கடந்த வாரம் டாக்டரிடம் போவதற்கு முன்பாக, ரத்தப்பரிசோதனைக் கூடத்திலிருந்து கிடைத்த சுகர் ரிப்போர்ட்டை வாங்கியதுமே தெரிந்துவிட்டது. HbA1C -6.2 இருந்தது. ஒரே உற்சாகம்தான். 3 மாதங்களுக்கு முன்பாக 7.6 ஆக இருந்ததை இப்படிக் குறைத்திருக்கிறோம். மாத்திரை செய்த வேலையா, கம்பு மாவிலும், திணை மாவிலும் செய்த கூழை வெங்காயம் வைத்துக்கொண்டு டயட் என்ற பெயரில் வாரம் இரண்டு தடவைகள் குடித்து வந்ததால் கிடைத்த மாற்றமா, அல்லது தினமும் 30 நிமிடங்கள் லொங்கு லொங்கென நடந்ததால் வந்த முன்னேற்றமா தெரியாது. ஆனால், மாற்றம், முன்னேற்றம், மகிழ்ச்சி… அவ்வளவுதான்!
வீட்டுக்கு வந்ததும், மனைவியார் ‘டாக்டர் என்ன சொன்னார்?’ என்று கேட்பதற்காகவே காத்திருந்தேன்.
’எல்லாம் நார்மல்!’ என்று அவர் சொன்ன அந்த வாக்கியத்தைத் திரும்பச் சொல்லும்போது வரும் நம் முகபாவனை இருக்கிறதே… அது, பையன் 600க்கு 587 மதிப்பெண் எடுத்தால் எப்படி ஒரு பெருமை கலந்த புன்னகை வருமோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமலிருக்கும். ஆனால், மனைவிக்கு என்ன முக்கியமான வேலை இருந்ததோ தெரியவில்லை, அப்படி எதையும் அவர் கேட்கவில்லை. மாறாக, மாலையில் டீக்குடிக்க வீட்டுக்கு வந்த சித்தப்பா ஏழுமலைதான் அதைக் கேட்டார். நானும் பந்தாவாகப் பதில் சொன்னதற்கு, ‘அடேய், இந்த விடியோவைப் பாரு’ என்று ஒரு பிரபல டாக்டரின், வைரல் ரீல் ஒன்றைக் காண்பித்தார்.
அந்த டாக்டர், திருவாய் மலர்ந்தருளியது என்னவென்றால், ‘மகாத்மா காந்திஜியின் ரத்த அழுத்தம் எவ்வளவு இருந்தது தெரியுமா? 190/120. இந்த ரீடிங் இப்போது யாருக்காவது இருந்தால் டாக்டர் என்ன சொல்லுவார் தெரியுமா? உடனடியாக ஐசியுவில்தான் சேர்க்கச் சொல்லுவார். அந்த அளவுக்கு மோசமான ஹைப்பர்டென்சிவ் அளவு இது. ஆனால், காந்திஜி வாழ்நாளெல்லாம் ஆரோக்கியமாக வாழ்ந்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல்நிலை, ஒவ்வொரு விதமான ரத்த அழுத்தம்! அது அவர்களைப் பொருத்தவரை இயல்பானது. நார்மல் ரத்த அழுத்தம் என்று சொல்லப்படும் 120/80 என்ற அளவானது உலகின் பல்வேறு பட்ட நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட மனிதர்களின் கூட்டுச் சராசரி அளவாகும். அதை எப்படி ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொருத்த முடியும்? எல்லோரும் முழு உடற்பரிசோதனை செய்து கொள்ளப் போனால், ஏதாவது ஒருவகையில், நீங்கள் நோயாளியாகத்தான் வெளியே வருவீர்கள்! அதன் பின்னாலிருக்கும் ரகசியம் இதுதான்!’
’இதிலிருந்து என்ன சொல்ல வருகிறீர்கள் சித்தப்பா?’
