Online Fraud 
செய்திகள்

எப்படியெல்லாம் ஆட்டைய போடுறாங்க!! ஜாக்கிரதை மக்களே!

வாட்சப்பில் அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து எந்த லிங்க் வந்தாலும் அதை உடனே க்ளிக் செய்து விடாதீர்கள்.. திருடர்கள் புதிய புதிய உத்தியைக் கையாள்கின்றனர். நாம்தான் கவனமாக இருக்கவேண்டும்!

எம். குமரேசன்

தற்போது பான் கார்டு, வாகன லைசன்ஸ், புதுப்பித்தல், அரசு வங்கிகளின் ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்டவை தபால் துறை வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இது தொடர்பான தகவல்கள், தபால் துறை சார்பில் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுகின்றன. தபால் புறப்பட்ட இடம், வந்து சேரும் நேரம், தற்போது தபால் இருக்கும் இடம் ஆகியவை குறித்து குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட நபருக்கு தற்போது தபால் எங்கு உள்ளது என்பது குறித்து விவரம் அறிய 'லிங்க்' அனுப்பப்படுகிறது. அதைக் கொண்டு தபாலின் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்ளலாம்.

Online Fraud

அந்த வகையில், கோவை மாவட்டத் பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்த அன்புசெல்வன் என்பவருக்கு தபால்துறையில் இருந்து மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில், நான்கு முறை வீட்டுக்கு வந்தும் தபாலை கொடுக்க முடியவில்லை. எனவே, இந்த லிங்கை தொடர்பு கொளுமாறு கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட  லிங்கை அன்பு செல்வன் தொட்டதும் அவரின் வங்கி கணக்கில் இருந்து 21 ஆயிரம் எடுக்க முயற்சி நடந்துள்ளது.  வங்கியில் இருந்து அன்பு செல்வனின் செல்போன் எண்ணுக்கும் மெசேஜ் வந்துள்ளது. ஆனால், அவரின் வங்கிக்கணக்கில் 21 ஆயிரம் இல்லை. இதனால், ஆன்லைன் கொள்ளையர்களின் எண்ணம் நிறைவேறாமல் போய் விட்டது.  

Link Alert

அதேபோல, மகராஸ்டிராவில் வாட்சப்பில் கல்யாண இன்வைடேஷன் அனுப்பி அரசு ஊழியரிடத்தில் இருந்து 1.90 லட்சம் ஆன்லைன் வழியாக திருடப்பட்ட சம்பவம் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிங்கோலி  பகுதியை  சேர்ந்த அரசு ஊழியர் ஒருவருக்கு  வாட்சப்பில் கல்யாண அழைப்பிதழ் வந்துள்ளது. கூடவே, ஒரு பி.டி.எப் பைலும் இருந்துள்ளது. அவர் அந்த பி.டி.எப். பைலை ஓபன் செய்ததும், போனில் இருந்த அனைத்து டேட்டாக்களும் ஆன்லைன் கொள்ளையர்கள் வசம் சென்று விட்டது. உடனடியாக, அவரின் வங்கிக் கணக்கில் இருந்து 1.90 லட்சம் எடுக்கப்பட்டு விட்டது. பதறிப்போன அவர் உடனடியாக, போலீசாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக, போலீசார் கூறுகையில், இதே முறையில் பலரிடமும் ஆன்லைன் கொள்ளையர்கள் பணத்தை திருடி வருகின்றனர். வாட்சப்பில் அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து  பி.டி.எப் பைல் வந்தால் ஓபன் செய்யாதீர்கள் என்று கூறுகின்றனர். 

எது எப்படியோ கலிகாலம்... ஜாக்கிரதை மக்களே!