BANDHAM MOVIE SCENE GoldenCinema youtube channel
மருத்துவம்

சிகரெட் பழக்கமும், நீரிழிவு நோயும்! #NoSmoking

இந்த நோய்களை சீக்கிரமே, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுவிடாதீர்கள்!

ஆதி தாமிரா

பந்தம் எனும் ஒரு படத்தில், குழந்தை பேபி ஷாலினியை மடியில் வைத்துக்கொண்டே சிவாஜி சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பார். இப்போது இப்படி ஒரு காட்சியை கற்பனை கூட யாராலும் செய்துபார்க்க முடியாது. 1980, 90 சினிமாக்களில் ஹீரோக்கள், பிற ஆண்கள், வீட்டுக்குள்ளேயே பெண்கள், குழந்தைகள் முன்னிலையிலேயே சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பார்கள். திரைக்கு வெளியே தியேட்டர்களும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கும். இங்கு மட்டுமல்ல, அதற்கு முந்தைய காலகட்டங்களில் மேலை நாடுகளிலும் இதே நிலைமைதான்!

அப்போதைய நம் வீடுகளிலும் புகை பற்றிய பிரக்ஞையின்றி ஆண்கள் வீட்டுக்குள், மருத்துவமனையில் சிகரெட் பிடிப்பார்கள். ஆனால், 2000க்குப் பின்பாக இந்த நிலைமை மாறியுள்ளது. இப்போது நம் சினிமா ஹீரோக்கள் சண்டைக்காட்சிகளில் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பதோடு சரி. நிஜத்திலும், ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு சிகரெட் பிடிப்பவன் கூட அருகில் குழந்தைகளோ, பெண்களோ இருந்தால் அவ்விடத்தை விட்டு விலகிச் சென்று, மறைவிடம் தேடுகிறான். காரணம், சிகரெட்டால் ஏற்படும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு மிகப்பரவலாக ஏற்பட்டுள்ளதுதான்.

வழக்கமாக சிகரெட், புற்று நோய் மற்றும் இதய சம்பந்தமான நோய்களை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ரத்தத்தில் கலக்கும் நிகோடின் மற்றும் வேதிப்பொருட்கள், இதயத்தின் ரத்த நாளங்களில் படிந்து அவற்றை சுருக்குகிறது மற்றும், கொழுப்பினால் ஏற்படும் பாதிப்புகளை விரைவு படுத்துகிறது. போலவே, நுரையீரல் மற்றும் ரத்தப் புற்று நோய் ஏற்படுவதற்கான காரணமும் கூட புரிகிறது. அப்படியானால், நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கும், மிக இயல்பிலேயே சிகரெட் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது புரிதலுக்கு ஏற்றதுதானல்லவா? ஆனால், அது நம்மில் பலருக்கும் உரைப்பதேயில்லை.

Man Smoking Cigarette

ரத்தத்தை சுத்திகரிப்பது சிறுநீரகம்தானே, கணையத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்பதான நினைப்பு நமக்கு. ஆனால், ரத்தத்தைச் சுத்திகரிப்பது சிறுநீரகமாக இருந்தாலும், கணையம் ரத்தத்தில் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துக்கொள்ளும் முக்கியமான வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான என்ஸைம்களை சுரக்க விடாமல் நிகோடின் மற்றும் வேதிப்பொருட்கள் கணையத்தையும் பாதிக்கிறது என்பதுதான் இதன் இன்னொரு கோணம்.

இன்று இள வயதிலேயே நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் மிக அதிகமாயிருக்கின்றனர். ரத்தத்தில் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க உணவுக்கட்டுப்பாடு, சரியான உறக்கம் போன்றன மிக முக்கியமானவை. அதையெல்லாம் விட முக்கியமானது நடைப்பயிற்சி! கூடுதலாக சிகரெட்டை தவிர்ப்பது, மிக முக்கியமானது. ஒரு பக்கம் மாத்திரை, நடைப்பயிற்சி என்று செய்துகொண்டே மறுபுறம் அறியாமையால் சிகரெட்டையும் ஊதிக்கொண்டிருப்பீர்களேயானால், இவ்வளவு செய்தும் நம் சர்க்கரை அளவுகள் ஏன் இன்னும் கூடிக்கொண்டே இருக்கிறது என்ற பதற்றத்தையும், வியப்பையும் நீங்கள் அனுபவிக்க வேண்டியது வரும்!

Check up of Diabetes

சீட்டில் அமர்ந்து வேலை பார்க்கும் அனைவரும் தினமும் ஒரு மணி நேரமாவது ஏதாவது ஒரு விளையாட்டையோ, உடற்பயிற்சியையோ, நடைப்பயிற்சியையோ கட்டாயம் மேற்கொள்ளுங்கள். நாற்பதுக்குப் பிறகு ஒவ்வொன்றாக எட்டிப்பார்க்கவிருக்கும் இந்த நோய்களை சீக்கிரமே, சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றுவிடாதீர்கள்!