மகளுடன் கிம் ஜாங் உன் 
செய்திகள்

மகளதிகாரம்... பெண் தலைமைக்கு மாறுகிறதா வட கொரியா?

கடந்த 1948ம் ஆண்டில் இருந்து, வட கொரியாவை கிம் பரம்பரையினர்தான் ஆண்டு வருகின்றனர்.

எம். குமரேசன்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இரண்டாவது மகள் - கிம் ஜு யே, அவரது வாரிசாக கருதப்படுகிறார். அவருக்கு தற்போது 12 அல்லது 13 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு முதல் அவர் பொது வெளியில் தனது தந்தையுடன் தோன்ற ஆரம்பித்தார். தற்போது, சீனாவில் நடந்த பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சியில் தந்தையுடன் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஜு யே ஈர்த்துள்ளார்.

வடகொரியா ஒரு மர்மமான நாடு. அங்கே என்ன நடக்கிறது என்பதை அவ்வளவு எளிதில் தெரிந்து கொள்ள முடியாது . ஆனால், பக்கத்து வீட்டு ரகசியங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில் மக்கள் முன்னுரிமை கொடுப்பது போல, எதிரி நாடான தென்கொரியாவின் புலனாய்வு அமைப்புகள் வடகொரிய அதிபரின் ஒவ்வொரு நகர்வையும் தீவிரமாக கண்காணித்து வரும். அந்த வகையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது இளைய மகள் கிம் ஜு யேவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை கண்டுபிடித்துள்ளன.

கடந்த 2022ம் ஆண்டு அணுஆயுத ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்திய போது, தந்தையுடன் கிம் ஜுயே இருந்தார். தொடர்ந்து, ஒவ்வொரு ராணுவ நடவடிக்கைகளின் போது, தந்தையுடன் மகள் இருப்பதை தென்கொரிய புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்தன. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - ரி சோல் ஜு தம்பதிக்கு கிம் ஜு யே தவிர ஒரு மூத்த மகளும் இளையமகனும் இருப்பதாக தெரிகிறது. ஆனால், இவை உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்தான். கிம் ஜாங் உன் தனது குழந்தைகளில் கிம் ஜுயேவை மட்டுமே பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். மற்றவர்களின் பெயர் என்ன, எப்படியிருப்பார்கள் என்பது கூட உலகுக்கு தெரியாது.

கொடுங்கோல் அதிபராக கருதப்படும் கிம் ஜாங் உன், தனது இளையமகள் மீது மட்டும் அலாதி பிரியம் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனால்தான் சீன அதிபர், ரஷ்ய அதிபர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளுக்கு பீஜிங்கிற்கு மகளை அழைத்து வந்ததாக சொல்கிறார்கள். பியாங்கியாங்கில் இருந்து பீஜிங் வந்த வட கொரிய அதிபரின் பிரத்யேக ரயிலில் இருந்து தந்தைக்கு அடுத்தபடியாக இவர்தான் சீனாவில் கால் வைத்தார். இதுதான் கிம் ஜாங் உன் மகளின் முதல் வெளிநாட்டு பயணமும் கூட. இதனால், வடகொரிய அரசியலில் கிம் ஜுயே அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். எனினும், தந்தையுடன் சீனாவுக்கு வந்தாலும் சீன அதிபர், ரஷ்ய அதிபர்களை சந்திக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் கிம் ஜாங்கின் மகளை பார்க்க முடியவில்லை. ஆனால், வட கொரிய அதிகாரிகள் கிம் ஜு யேவை 'மரியாதைக்குரியவர்'என்ற அடை மொழி கொடுத்து அழைக்கின்றனர். இதனால், வட கொரியாவில் அடுத்து இவர் அரியணை ஏற வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

கிம் ஜாங் உன் தனது மகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், அவரை தனது வாரிசாக உயர்த்த நினைத்தாலும் வடகொரிய மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற கேள்வியையும் நிபுணர்கள் முன் வைக்கின்றனர். ஏனென்றால், வடகொரிய ஆணாதிக்கம் நிறைந்த நாடு. கடந்த 1948ம் ஆண்டில் இருந்து, கிம் பரம்பரையினர்தான் ஆண்டு வருகின்றனர். கிம் ஜாங் உன் தாத்தா, தந்தை என ஆண்கள்தான் அந்த நாட்டை ஆட்சி செய்து வந்துள்ளனர். எனினும், 4வது தலைமுறை ஆட்சியாளராக கிம் ஜு யே பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தென்கொரிய புலனாய்வு அமைப்புகள் கணித்துள்ளன.

பியாங்கியாங் அரண்மைணையில் தனி பள்ளியில் படித்து வரும் கிம் ஜு யேவுக்கு குதிரையேற்றம், நீச்சல், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை கற்றவர். அமெரிக்காவின் முன்னாள் கூடைப்பந்து நட்சத்திரம் டென்னிஸ் ரோட்மேன் கடந்த 2013ம் ஆண்டு வட கொரியா சென்றார். அப்போது, கிம் ஜு யேவை குழந்தையாகப் பார்த்ததாக தகவல் உண்டு. இந்த தகவலும் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.