Cancer Cell Freepik
மருத்துவம்

புற்றுநோயைக் கண்டு பயம் வேண்டாம்!

புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித அச்சம் ஏற்படும். ஆனால் சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும்.

வெண்ணிலா

புற்றுநோய் என்றால் என்ன? அதை எவ்வாறு எதிர்கொள்வது? இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் வி. ஜெய் கணேஷ் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தகவல்களை நம்மிடம் விரிவாகப் பேசினார்.

Doctor Jai Ganesh

கேள்வி: புற்றுநோய் என்றால் என்ன?அது ஒரு தொற்று நோயா?

டாக்டர் : மக்கள் மனதில் புற்றுநோய் பற்றிய முதல் பயமே இது தொற்றுநோயோ அல்லது பரம்பரை நோயோ என்ற  எண்ணம்தான். ஆனால் புற்றுநோய் என்பது ஒரு தொற்றுநோய்அல்ல. அது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது. நம் உடலில் உள்ள  செல்கள்  கட்டுப்பாடில்லாமல்  பெருகும்போது உருவாகும் ஒரு நிலையே புற்றுநோய். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கேள்வி: புற்றுநோய் வந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை  இழந்துவிட்டதாக பயப்படுகிறார்களே... அது சரியா?

  1. டாக்டர் : அது முற்றிலும் தவறு. "புற்றுநோய் வந்தால் அவ்வளவுதான்" என்ற தவறான  எண்ணம் சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. நவீன 

    மருத்துவத் தொழில்நுட்பங்கள் மிக வேகமாக வளர்ந்துள்ளன. 

    அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை போன்ற பல சிகிச்சை முறைகள் மூலம் பல புற்றுநோய்களை முழுமையாகக் குணப்படுத்த முடியும். புற்றுநோய்க்கு சிகிச்சை உண்டு என்பதை மக்கள் புரிந்துகொள்ள 

    வேண்டும்

Hug can bring a smile to a cancer patient's face

கேள்வி: புற்றுநோய்க்கான சிகிச்சை மிகவும் செலவுமிக்கது அதனால்தான் மக்கள் பயப்படுகிறார்களே?

டாக்டர் : ஆம், சிகிச்சை செலவுகள் அதிகமாக இருக்கலாம்.  ஆனால் நமது தமிழ்நாட்டில் சேலம், காஞ்சிபுரம் மாதிரி  நிறைய அரசு மருத்துவமனைகளில் நவீன சிகிச்சை  முறைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. மக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். செலவு குறித்த  பயத்தால் சிகிச்சையைத் தள்ளிப்போடக் கூடாது.

கேள்வி: புற்றுநோய் மருத்துவர்கள் பற்றாக்குறை ஒரு முக்கிய சவாலா?

டாக்டர் : ஆம் தமிழ்நாட்டில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்களான ஆன்காலஜிஸ்ட்கள் (Oncologist) பற்றாக்குறை ஒரு பெரிய சவாலாக உள்ளது.

• கல்வி வசதி: ஆன்காலஜி (Oncology) படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கான கல்வி வசதிகள் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இல்லை.

• கிராமப்புற வசதிகள்: சில கிராமப்புற மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான வசதிகள் இல்லை. இதனால், கிராமப்புற மக்கள் சிகிச்சைக்காகப் பெரிய நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

Patients to talk openly with their doctors are key to a successful cancer journey

கேள்வி: இத்தகைய பற்றாக்குறையின் விளைவுகள் என்ன?

டாக்டர்: 

புற்றுநோயாளிகள் சரியான மருத்துவரைத் தேடி அலைவது.

சிகிச்சை தொடங்குவதில் ஏற்படும் தாமதம், நோயின் தீவிரத்தை அதிகரிக்கும்.

ஒரு மருத்துவர் அதிக நோயாளிகளை கவனிக்க வேண்டியிருப்பதால், சரியான கவனம் கொடுக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது.

கேள்வி: புற்றுநோயைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

டாக்டர் : புற்றுநோயைத் தடுப்பதில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முக்கியப் பங்கு உண்டு. புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஊட்டச்சத்து இல்லாத உணவு, உடற்பயிற்சியின்மை போன்ற பழக்கங்கள் புற்றுநோய்க்கான அபாயத்தை  அதிகரிக்கும். இவற்றைத் தவிர்த்து சீரான உணவு, முறையான  உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப்  பின்பற்றுவது புற்றுநோயைத் தடுக்க உதவும். மேலும் உடலில்  ஏற்படும் அசாதாரண மாற்றங்களை உடனடியாகக் கவனிக்க  வேண்டும். உதாரணமாக காரணமின்றி எடை குறைதல்,  நாள்பட்ட சோர்வு, உடலில் தோன்றும் கட்டிகள் போன்ற  அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்வது மிக அவசியம்.