பெண்களுக்கு ஏற்படும் பல உடல்நலப் பிரச்சனைகளில்"எண்டோமெட்ரியோசிஸ்" (Endometriosis) என்ற நோய் ஒரு முக்கியமான ஒன்றாகும். இந்த நோயின் ஒரு வகையானது சினைப்பையில் நீர்க்கட்டியாக உருவாகிறது. இதைத்தான் மருத்துவ மொழியில் "எண்டோமெட்ரியோசிஸ் ஓவேரியன் சிஸ்ட்" (Endometriosis Ovarian Cyst) என்று அழைக்கிறார்கள். இது ஏன் "சாக்லேட் சிஸ்ட்" என்று சொல்லப்படுகிறது என்பதையும், அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகளையும் தெரிந்து கொள்வது அவசியம். அவை பற்றி அறிந்துகொள்ள, சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மற்றும் பெண்நல மருத்துவர் சரஸ்வதி அவர்களின் நாம் கேட்ட கேள்விகளையும் அவர் வழங்கிய மருத்துவக் குறிப்புகளையும் எளிமையாகப் பார்க்கலாம்.
எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன?
மருத்துவர்: பொதுவாக, ஒவ்வொரு மாதமும் கருப்பையின் உள்ளே "எண்டோமெட்ரியம்" என்ற ஒரு மெல்லிய திசுப் படலம் உருவாகும். மாதவிடாய் காலத்தில் இது வெளியேறிவிடும். ஆனால், சில சமயங்களில் இந்த எண்டோமெட்ரியம் திசுக்கள் கருப்பைக்கு வெளியே அதாவது சினைப்பை (ovary), கருப்பைக்குழாய் (fallopian tube), அல்லது மற்ற அடிவயிற்றுப் பகுதிகளிலும் வளர ஆரம்பிக்கலாம். இந்த நிலைதான் "எண்டோமெட்ரியோசிஸ்" என்று அழைக்கப்படுகிறது.
"சாக்லேட் சிஸ்ட்" என்ற பெயர் ஏன், அது எப்படி உருவாகிறது?
மருத்துவர்: எண்டோமெட்ரியோசிஸ் திசுக்கள் சினைப்பையின் மீது வளரும்போது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்குக்கு அவை உள்ளேயே தேங்க ஆரம்பிக்கும். இந்த பழைய ரத்தம் வெளியேற வழியில்லாததால் அது ஒரு நீர்க்கட்டியாக (cyst) மாறிவிடுகிறது.
இந்த நீர்க்கட்டிக்குள் தேங்கியுள்ள ரத்தம் நிறம் மாறி பழுப்பு நிறமாகவோ அல்லது சாக்லேட் நிறமாகவோ இருப்பதால் இதை "சாக்லேட் சிஸ்ட்" என்று எளிமையாக அழைக்கிறார்கள்.
சாக்லேட் சிஸ்டின் முக்கிய அறிகுறிகள் என்னென்ன?
மருத்துவர்: சாக்லேட் சிஸ்ட் இருப்பவர்களுக்குப் பலவிதமான அறிகுறிகள் தென்படலாம். சிலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். சாக்லேட் சிஸ்ட் இருப்பவர்களுக்குப் பொதுவாகக் காணப்படும் அறிகுறிகள்:
கடுமையான மாதவிடாய் வலி: இது மிகவும் பொதுவான அறிகுறி. மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத அடிவயிற்று வலி ஏற்படும்.
வயிற்று மற்றும் இடுப்பு வலி: மாதவிடாய் இல்லாத நாட்களிலும் அடிவயிற்றிலும், இடுப்பிலும் நீண்ட நாட்களாக வலி இருக்கலாம்.
கருத்தரிப்பதில் சிரமம்: சினைப்பையில் இந்த நீர்க்கட்டிகள் இருப்பதால், கருமுட்டை வெளியேறுவதிலும், கருத்தரிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். இது சிலருக்கு குழந்தையின்மைக்குக் காரணமாகவும் இருக்கலாம்.
உடலுறவின் போது வலி: உடலுறவின் போது வலி ஏற்படுவதும் ஒரு அறிகுறியாகும்.
மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிக்கல்: சிலருக்கு குடல் மற்றும் சிறுநீர்ப் பையையும் இது பாதிப்பதால், மலம் கழிக்கும்போதும், சிறுநீர் கழிக்கும்போதும் வலி அல்லது சிரமம் ஏற்படலாம்.
இதற்கு என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?
மருத்துவர்: சாக்லேட் சிஸ்டிற்கான சிகிச்சை, நீர்க்கட்டியின் அளவு, அறிகுறிகளின் தீவிரம் மற்றும் நோயாளிக்குக் குழந்தை வேண்டுமா என்பதைப் பொறுத்து மாறுபடும்.
இயற்கை மருத்துவ முறைகள்: சில சமயங்களில் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த யோகா, உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் பரிந்துரைக்கப்படும்.
மருந்துகள்: வலியைக் குறைக்கவும், நீர்க்கட்டியின் வளர்ச்சியைத் தடுக்கவும் வலி நிவாரணிகள் மற்றும் ஹார்மோன் மாத்திரைகள் வழங்கப்படும்.
ஹார்மோன் சிகிச்சை: ஹார்மோன் மாத்திரைகள் மூலமாக மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தி நீர்க்கட்டியின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சிப்பார்கள்.
அறுவை சிகிச்சை: நீர்க்கட்டி பெரிதாக இருந்தால், அல்லது நோயாளிக்குக் கருத்தரிப்பதில் சிக்கல் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் அந்த நீர்க்கட்டியை அகற்றுவார்கள். இப்போதெல்லாம் லேப்ரோஸ்கோபி (Laparoscopy) எனப்படும் நவீன அறுவை சிகிச்சை முறையில் சிறிய துளைகள் வழியாகவே இந்த நீர்க்கட்டிகளை நீக்கிவிடுவார்கள்.
சாக்லேட் சிஸ்ட் குழந்தையின்மையைத் தடுக்குமா?
டாக்டர்: சாக்லேட் சிஸ்ட் கருத்தரிப்பதில் சிக்கல்களை உருவாக்கக்கூடும். சினைப்பையில் உள்ள நீர்க்கட்டி கருமுட்டை வெளியேறுவதை பாதிக்கும். மேலும் எண்டோமெட்ரியோசிஸ் திசுக்கள் கருப்பைக்குழாய் (Fallopian Tube) மற்றும் சுற்றியுள்ள உறுப்புகளில் ஒட்டுதல்களை (adhesions) ஏற்படுத்தி கருத்தரிப்புக்குத் தடையாக இருக்கலாம். எனவே குழந்தைப்பேறு வேண்டும் என்று நினைப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். சரியான சிகிச்சை மூலம் இந்த சிக்கல்களைத் தீர்க்க முடியும்.
இந்த நோயைத் தடுக்க முடியுமா?
மருத்துவர்: சாக்லேட் சிஸ்ட் என்பது பயப்பட வேண்டிய ஒரு நோய் அல்ல. அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். மாதவிடாய் வலி போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் உடனே சிகிச்சை பெறுவது இந்த நோய் தீவிரமடைவதைத் தடுக்கும். சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்தால் இந்த நோயிலிருந்து விடுபடவும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் முடியும். பயப்பட வேண்டாம் இந்த நோயை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அறிகுறிகள் இருந்தால் தயங்காமல் மருத்துவரிடம் பேசுங்கள்.