’உன் டாக்டர் யார், உனக்கு ரத்தச்சர்க்கரை அளவு 7.6 இருக்கக் கூடாது என்று சொல்லுவதற்கு? உன் உடம்புக்கு அதுவே இயல்பான சர்க்கரை அளவாக இருக்கலாம் அல்லவா? அதனால், எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு, பிடித்ததை சாப்பிட்டுக் கொண்டு, சந்தோசமாக இருடா மகனே!’ என்றார்.
சரிதான். எனது சித்தப்பாவை நம்மால் திருத்த முடியாது, அது நமது வேலையுமில்லை. அந்த வீடியோவில், அந்த டாக்டர் சொன்ன கருத்தும் கூட டெக்னிக்கலி சரியானதாகக் கூட இருக்கலாம்தான். ஆனால், இப்படியான தத்துவார்த்தத் தகவலை எல்லாம், எந்த மாதிரியான சமூகத்தில் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று புரிதல் அவருக்கு இருந்திருக்க வேண்டும். என்னுடைய சர்க்கரை அளவு 7.6 என்பது என்னுடைய இயல்பான அளவாகக் கூட இருக்கலாம். ஆனால், நான் கட்டுப்பாடான உணவை, சமச்சீரான உணவை உண்கிறேனா, ஒழுங்காக தினமும் குறைந்தபட்ச உடற்பயிற்சியை மேற்கொள்கிறேனா, நான் எவ்வளவு கடன் வைத்திருக்கிறேன், என்னுடைய ஸ்ட்ரெஸ் லெவல் எப்படி இருக்கிறது? நிம்மதியாக 8 மணி நேரம் என்னால் உறங்கி எழ முடிகிறதா? என்பதையெல்லாம் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும்.
இதெல்லாவற்றையும் சரியாகச் செய்யும் ஒரு மனிதனின் சர்க்கரை அளவு சராசரியை விட கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும் அவன் கவலைப்பட தேவையில்லைதான். ஆனால், இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு கண்ட துரித உணவுகளையும், எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் எடுத்துக்கொண்டு திரிகிற, நேரம் காலம் தெரியாமல் தூங்கி எழுந்து, உடற்பயிற்சி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள், நமக்கு சர்க்கரை அளவு 7.5 இருந்தால் என்ன, ரத்த அழுத்தம் 160/120 இருந்தால் என்ன, அதுதான் நம் இயல்பு என்று அலட்சியமாக இருந்து விட்டால் என்ன நடக்கும்?
‘எல்லாம் நார்மல்தான்’ என்று சொல்லிக்கொண்டே, உடம்பு கொடுக்கிற எச்சரிக்கையைப் புறக்கணிப்பது என்பது டிஸாஸ்டரில் முடிந்துபோகும். ரீல்ஸ் சொல்வதைக் கவனிப்பதை விடவும், நம் உடல் சொல்வதைக் கவனிப்பது அவசியம்!
‘எல்லாம் நார்மல்தான்’ என்று சொல்லிக்கொண்டே, உடம்பு கொடுக்கிற எச்சரிக்கையைப் புறக்கணிப்பது என்பது டிஸாஸ்டரில் முடிந்துபோகும். ரீல்ஸ் சொல்வதைக் கவனிப்பதை விடவும், நம் உடல் சொல்வதைக் கவனிப்பது அவசியம்!
டாக்டர் வேலை செய்வார். அவர் தரும் மாத்திரை வேலை செய்யும். ஆனால், நமக்கான ஒழுக்கத்தை, உடற்பயிற்சியை வேறு யாரும் செய்து தரமுடியாது. அதையெல்லாம் ஒழுங்காகச் செய்து வருபவர்களுக்குதான், அந்த டாக்டர் சொல்லும் தத்துவமெல்லாம் பொருந்தும்.
மற்றபடி நாற்பதைக் கடந்தவர்கள், உடற்பரிசோதனையை மேற்கொண்டு, ஏதேனும் பாகங்கள் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறதா என்பதை கண்டுபிடித்து, அதற்கான தடுப்பாட்டத்தைத் தொடங்குங்கள். அப்படியானவர்களுக்குத்தான் அவர்தம் பேரன், பேத்திகளோடு விளையாடி, மகிழ்ந்து குலாவிடும் வாய்ப்பு அதிகமாகும்!