Alin Sherin Abraham  @TheSouthfirst
மருத்துவம்

அலின் ஷெரின்... இந்தியாவின் லிட்டில் ஏஞ்சல்! #organdonor

உடல் உறுப்புகளை தானம் செய்ய வயது வரம்பே கிடையாது. எந்த வயதிலும் உறுப்புகளை தானம் செய்யலாம்.

எம். குமரேசன்

கேரள மாநிலம் கோட்டயத்தில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி மதியம் 2.30 மணி. காரில் தனது தாத்தா, பாட்டி ஆகியோருடன் அம்மா ஷெரின் மடியில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தது ஒரு 10 மாத பெண் குழந்தை. அந்தக் குழந்தையின் பெயர் அலின் ஷெரின் ஆபிரஹாம். காரை தாத்தா ஓட்ட, எம்.சி சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. இந்த சமயத்தில் எதிரே வந்த கார், குழந்தை பயணித்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் குழந்தை படுகாயமுற்றது. தொடர்ந்து, சங்கனாச்சேரி மற்றும் திருவல்லாவில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், பிப்ரவரி 7ம் தேதி மேல்சிகிச்சைக்காக கொச்சியிலுள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதித்தனர்.

டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் குழந்தையைல் காப்பாற்ற முடியவில்லை. கடந்த புதன்கிழமை (பிப் 13) குழந்தை அலின் மூளைச்சாவை சந்தித்தது. குழந்தையைப் பறி கொடுத்த பெற்றோர் கதறினர். எனினும், இந்தத் தருணத்தில் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய, மருத்துவர்கள் தந்தை அருண் ஆபிரஹாமிடத்தில் உறுப்புகளை தானம் செய்வது குறித்து விளக்கமாக பேசினார்கள். தந்தை ஒப்புக் கொள்ளவே , குழந்தையின் இதயம், கிட்னி, கல்லீரல், கண்கள் போன்றவை தானமாக பெறப்பட்டு திருவனந்தபுரத்திலுள்ள 4 மருத்துவமனைகளுக்கு மின்னல் வேகத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

Little Baby Hope

ஆம்புலன்ஸ் வாகனங்கள் சரியான நேரத்தில் சென்றடைய, கேரளா போலீசார், தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். இதனால், காலை 7.15 மணிக்கு கொச்சியில் புறப்பட்ட ஆம்புலன்ஸ் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரத்துக்கு சென்றடைந்தது. வழக்கமாக கொச்சியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சாலை வழியாக செல்ல 6 மணி நேரம் பிடிக்கும். ஆனால், போலீசாரின் ஒத்துழைப்பால் 3.15 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் திருவனந்தபுரம் சென்று விட்டது. அலினின் இரு கிட்னிகளும் திருவனந்தபுரம் மெடிக்கல் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 10 வயதுச் சிறுமிக்கு பொருத்தப்பட்டது. கல்லீரல் 6 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

தொடர்ந்து, பிப்ரவரி 15ம் தேதி நெடுங்கடப்பள்ளி என்ற இடத்திலுள்ள சி.எஸ் .ஐ ஆலயத்தில் பிரார்த்தனைக்கு பிறகு, அலின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி ஆகியோர் பங்கேற்றனர். குழந்தையின் உறுப்புகளை தானம் செய்த பெற்றோருக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் நன்றி தெரிவித்துள்ளார். ''அந்த பெற்றோரின் சோகத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் ''என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

சுரேஷ் கோபி கூறுகையில், ''குழந்தை அலின் மற்றவர்களுக்கு மறு வாழ்வு கொடுத்து, நம்மிடம் இருந்து மறைந்திருக்கிறாள். இந்த தெய்வகுழந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த தேசத்தின் சார்பில் நான் வந்துள்ளேன். பிறர் வழியாக இந்த உலகில் இன்னும் அவள் வாழ்ந்து கொண்டிருப்பாள். நான் கோவைக்கு சென்று கொண்டிருந்த போது, பிரதமர் அலுவலகத்தில் இருந்து என்னை போனில் அழைத்து, மத்திய அரசு சார்பாக குழந்தை அலினின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இங்கு நான் ஓடோடி வந்தேன்'' என்று உருக்கமாக கூறினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகரும் எம்.பியுமான கமல்ஹாசன் ஆகியோரும் குழந்தை அலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Alin with his Parents

தற்போதைய நிலையில், அலின்தான் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் உறுப்புகளை தானம் செய்த குழந்தை ஆகும். இந்தக் குழந்தையின் உறுப்புகளால் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2025ம் ஆண்டு 16 மாத குழந்தை ஜன்மேஷின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. 2022ம் ஆண்டு ரோலி பிராஜபதி என்ற 6 வயது சிறுவனின் உடலுறுப்புகள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டது.

கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி பிரிட்டனில் ஹோப் லீ என்ற பெண் குழந்தை இரட்டையர்களாக பிறந்தது. இந்த குழந்தை பிறந்து 74 நிமிடங்களில் மரணமடைந்தது. இந்த குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இந்தக் குழந்தைதான் உலகிலேயே உறுப்புகளை வழங்கிய இளையகுழந்தை ஆகும்.

உடல் உறுப்புகளை தானம் செய்ய வயது வரம்பே கிடையாது. எந்த வயதிலும் உறுப்புகளை தானம் செய்யலாம். மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உறுப்புகளை தானம் செய்தால், குறைந்தது 8 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். Organ India  என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது மருத்துவமனைகளில் உறுப்பு தானம் செய்ய, பதிவு செய்து கொள்ள முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி உடலுறுப்புதான தினமாக கடைபிடிக்கப்படுகிறது.