வருங்கால கணவருடன் துபாய் இளவரசி 
செய்திகள்

Insta விவாகரத்து புகழ் இளவரசியின் வருங்காலக் கணவர் யார் தெரியுமா?

அமெரிக்க ராப் இசை பாடகர் பிரெஞ்ச் மொண்டனாவிற்கும் துபாய் இளவரசி ஷேகா மஹ்ராவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. திருமணத் தேதி அறிவிக்கப்படவில்லை.

எம். குமரேசன்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும் துபாய் ஆட்சியாளருமான முகம்மது பின் ரஷித் அல் மக்தூமின் மகள் ஹைஃபா மஹ்ரா. 31 வயதான இவருக்கும் ஷேக் மனா பின் முகம்மது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருக்கும் கடந்த 2023 ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இளவரசியின் கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, 2024ம் ஆண்டு ஜூலை மாதத்தில் திடீரென தனது கணவரை விவாகரத்து செய்வதாக துபாய் இளவரசி அறிவித்தார். குழந்தை பிறந்த இரண்டு மாதங்களில் கணவரிடம் இருந்து பிரிவதாக அவர் அறிவித்தார்.

ஹைஃபா மஹ்ரா விவகாரத்து குறித்து தனது இன்ஸ்டா பதிவில், "நீங்கள் வேறு சிலருடன் உறவில் இருப்பதால் உங்களை விவாகரத்து செய்கிறேன். உங்களின் உடல் நலனை பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி" என்று பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இருவரும் சேர்ந்தாற்போல் பதிவிட்டிருந்த புகைப்படங்களையும் நீக்கினார். இளவரசி மஹ்ரா பொதுவெளியில் விவாகரத்தை அறிவித்தது சர்வதேச அளவில் பரபரப்பான செய்தியாக பார்க்கப்பட்டது.

விவகாரத்துக்கு பிறகு தனது தொழில்களில் இளவரசி மஹ்ரா கவனம் செலுத்தி வந்தார். ஷேக்கா மஹ்ரா அல் மக்தூம் தனது எம்1 பிராண்டின் மூலமாக ஆடம்பர பொருட்களை விற்பனை செய்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் இவரை இன்ஸ்டாகிராமில் 9.8 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்ந்து வருகின்றனர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக தனது வாழ்வில் நடக்கும் முக்கியமான சம்பவங்களையும், பிசினஸ் தொடர்பான விஷயங்களையும் பகிர்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

விவாகரத்துக்கு பிறகு, தனது எம்.1 பிரண்ட் நிறுவனத்தில் இருந்து வாசனை திரவியம் ஒன்றை மஹ்ரா இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தி உள்ளார். அதற்கு 'DIVORCE' என பெயரிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். 'கணவருக்கு விவாகரத்து முதல் எல்லாமே இன்ஸ்டாகிராம் வாயிலாகத்தான் இளவரசி கொடுக்கிறார்' என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையே, மொராக்கோவை சேர்ந்த பிரபல ராப் இசை பாடக பிரெஞ்ச் மொண்டானவுக்கும் துபாய் இளவரசிக்கும் காதல் மலர்ந்தது. கடந்த ஆண்டு இறுதியிலிருந்தே பிரெஞ்ச் மொன்டானாவுடன் அவர் உறவில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் கரீம் கார்பூச் என்ற இயற்பெயர் கொண்ட பிரெஞ்ச் மொன்டானா, மொராக்கோ-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவர். மொராக்கோவில் பிறந்து வளர்ந்த இவர், 13 வயதில் தனது குடும்பத்துடன் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தார், மேலும் 2000 ஆம் ஆண்டில் யங் பிரெஞ்ச் என்ற பெயரில் ராப் இசை பாடகராக தனது கரியரை தொடங்கியவர். இருவரும் ஒன்றாக உணவகங்களுக்கு செல்வது, மசூதிக்கு செல்வது, பாரிஸ் நகர வீதிகளில் சுற்றி வருவது என அவர்களது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.

இந்த நிலையில், இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் துபாய் இளவரசியும் ராப் இசை பாடகரும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. துபாய் இளவரசிக்கு கிட்டத்தட்ட 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு சொத்து உள்ளது. அதோடு, பல்வேறு சமூகப்பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.