Traditional Dress for Lizards  @shockpixel
லைஃப்ஸ்டைல்

குர்தா அணிந்த பல்லி.. உண்மையா, AI-ஆ?

கந்தர்வ் என்ற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில், பல்லி ஒன்றுஅழகான குர்தா உடை அணிவிக்கப்பட்டு சுவர் மேல் அமர்ந்துள்ளது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன..

எம். குமரேசன்

செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் பலரும் அதற்கு உடைகள் அணிந்து அழகு பார்ப்பது வழக்கம். பண்டிகை காலங்களில் புத்தாடைகளையும் வாங்கி அணிவிப்பார்கள். குளிர் காலங்களில் ஸ்வெட்டர் போன்றவற்றையும் அணிவித்து விடுவார்கள். ரெயின்கோட்டுகள், ஹூடிஸ், பூட்ஸ் போன்றவையும் வளர்ப்புபிராணிகளுக்கு கிடைக்கின்றன. செல்லப்பிராணிகளுக்கு உடைகள் அணிவதால், குளிர் காலங்களில் உடல் வெப்பத்தைப் பாதுகாக்கவும், பூச்சிகள், கிருமிகளிடமிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இந்த உடைகள் செல்லப்பிராணியின் சருமத்திற்கு இதமான, தரமான துணியால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் செல்லப்பிராணிகளுக்கான உடைகளை விற்கின்றன. செல்லப்பிராணிகளுக்கான உடை வர்த்தகமும் கோடிக்கணக்கில் நடக்கிறது.

அந்த வகையில், கந்தர்வ் என்ற இளைஞர் தனது @shockpixel இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அதில், பல்லி ஒன்றுஅழகான குர்தா உடை அணிவிக்கப்பட்டு சுவர் மேல் அமர்ந்துள்ளது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. '' ''இங்கே பாருங்கள் நண்பர்களே, இந்த உடை நானே தயாரித்தது. மனிதர்களுக்கு கோடிக்கணக்கில் துணிகள் அணிய உள்ள போது, பல்லி ஏன் உடை அணிய கூடாது? இதன் விலை 20 மட்டுமே '' என்று கந்தர்வ் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு வீடியோவில் 10 ரூபாய் நாணயம் ஒன்று கட்டிலுக்கு அடியில் விழுந்து விடுகிறது. மனிதர்கள் உள்ளே செல்ல முடியாத அந்த இடத்துக்குள் பல்லி தலையில் அணிவிக்கப்பட்ட சிறிய விளக்குடன் சென்று அதன் வெளிச்சத்தில் அந்த நாணயத்தை எடுத்து கொடுக்கிறது. இந்த வீடியோவுக்கு 'ஜேம்ஸ்பாண்ட் பல்லி' என்று கந்தர்வ் பெயரிட்டுள்ளார். இந்த வீடியோக்களை வைத்து தனது தயாரிப்புகளை கந்தர்வ் வித்தியாசமாக விளம்பரப்படுத்துகிறார்.

கந்தர்வ் வெளியிட்டுள்ள இந்த வீடியோக்களுக்கு சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. வித்தியாசமான கிரியேடிவ் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதோடு, ஆர்டர்களும் குவிந்து வருகிறதாம். அதே வேளையில், ஏஐ மூலம் இந்த வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.