ஆஸ்திரேலிய நாட்டுக்குள் அவ்வளவு எளிதாக வெளிநாட்டு வாழ் விலங்குகள், மலர்கள், காய்கறிகளை கொண்டு போய் விட முடியாது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வசிக்கும் மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி ஓணம் பண்டிகையைக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மலையாள நடிகை நவ்யா நாயர் பங்கேற்றார். கொச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து மெல்பர்ன் நகரம் சென்றடைந்தார். மெல்பர்ன் நகர விமான நிலையத்தில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
கேரளாவில் இருந்து புறப்படுகையில், நவ்யாவின் தந்தை மல்லிகைப்பூவை வாங்கிக் கொடுத்துள்ளார். இதில், 15 செ.மீ அளவுள்ள மல்லிகைப்பூவை நவ்யா நாயர் தனது ஹேண்ட் பேக்கில் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் சென்றுள்ளார். விமான நிலையத்தில் மல்லிகைப்பூவை பார்த்த ஆஸ்திரேலிய அதிகாரிகள் அவருக்கு 1.14 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். 'தனக்கு ஆஸ்திரேலிய சட்டத் திட்டம் தெரியாது' என்று நவ்யா நாயர் வாதாடியும் பலன் இல்லை. 'ஃபைனை கட்டுங்கள்...! 'என்று அதிகாரிகள் கறாராக கூறி விட்டனர்.
ஆஸ்திரேலியாவுக்கென்று தனித்தன்மை வாய்ந்த உயிரியல் சூழல் உள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த பூ, பழம், விதைகள் உள்ளே நுழைந்துவிட்டால் தங்கள் நாட்டின் உயிரியல் சூழல் மாறிவிடும் என்று ஆஸ்திரேலியர்கள் கருதுகின்றனர். இதனால், விமானம் மூலம் பழங்கள் , காய்கறிகளைக் கொண்டு வர அனுமதியில்லை. பூ கொண்டு வருவதையும் அனுமதிப்பதில்லை. நெய்யால் தயாரிக்கப்பட்ட பொருள் எதையும் கொண்டு வரக் கூடாது என்பதும் அந்த நாட்டின் சட்டம். இது விலங்குகளுக்கும் பொருந்தும். இத்தகைய சூழலில், ஹைதரபாத்தைச் சேர்ந்த இந்திய தம்பதி தாங்கள் குழந்தை போல அன்பு காட்டிய வளர்ப்பு நாய் ஒன்றை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்ல 16 லட்சம் செலவழித்ததுதான் இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய தம்பதி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். அதில், ''தாங்கள் செல்லமாக வளர்த்த ஸ்கை என்ற வளர்ப்பு நாயை ஆஸ்திரேலியா கொண்டு செல்ல பட்ட கஷ்டங்களை கூறியுள்ளனர். அவர்கள், தெரிவித்துள்ளதாவது, ' ஆஸ்திரேலியாவுக்கு இந்திய நாய்களை நேரடியாக கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆஸ்திரேலியாவுக்கு வரும் முன், ரேபிஸ் இல்லாத நாட்டில் இந்திய நாய்கள் 6 மாதம் இருக்க வேண்டும். அந்த வகையில், துபாயில் உள்ள நாய்கள் வளர்ப்பு மையத்தில் 6 மாதங்கள் நாங்கள் வைத்திருந்தோம். மேலும், தனிமையாக இருப்பதாக அது உணர்ந்து விட கூடாது என்பதற்காக, நாங்களும் அங்கு ஒரு மாத காலம் இருந்தோம். பின்னர், 6 மாத காலம் கழித்து ஸ்கையை நாங்கள் ஆஸ்திரேலியா கொண்டு வந்தேதாம். விமான செலவு, துபாய் நாய்கள் மையத்தில் செலவு, குவாரன்டைன், டாகுமென்டேசன் செலவு என இதற்கு மட்டும் 16 லட்சம் செலவானது'' என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் , 'இதற்கு ஏன் இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும். புதிதாக ஒரு நாய்க்குட்டியை வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே...' என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு, அந்த தம்பதி சொன்ன பதில்தான் ஹைலைட். 'உங்கள் குழந்தைக்கு ஒரு பிரச்னை என்றால், வேறு குழந்தையை வாங்கிக் கொள்வீர்களா? எங்கள் ஸ்கையின் அன்பை ரீள்ளேஸ் செய்து விட முடியாது. பணத்தை விட அன்புதான் முக்கியமானது ''என்று உருக்கமாக பதில் அளித்துள்ளனர்.
அதேவேளையில் , சிலர் அந்த தம்பதியின் உண்மையான அன்பை மெச்சி பாராட்டியுள்ளனர். வளர்ப்பு பிராணியும் வீட்டில் ஒருவர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.