தற்போதைய மாடர்ன் உலகில் சின்னச் சின்ன சண்டைகளுக்கே விவகாரத்து கேட்கும் தம்பதிகள் அதிகம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போனால், மனம் விட்டுப் பேசினால் புரிதலோடு கூடிய நல்லதொரு வாழ்க்கைத் துணை அமைந்து, திருமணம் நீடித்து நிலைக்கும். ஆனால், யாருக்கும் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கக் கூட நேரம் இல்லாமல் இருவருமே வேலை வேலை என்று ஓடிக்கொண்டு, அடிக்கடி சண்டைகளோடு வாழ்க்கையைக் கடத்துபவர்களே அதிகம். இத்தகைய காலக்கட்டத்தில், திருமணத்துக்குப் பிறகு கண்பார்வை போன மனைவியை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார் ஒரு ஆண்மகன். உலகத்திலேயே மிகவும் சிறந்த கணவர் இவர்தான் என்று பாராட்டப்படும் அந்த மனிதரைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
சீனாவின் ஷாங்டாங் மாகாணத்திலுள்ள குயிங்டோ நகரை சேர்ந்தவர் லீ ஜியூக்சின். இவர், அங்கு கார் ரிப்பேர் செய்யும் நிறுவனம் வைத்து நடத்துகிறார். கடந்த 2008ம் ஆண்டு லீ , ஷாங் ஜியிங் என்பரை திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு வாழ்க்கை நன்றாக போய்க்கொண்டிருந்தது. தம்பதியின் மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு அடையாளமாக ஒரு மகளும் பிறந்தார். ஆனால், 2013ம் ஆண்டுக்கு பிறகு ஷாங்குக்கு தொடர்ச்சியாக கண்பார்வையில் பிரச்னை ஏற்பட்டது. பல மருத்துவர்களிடத்தில் சிகிச்சை எடுத்தும் பலன் கிடைக்கவில்லை. மனைவியின் மருத்துவச் செலவுக்காக மட்டும் கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ஒரு கோடி வரை லீ செலவிட்டார். எனினும், சிகிச்சை பலன் இல்லாமல் கடந்த 2014ம் ஆண்டு ஷாங் முற்றிலும் கண்பார்வை இழந்தார். கணவரை, மகளை காண முடியாமல் தவித்துப் போனார்.
ஆனால், இந்தச் சமயத்தில்தான் லீ தனது மனைவி மீது அலாதி அன்பைக் காட்டத் தொடங்கினார். 'உனக்கு கண் பார்வை போனாலும் எனது வாழ்க்கை எப்போதும் உன்னைச் சுற்றித்தான் இருக்கும்' என்று ஆறுதலாக இருந்தார். தன் மனைவி சோர்வடைந்து விடக்கூடாது என்பதற்காக எங்கு சென்றாலும் மனைவியைக் கூடவே அழைத்து செல்வார். லீயின் குடும்பத்தினரும், உறவினர்களும் ஷாங்குக்கு ஆதரவாக இருந்தனர். இதனால், தற்போது 36 வயதான ஷாங், தனக்கு நேர்ந்த குறையை மறந்து பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கினார். தற்போது, வீட்டில் சமையல் வேலையில் இருந்து அனைத்தையும் யாருடைய உதவியும் இல்லாமல் செய்யுமளவுக்கு தயாராகி விட்டார்.
மனைவி குறித்து லீ கூறுகையில், 'எனது மனைவிக்கு நடந்த இந்தச் சம்பவத்தால் சொர்க்கத்தில் இருந்து நகரத்தில் விழுந்தது போல உணர்ந்தேன். அதனால், மனதளவில் என் மனைவியைத் தேற்ற தொடங்கினேன். உலகத்திலேயே ஒருவருக்கு நம்பிக்கை அளிப்பதை விட, வேறு ஆறுதலான விஷயம் இருக்க முடியாது. அந்த நம்பிக்கையை எனது மனைவிக்குள் விதைத்தேன். எனது, கார் ரிப்பேர் நிறுவனத்திலோ, வீட்டிலோ கண்பார்வை போய் விட்டது என்பதற்காக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. எது எப்படி இருந்ததோ, அப்படியே இருந்தது. இது, என் மனைவிக்கு கண் பார்வை போயிருந்தாலும், மனதளவில் உற்சாகமாக இருக்க உதவியது. இன்னொருவரை சார்ந்து இருக்கவேண்டுமே என்ற கவலை இல்லாமல், இப்போது அவரும் மகிழ்வாக உள்ளார்' என்று உருக்கமாக கூறியுள்ளார்.
தற்போது 39 வயதான லீ குறித்து சீனாவில் செய்திகள் வெளியாகி, பலரும் அவரை வெகுவாகப் பாராட்டத் தொடங்கியுள்ளனர். உலகத்திலேயே சிறந்த கணவர் லீதான் என்றும் கொண்டாடி தீர்க்கிறார்கள். 'காதல் அனைத்து கஷ்டங்களையும் தாங்கும். எனக்கு மீண்டும் காதல் மீது நம்பிக்கை வந்துள்ளது' என்று ஒருவர் லீ பற்றி பெருமிதமாக பதிவிட்டுள்ளார்.