mirya clinic
மருத்துவம்

இளைஞரிடம் 48 லட்சம் 'ஸ்வாஹா' போட்ட விஜய் குருஜி!

'டெண்ட் வைத்தியர்' ஒருவரிடத்தில் பாலியல் குறைபாடுக்காக சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் ஒருவர் 48 லடசத்தை இழந்தது பெங்களூரு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

எம். குமரேசன்

நாட்டின் பல பகுதிகளில் ஆங்காங்கே டெண்ட் அடித்து மருத்துவம் பார்ப்பவர்களைப் பார்ப்பது உண்டு. இவர்கள் , பெரும்பாலும் மூலிகை வைத்தியங்களை செய்பவர்களாக இருப்பார்கள். இந்த 'டெண்ட்' வைத்தியர்களிடத்திலும் மக்கள் மருத்துவம் பார்ப்பது உண்டு. அவ்வாறு, மருத்துவம் பார்ப்பவர்கள் சாதாரண மனிதர்களாகவே இருப்பார்கள். இந்த டெண்ட் வைத்தியர்கள் ஒரே இடத்தில் நிரந்தரமாக தங்குவதில்லை. தங்களது ஜகாவை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். தாங்கள் போகும் இடங்களில் நகரங்களின் எல்லையோரங்களில் கூடாரம் அமைத்து தங்கிக் கொண்டு வைத்தியத்தில் ஈடுபடுவார்கள். இவர்களின் டெண்ட் முன்னர் தாங்கள் அளிக்கும் சிகிச்சை பற்றியும் விளம்பரம் செய்திருப்பார்கள். இவர்களையும் நம்பி மக்கள் சிகிச்சை மேற்கொள்வது உண்டு. இவர்களிடத்தில் பெறும் மருந்துகளைப் பயன்படுத்தி உடல் நலனையும் இழந்தவர்கள் பலர் உண்டு. தற்போது, இந்த 'டெண்ட் வைத்தியர்' ஒருவரிடத்தில் பாலியல் குறைபாடுக்காக சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் ஒருவர் 48 லடசத்தை இழந்ததுதான் பேசுபொருளாகியுள்ளது.

பெங்களுருவைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஒருவருக்கு கடந்த 2023ம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. திருமணமான சில நாட்களில் அவருக்கு பாலியல் ரீதியாக குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உயர்தர மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுளளார். ஆனால், முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில், கடந்த மே மாதம் பெங்களுரு கேஎல்ஈ சட்டக்கல்லூரி முன்பு, ஆயுர்வேதிக் தவக்கானா என்ற பெயரில் அமைந்திருந்த டெண்ட் மருத்துவமனையை பார்த்துள்ளார். அதன் முன்பு , 'பாலியல்ரீதியான குறைபாடுகளுக்கு உடனடியாக, பலன் கிடைக்கும் 'என்றும் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

ஆயுர்வேதிக் தவக்கானா

உடனே, அந்த இளைஞர் டெண்ட்டுக்குள் இருந்த 'வைத்தியரை' அணுகியுள்ளார். அந்த வைத்தியர் தன்னை விஜய் குருஜி என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அதோடு, தான் கொடுக்கும் அரிய வகை மூலிகை மருந்துகளை சாப்பிட்டால், உடனடியாக பாலியல் குறைபாடு நீங்கும் என்றும் அந்த இளைஞரிடத்தில் ஆசை வார்த்தை கூறியுள்ளார் . இந்த மருந்தின் பெயர் Devaraj Booti என்றும் தெரிவித்ததோடு, ஒரு கிராம் மருந்தின் விலை 1.6 லட்சம் என்றும் கூறியிருக்கிறார். மேலும், ரொக்கமாகத்தான் பணத்தை தர வேண்டும். இதனுடன், சேர்ந்து மற்றொரு மருந்தான Bhavana Booti Taila என்பதையும் வாங்கிக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார். இதன் விலை ஒரு கிராம் 76 ஆயிரம் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தனது மனைவியிடம் விஷயத்தை கூறிய அந்த இளைஞர் முதலில் மொத்தம் 17 லட்சத்துக்கு அந்த மருந்தை வாங்கி சாப்பிடத் தொடங்கியுள்ளார்.

அதோடு அந்த விஜய் குருஜி விடவில்லை. இந்த மருந்தை தொடர்ந்து, சாப்பிட வேண்டும். இல்லையென்றால், சிகிச்சை பலன் தராது என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து, வங்கியில் 20 லட்சம் மற்றும் நண்பர்களிடத்தில் கடன் வாங்கி மொத்தம் 48 லட்சத்துக்கு மருந்தை வாங்கி அந்த இளைஞர் சாப்பிட்டுள்ளார். ஆனால் எந்தப் பலனும் இல்லை. இதனால், பாதிக்கப்பட்ட இளைஞர் பெங்களுரு ஜனனபாரதி போலீஸ் நிலையத்தில் விஜய் குருஜி மீது புகாரளித்துள்ளார். இதற்கிடையே, விஜய் குருஜி தப்பித்து ஓடி விட்டார். தொடர்ந்து, அவரைப் பிடிக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

சித்த வைத்தியரிடத்தில் இளைஞர் ஏமாந்த தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இணையத்திலும், விவாதப் பொருளாக மாறியுள்ளது. 'மெத்தப் படித்தவர்கள்தான் இப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள். என்னால் , நம்பவே முடியவில்லை ' என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், 'பெங்களுரு நகரம் முழுவதுமே, இது போன்ற ஆயுர்வேதிக் தவக்கானாவை காண முடிகிறது. இவர்களுக்கு கடிவாளம் போடுவது யார்?'என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்திலும் இது போன்ற ஆயுர்வேதிக் தவக்கானக்களை பல நகரங்களில் காண முடிகிறது. ஜாக்கிரதை மக்களே!