Conference 
செய்திகள்

மாநாடு vs பொதுக்கூட்டம்: 3 முக்கிய வேறுபாடுகள்

தமிழ்ச் சூழலில் கொள்கை அடிப்படையில் உருவான இரு பெரும் திராவிடக்கட்சிகள் திமுக மற்றும் அதிமுக ஆகியனவாகும். அதன் முன்னோடித் தலைவர்களின் சீரிய முன்னெடுப்புகளால்...

ஆதி தாமிரா

தமிழ்ச் சூழலில் கொள்கை அடிப்படையில் உருவான இரு பெரும் திராவிடக்கட்சிகள் திமுக மற்றும் அதிமுக ஆகியனவாகும். அதன் முன்னோடித் தலைவர்களின் சீரிய முன்னெடுப்புகளால், அரசியல் கள நிகழ்வுகளுக்கான முன்னுதாரணங்கள் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் தழுவிய அளவில் மாநாடுகளும், மாபெரும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இரண்டுக்குமான நோக்கங்களையும், அவற்றுக்கிடையேயான வித்தியாசங்களையும் காண்போம்.

1.     நோக்கங்கள்: 

அரசியல் மாநாடுகள் (Political Conferences) பொதுவாக ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் அல்லது நோக்கத்தை மையமாகக் கொண்டு நடத்தப்படுகின்றன. உதாரணமாக, ஒரு கட்சியின் கொள்கைகளை, கொள்கைச் சீரமைப்புகளை மக்கள் மன்றத்தில் அறிவிக்க, புதிய தீர்மானங்களை நிறைவேற்ற, அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் அரசியல் போராட்டங்களை, ஆளும்கட்சியின் அதிகாரப்போக்குகள், மக்கள் விரோதச் சட்டங்களை முன்னிறுத்திப் பேசுவதற்காக நடத்தப்படலாம். 

இது வெறும் கூட்டமாக இல்லாமல், கட்சியின் முக்கிய முடிவுகளை அறிவிக்கும் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் இட ஒதுக்கீடு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் சமூகநீதி மாநாடு, அல்லது இளைஞர்களைக் கவரும் விதமாக நடத்தப்படும் இளைஞரணி மாநாடு, புதிய கட்சியாக இருப்பின் கொள்கை விளக்க மாநாடுகள் போன்றவற்றைச் சொல்லலாம். இத்தகைய மாநாடுகளுக்கு கட்சியின் எதிர்காலப் போக்கை நிர்ணயிப்பதே நோக்கமாக இருக்கும். 

பொதுக்கூட்டங்கள் (Public meetings) பெரும்பாலும் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காகவோ நடத்தப்படுகின்றன. இதில், குறிப்பிட்ட ஒரு கருப்பொருள் இல்லாமல், அனைத்து விதமான பொதுவான அரசியல் விஷயங்களும் பேசப்படுகின்றன. தலைவர்கள் எதிர்க் கட்சிகளை விமர்சிப்பது, அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவது, தங்கள் கட்சியின் சாதனைகளை எடுத்துரைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். மிகக் குறிப்பாக அந்தப் பகுதியின் மக்களை தம் பக்கம் ஈர்ப்பதே முக்கியமான நோக்கமாக இருக்கும்.

  1. பங்கேற்பாளர்கள்: 

ஒரு மாநாட்டில் கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள், பிரதிநிதிகள், கூட்டணிக்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மட்டுமன்றி, குறிப்பிட்ட கருப்பொருளின் காரணமாக, மாநிலம் தழுவிய அளவில் ஏராளமான பொது மக்களும் கலந்துகொள்வார்கள்.

பொதுக்கூட்டத்தில், அந்தக் குறிப்பிட்ட பகுதியின், மாவட்டத்தின் மக்கள் திரளும், கூட்டத்தை நடத்தும் கட்சியின் தலைவரோ, அல்லது அந்தக் கட்சியின் முக்கியப் பிரதிநிதிகளோ, பேச்சாளர்களோ கலந்துகொள்வார்கள்.

  1. நிகழ்ச்சிகள்: 

ஒரு மாநாடு பொதுவாக 1 முதல் 5 நாட்கள் வரை நடக்கலாம். ஒவ்வொரு நாளும், கால அட்டவணைப்படி தொடர் நிகழ்வுகள் இருந்துகொண்டே இருக்கும். பேரணி, கட்சி முன்னோடிகளின் சிலை திறப்பு, படத்திறப்பு, கொள்கை சார்ந்த கலை நிகழ்ச்சிகள், வெவ்வேறு உட்தலைப்புகளில் பேச்சாளர்களின் சொற்பொழிவுகள், பல்துறை வல்லுநர்களின் கருத்தரங்கங்கள், விவாதங்கள், முக்கியத் தலைவர்களின் சிறப்புரைகள், தலைவரின் தலைமை உரை என மாநாடு நடக்கும் அத்தனை நாட்களிலும் நிகழ்ச்சிகள் இருந்துகொண்டே இருக்கும்.

மிகப்பெரிய அளவில் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால், அவர்களை மழை, வெயில் பாதிக்காத வண்ணம் மேற்கூரை அமைப்பது, குடி தண்ணீர், உணவு, கழிப்பறை வசதிகள், நெருக்கடி ஏற்படாத வண்ணம் போதுமான இட வசதி, மக்கள் பகுதிகளில் நெரிசல், மற்றும் குழப்பம் ஏற்படாத அளவில் பாதுகாப்பு வசதிகள் போன்றன மிகக் கவனமாக செய்யப்படும். இது பெரிய அளவில் நடத்தப்படும் நிகழ்வு என்பதால், ஒரு கட்சி ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு ஒரு தடவை நடத்தக்கூடும்.

பொதுக்கூட்டம் என்பது பொதுவாக ஒரு பகுதியில், வெயில் பாதிப்பில்லாத மாலை நேரத்தில் சில மணி நேரங்கள் மட்டுமே நடக்கக்கூடியவை. தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளின் குறிப்பிட்ட நோக்கம் சார்ந்த சிறப்புரைகள் மட்டுமே நடக்கும். இவற்றுக்கும் நேரம், கூடும் மக்கள் கூட்டத்தையும் பொறுத்து பாதுகாப்பு மற்றும் குடிதண்ணீர் ஏற்பாடுகளை சிறப்புற செய்யப்படுகின்றன. இவை ஒரு வருடத்துக்கே பல தடவைகள் குறிப்பாகத் தேர்தல் நேரத்தில் இன்னும் அதிகமாக நடத்தப்படலாம்.