செயற்கை நுண்ணறிவு (AI) இன்று மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி நிற்கிறது. குறிப்பாக, கலைத்துறையில் மிட்ஜர்னி (Midjourney) , டால்-இ (DALL-E) போன்ற தளங்கள் ஒரு சில நொடிகளில் பிரமிக்கத்தக்க ஓவியங்களை உருவாக்கி விடுகின்றன. இந்தச் சூழலில், ‘நிஜமான ஓவியர்களின் எதிர்காலம் ஏஐயினால் பாதிக்கப்படுமா?’ என்றொரு கேள்வி நமக்கு எழத்தான் செய்கிறது.
திருநெல்வேலியைச் சேர்ந்த ஓவியர் மாரியப்பனை இந்தக் கேள்வியுடன் சந்தித்தோம். அவரின் கருத்துகளிலிருந்து நாம் சில முடிவுகளுக்கு வரமுடிகிறது.
டிஜிட்டல் கருவிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு ஏஐ தரும் பாதிப்புகள் தவிர்க்க முடியாதவை. குறிப்பாக கீழ்க்கண்ட துறைகளில் சிக்கல்கள் இருக்கின்றன.
• புத்தக அட்டைகள், லோகோ வடிவமைப்பு மற்றும் விளம்பரங்களுக்காக ஓவியர்களை நாடிய நிறுவனங்கள், இப்போது குறைந்த செலவில் ஏஐ மூலம் வேலைகளை முடித்துக் கொள்கின்றன. இது இளம் கலைஞர்களின் வருமானத்தைப் பாதிக்கலாம்.
• ஏஐ மென்பொருள்கள் நிஜக் கலைஞர்களின் கோடிக்கணக்கான படைப்புகளைக் கொண்டே பயிற்சி அளிக்கப்படுகின்றன. கலைஞர்களின் அனுமதி இன்றி அவர்களின் பாணியைத் திருடுவது அறத்துக்கு எதிரானதாக இருக்கிறது.
• மனிதர்களால் ஓர் ஓவியத்தை முடிக்க சிலபல நாட்களாகும் நிலையில், ஏஐ மிகக் குறுகிய நேரத்தில் ஆயிரக்கணக்கான வடிவங்களைத் தந்துவிடுகிறது. இந்த வேகத்தினைச் சமாளிப்பது மனிதர்களால் இயலாத காரியம்.
அப்படியானால், ஓவியர்களை ஏஐ வென்றுவிடுமா? முடியாது, அதற்கான வாய்ப்பே கிடையாது. ஆனால், ஏன் முடியாது?
நிஜமான கலைஞர்களுக்கு என்று சில தனித்துவமான பண்புகள் உள்ளன.
1. ஓர் ஓவியத்திற்குள்ளே இருக்கும் வலி, மகிழ்ச்சி, கசப்பு அல்லது அந்த ஓவியன் கடத்த விரும்பும் செய்தியை ஏஐயால் ஒருநாளும் உணரமுடியாது. கலைஞன் வாழ்விலிருந்து தன் அனுபவத்தை எடுத்து வண்ணங்களாக்குகிறான். ஏஐ வெறும் தரவுகளை (Data) மட்டுமே ஒருங்கிணைத்து ஓர் ஓவியத்தை உருவாக்குகிறது. அதன் அடிப்படையே போலியானது. கலை வேறு, தரவுகள் வேறு!
2. ஏஐ ஏற்கனவே இருக்கும் பாணிகளையே நகலெடுக்கிறது. ஆனால், ஒரு புதிய பாணியையோ (Art Movement) அல்லது புதிய சிந்தனையையோ ஒரு மனிதக் கலைஞனால் மட்டுமே உருவாக்க முடியும். இவ்வகையில் நமது ஒவ்வொருவரின் கைரேகையைப் போல, ஒவ்வொரு ஓவியக் கலைஞனுமே தனித்துவமானவன்.
3. கேன்வாஸில் தீட்டப்படும் எண்ணெய் வண்ண ஓவியங்கள் அல்லது சுவரோவியங்கள் தரும் தொடு உணர்வையும் (Texture) மதிப்பையும் ஒரு டிஜிட்டல் திரையினால் எப்போதுமே ஈடுசெய்ய முடியாது.
ஏஐ என்பது ஓவியர்களின் எதிரி அல்ல. அது அவர்களுக்கும் உதவக்கூடிய ஒரு கருவியாகவே (Tool) பார்க்கப்படுகிறது. புகைப்படக் கருவி (Camera) வந்தபோது ஓவியம் அழிந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால், அது ஒரு புதிய 'நிழற்படக்கலை' துறையாக தனியே பரிணமித்ததே தவிர, ஓவியர்களை ஒருநாளும் புகைப்படம் வென்றதில்லை. அதேபோல, புத்திசாலித்தனமான கலைஞர்கள் ஏஐ-யைப் பயன்படுத்தித் தங்கள் கற்பனையை இன்னும் விரிவுபடுத்துவார்கள்.
திரு. மாரியப்பன் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும், சென்னை, பெங்களூர், மைசூர், மும்பை, ஹைதராபாத் என இந்தியாவெங்கும் நடைபெறும் ஓவியக் கண்காட்சிகளில் தனது படைப்புகளுடன் பங்கேற்கிறார். அவற்றைக் காண உலகெங்கிலுமிருந்து கலாரசிகர்கள் லட்சக்கணக்கில் படையெடுத்து வருகிறார்கள். படைப்புகளும் லட்சக்கணக்கான மதிப்பில் விற்பனையாகின்றன. (உங்கள் பார்வைக்காக அவரது இரண்டு ஓவியங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஏஐ அழகான படங்களை உருவாக்கிவிடலாம். ஆனால் கலை என்பது அழகு சார்ந்தது மட்டுமேல்ல, அது மனிதர்களின் உணர்வு சார்ந்தது. எனவே, நிஜமான ஓவியர்களை ஒருநாளும் ஏஐயால் வெல்லவும் முடியாது, அவர்களுக்கான மதிப்பைக் குறைத்துவிடவும் முடியாது.