டவுன் சின்ட்ரோம் என்பது ஒரு மரபணு பாதிப்பாகும். இதனால், குழந்தைகள் முகம் சிறியதாக காணப்படும். கண்கள் மேலே நோக்கி இருக்கும். இது போன்ற குழந்தைகளை பெற்றோர் அதிக அக்கறையுடன் வளர்க்க வேண்டியது இருக்கும். உலகம் முழுக்கவே டவுன் சின்ட்ரோம் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர்.
அந்த வகையில், துபாயில் ஒரு நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் டி.கே. விஸ்வநாதன் - வீணா தம்பதிக்கு டவுன் சின்ட்ரோம் பாதித்த குழந்தை பிறந்தது. விக்னேஷ் என்று பெயர் சூட்டி அந்த குழந்தையை பெற்றோர் மிகுந்த கவனத்துடன் வளர்த்தனர். விக்னேஷுக்கு 3 வயதாகும் போது, விஸ்வநாதன் துபாய்க்குக் குடி பெயர்ந்தார்.
முதலில் விக்னேஷை ரெகுலர் பள்ளியில் சேர்த்தனர். பின்னரே, அவருக்கு டவுன்சின்ட்ரோம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, துபாயிலுள்ள அல் நுர் பயிற்சி பள்ளியில் சேர்த்தனர். இங்குதான் 11 ஆண்டுகள் விக்னேஷ் பயிற்சி பெற்றார்.
டவுன் சின்ட்ரோம் இருந்தாலும், பயிற்சி காரணமாக நார்மல் குழந்தைகள் போலவே விக்னேஷ் இருந்தார். இதனால், டி.ஹெச்.எல் நிறுவனத்தில் ரிசப்ஷனிஸ்டாக அவருக்கு 18 வயதிலேயே வேலை கிடைத்தது. மிகசிறப்பாக டிரெஸ்ஸிங் செய்து கொள்வதில் விக்னேசுக்கு மிகுந்த விருப்பம். இதனால், நீட்டாக டிரெஸ் செய்து மிக நேர்த்தியாக ரிசப்சனிஸ்ட் பணியை மேற்கொண்டார். அங்கு, 5 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, பல நிறுவனங்களில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. தற்போது, துபாயிலுள்ள Sofitel ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றி வருகிறார்.
விக்னேஷுக்கு ஜனனி என்ற தங்கையும் உண்டு. கடந்த 2020ம் ஆண்டு ஜனனி பிரிட்டனுக்கு மருத்துவம் படிக்கச் சென்றார். அப்போது, தனது சகோதரருக்கு ஏற்ற துணையைத் தேடத் தொடங்கினார். வடக்கு அயர்லாந்தில் டாக்டராகப் பணியாற்றி கொண்டிருந்த போது, சோசியல் மீடியாவில் பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு டவுன் சின்ட்ரோம் பாதித்த மகள் இருப்பதை அறிந்து கொண்டார்.
அந்த இளம் பெண்ணின் பெயர் அனன்யா. மகாராஷ்டிர மாநிலம் பூனே நகரை சேர்ந்தவர். அனன்யா தனது சகோதரருக்கு ஏற்ற துணையாக இருப்பார் என்று ஜனனி கருதினார். பின்னர், விக்னேஷ் மற்றும் அனன்யா இருவரையும் போனில் பேச வைத்தார். இருவரும் பேசிப் பேசி காதலை வளர்த்துக் கொண்டனர்.
தொடர்ந்து, சகோதரரின் திருமணம் குறித்து ஜனனி பெற்றோரிடத்தில் விவாதித்தார். இரு குடும்பத்தினரும் திருமணத்துக்கு ஒப்புக் கொண்டனர். ஜாதி, மதம், மொழி, இனம் என எதுவும் தடையாக இருக்கவில்லை. இருவருக்கும் 2023ம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 2024ம் ஆண்டு சென்னையில் தமிழ் முறைப்படியும் மராத்தி முறைப்படியும் திருமணம் 3 நாட்கள் நடைபெற்றது.
திருமணத்தில் உறவினர்களும், நண்பர்களும் ஏராளமாக கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினர். திருமணத்துக்கு பிறகு, அனன்யா கணவர் விக்னேசுடன் துபாயில் குடியேறினார். தற்போது, அனன்யா துபாயிலுள்ள பால்ம் ஜூமைரியா பகுதியிலுள்ள Childe Mindor ஹோட்டலில் அனன்யா பணியாற்றுகிறார்.
இருவரும் சாதாரண குழந்தைகள் இல்லை. ஆனால், ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு திருமண வாழ்க்கையை மனம் ஒத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதி டவுன் சின்ட்ரோம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மணவாழ்க்கையும் அவசியம் என்பதையும் சமூகத்துக்கு உணர்த்துகின்றனர்.
டவுன்சின்ட்ரோம் என்றால் என்ன?
டவுன்சின்ட்ரோம் ஒரு நோய் அல்ல. கூடுதல் குரேமசோம் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
டவுன்சின்ட்ரோம் பாதித்த குழந்தைகளுக்கு மரபணுவில் 46 குரோமசோம்களுக்கு பதிலாக 47 இருக்கும்.
இதன்காரணமாக, உடல் மற்றும் மூளை வளர்ச்சியிலும் வித்திசாசம் ஏற்படுகிறது.
குடும்ப மரபணு காரணமாக இது ஏற்படுவதில்லை.
குறிப்பாக, 35 வயதுக்குப் பிறகு பெண்களுக்கு குழந்தை பிறந்தால் டவுன்சின்ட்ரோம் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
இந்த குழந்தைகளுக்கு பேசும் திறனை வளர்க்க பயிற்சி கொடுக்கலாம்.
கண் பரிசோதித்து கண்ணாடி மாட்டலாம்.
காது கேட்க கருவி மாட்டலாம்.
சிறப்பு பள்ளியில் சேர்த்து பயிற்சி அளிக்க வேண்டும்.