகள் சபை உடனடியாக கலைக்கப்பட வேண்டும். இந்த சபை பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது.
2. குடிமக்கள், நிபுணர்கள் மற்றும் இளைஞர்களின் தீவிர பங்கேற்புடன் அரசியலமைப்பை திருத்த வேண்டும். அல்லது முழுமையாக மீண்டும் எழுத வேண்டும்.
3. புதிய தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும். மக்களால் நேரடியாக தலைவர்கள் தேர்வு செய்யப்பட வண்டும்.
4. கடந்த 30 ஆண்டுகளாக கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மீதான விசாரணை நடக்க வேண்டும். சட்டவிரோதமான அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும்
5. கல்வி, சுகாதாரம், நீதி, பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு என 5 துறைகளில் மறுசீரமைப்பு அவசியம் தேவை.
போராட்டம் எப்போது முடிவுக்கு வரும், ஆளும் தரப்பு இந்த அமைப்பினரின் வேண்டுகோளை மொத்தமாக ஏற்றுக்கொள்ளுமா என மொத்த உலகமும் நேபாள அரசியலை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது.