பொய் நோய்மை (Pathological lying) என்ற வார்த்தையே நமக்குப் பரிச்சயமில்லாதது. ஏனெனில் அப்படி ஒன்றைப் பற்றி நம் சமூகத்தில் இதுவரை நாம் அறிந்துகொள்ளும் அவசியமே இல்லாதிருந்தது. தமிழகத்தின் சமீபத்திய அரசியல் சூழல், இதைப் பற்றியெல்லாம் அறிந்துகொள்ள வேண்டிய நிலைமைக்கு நம்மைத் தள்ளியிருக்கிறது.
பொய் என்பது மனிதனுக்குப் புதியதல்ல, நாம் ஒவ்வொருவருமே அன்றாட வாழ்வில் பொய்களைச் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம். சொல்லப்போனால், சின்னச்சின்னப் பொய்கள்தான் நம் வாழ்க்கையை தங்குதடையின்றி கொண்டு செலுத்த உதவும் முக்கியமான காரணியாக இருக்கிறது.
மனைவியிடம், பிள்ளைகளிடம், அலுவலக மேலாளரிடம் என தினம் தினமும் பொய்கள் நம்மை காக்கின்றன. ‘பொய்மையும் வாய்மையிடத்த…’ என்று அய்யன் வள்ளுவனே கண்டிஷனலாக பொய்மையை அங்கீகரித்திருக்கிறார். அடுத்த கட்டமாக பொய், ஏய்ப்பு! இதுவும், வியாபாரத்தில், அரசியலில், உறவுகளிடத்தே லாப நோக்கில் செய்யப்படுகிறது. இது பிறரைத் தீவிரமாகப் பாதிக்கும் அறமற்ற செயல்! ஆனால், இதனைத் தாண்டியும் ஒன்று இருக்கிறதென்றால் அதுதான் பொய் நோய்மை!
ஏதோ ஒரு லாப நோக்கில், வியாபாரத்திலோ, அரசியலிலோ, தற்பெருமைக்காகவோ (Narcissism) பொய் சொல்லத் தொடங்கும் ஒருவர், காலப்போக்கில் அந்தப் பொய்யிலேயே தன்னை மறந்து மூழ்கிப் போய், நோய்த்தன்மையை அடைந்து, மருத்துவ, மனோதத்துவ சிகிச்சைகள் தேவைப்படும் அளவுக்குப் போய்விடுவதே பொய் நோய்மை எனப்படுகிறது.
இதன் அறிகுறிகளைக் காண்போம்:
1. இவர்களால் பொய் சொல்லாமல் இருக்கவே முடியாது. நண்பர்களுடன் சாப்பிட நேர்ந்தால், அவசியமே இல்லாமல், ’நான் போன மாசம் சைனா போயிருந்த போது, ஒரு நண்பர் தவளைக்கால் சூப் வாங்கித் தந்தார். நாக்கே மரத்துப்போகுமளவு சூடாக இருந்தது’ என்பார். அவ்வளவு சூடு இருந்திருக்காது, பொய் சொல்கிறார் என்றுதானே நினைக்கிறீர்கள்? அது மட்டுமல்ல, அவர் சூப்பே குடிக்கவில்லை, யாரும் அவருக்கு அதை வாங்கித் தரவும் இல்லை, முதலில் அவர் சைனாவுக்குப் போகவே இல்லை! என்பதுதான் உண்மையாக இருக்கும்.
2. நாம் பொய்களைச் சொல்கையில், நமக்கு அந்த உண்மை எப்போது வேண்டுமானாலும் வெளிப்பட்டுவிடலாம் எனும் அச்சமிருக்கும், கூடவே முடிந்த அளவு அந்தப் பொய்யை எதிராளி கண்டுபிடிக்க முடியாத அளவு நிறுவப் போராடுவோம். ஆனால், இந்நோயாளிகளுக்கு அந்தக் கவலையெல்லாம் கிடையாது. பொய் சொல்வதில் எந்தத் தயக்கமும் இருக்காது.
3. இவர்கள் கற்பனையில் ஓர் உலகத்தையே படைத்து வைத்திருப்பார்கள். ஒரு கட்டத்தில் இவர்களாலேயே இவர்கள் சொல்லும் பொய் எது, உண்மை எது என்று பிரித்தறிய முடியாமல் சுழலில் சிக்கிக் கொள்வார்கள்.
இவர்கள் ஆபத்தானவர்களா?
இவர்களால் பொது சமூகத்துக்கு பிரச்சினை இருக்கிறதா என்று கேட்டால்… இருக்கிறது! இப்படியான பொய்யர்கள் அரசியல் தலைவர்கள் எனும் இடத்துக்கு எப்படியோ வந்து சேர்ந்திருந்தால்? கூடவே அவர்களுக்கு மக்களின் மொழியில் சகஜமாக உரையாடும் பேச்சுத்திறமையும் இருந்துவிட்டால்? மக்களைத் திசை திருப்பும் வேலைகளை, குழப்பும் வேலைகளை மிக ஈடுபாட்டோடு செய்வார்கள். இது ஒரு வகையில் சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தும், இளையோர்களைத் தவறாக வழிநடத்தும்!
இவர்களுக்கு என்னதான் தீர்வு?
இதர மனநோய்களைப் போலவே இதுவும் உளவியல் சிகிச்சைகள் மூலமாக குணப்படுத்தக் கூடிய/ அல்லது குறைந்தபட்சம் கட்டுப் படுத்தக்கூடிய நோய்தான். நோயாளியின் முழு ஒத்துழைப்பு இருந்து, நோய்க்கான மூலக் காரணத்தைக் கண்டறிவதன் மூலம் இதைச் சரி செய்ய முடியும். ஆனால், உண்மையைச் சொல்லாமல், பொய்களைக் கட்டவிழ்த்துவிட்டு இந்தத்துறை மருத்துவர்களையே மண்டைகாய விடும் நோயாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.