Indian marriage Freepik
லைஃப்ஸ்டைல்

வரன் தேடுவதில் கடந்த வருடங்களில் ஏற்பட்டுள்ள ஆச்சர்யமான மாற்றங்கள்! #marriage

ஒரே சாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இந்தியாவில் படிப்படியாக குறைந்து வருகிறதாம்.

எம். குமரேசன்

இந்தியர்கள் சராசரியாக திருமணம் செய்யும் வயது 27ல் இருந்து 29 ஆக உயர்ந்துள்ளது. சரியான துணையைத் தேர்வு செய்வதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பணம் அல்லது வயது முக்கியமல்ல என்றும் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்தியத் திருமணங்கள் என்பது இரு உள்ளங்கள் ஒன்றாக இணைவது மட்டுமல்ல, அது ஒரு கலாசார இணைப்பாகவே பார்க்கப்படுகிறது. சமூக நிகழ்வு, இரு குடும்பங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது போன்ற செயல்பாடுகள் திருமணத்தால் நடைபெறுகிறது. இந்தியாவில் திருமணங்களும் பல்வேறு வடிவங்களில், சடங்குகளாக கொண்டாடப்படுகின்றன. இந்தியச் சமூகத்தில் திருமணம் என்பது குடும்பம், குலம், சமூகம் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள், தங்கள் தனித்துவமான கலாச்சாரத்தை திருமணம் வாயிலாக பிரதிபலிக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியர்களின் திருமணம் குறித்த பார்வை பல விதங்களில் மாற்றத்தை கண்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது குறித்து, மேட்ரிமோனி தளமான ஜீவன்சாச்தி சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. இந்த தளத்தில் 2016 முதல் 2025ம் ஆண்டு வரை உறுப்பினர்களாக இருந்தவர்கள் மற்றும் 2026ம் ஆண்டு ஆக்டிவ் உறுப்பினர்களாக உள்ள 30 ஆயிரம் பேரிடத்தில் நடத்தப்பட்டது .

இந்த ஆய்வில் ஒரே சாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் படிப்படியாக இந்தியாவில் குறைய தொடங்கியுள்ளதாக ஜீவன்சாச்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, 2016ம் ஆண்டு 91 சதவிகிதம் பேர் ஒரே சாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிற கருத்தில் உறுதியாக இருந்தனர். 2025ம் ஆண்டு , அதுவே 54 சதவிகிதமாக குறைந்துள்ளது. நகரப்புறங்களில் 49 சதவிகிதம் பேர் சாதி மாறி திருமணம் செய்யும் மனநிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதோடு, 8 சதவிகிதம் பேர் மட்டுமே பார்ட்னர்களில் யாராவது ஒருவர் சம்பாதித்தால் போதும் என்கிற மன நிலையில் உள்ளனர். 87 சதவிகித ஆண்கள் சம்பாதிக்கும் பெண்களை திருமணம் செய்வதை வசதியாக உணருகின்றனராம். 15 சதவிகித பெண்கள் தங்களை விடக் குறைவாக சம்பாதிக்கும் ஆண்களை திருமணம் செய்யத் தயாராக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Representational image of Bride and Groom

தொழில் மற்றும் நிரந்தர வருமானம் போன்ற காரணிகளால் இந்தியர்கள் திருமணம் செய்யும் சராசரி வயது கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதாவது முன்பு 27 வயதில் பார்ட்னர்களைத் தேட தொடங்கியுள்ளனர். தற்போது, 29 வயதில்தான் இந்தியர்கள் தங்களுக்கு பார்ட்னர்களைத் தேடத் தொடங்குகின்றனர். திருமண முடிவுகளை பெற்றோரை விட இளைஞர்களே தனிப்பட்ட முறையில் எடுக்கின்றனராம். இதனால், இளைஞர்களே தற்போது மேட்ரிமோனி தளங்களில் தங்களைப் பற்றிய சுயவிவரங்களை பதிவு செய்து விடுகின்றனராம். கடந்த 2016ம் ஆண்டு 67 சதவிகிதம் பேர் தாங்களாகவே முன்வந்து தங்களது தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்தனர். தற்போது அதுவே 77 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அதேவேளையில், தாங்கள் முடிவெடுத்தாலும் பெற்றோர் உதவியுடனும் ஆதரவுடனும்தான் திருமணத்தை எளிதாக நடத்த முடிவதாக இளைஞர்கள் நம்புகின்றனராம். 90 சதவிகிதம் பேர் பணம் மற்றும் வயதுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சரியான நபரைத் தேர்வு செய்வதே முக்கியம் என்கின்றனராம். பெற்றோரை விட உடன்பிறந்தவர்களே, திருமணம் செய்து வைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு விவாகரத்து செய்தவர்களில் 11 சதவிகிதம் பேரே இரண்டாம் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.அதுவே, 2025ம் ஆண்டு 43 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. விவகாரத்து செய்தவர்களை திருமணம் செய்துகொள்ள முதல் முறையாக திருமணம் செய்யும் 15 சதவிகிதம் பேர் ஆர்வம் காட்டுவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேட்ரிமோனி தளங்களில் தங்கள் பெயரை பதிவு செய்த 6 மாதங்களுக்குள் திருமணம் செய்ய 78 சதவிகிதம் பேர் விரும்புகின்றனர். 48 சதவிகிதம் பேர் 3 மாதங்களுக்குள் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனராம்.