Pan India Movies 
சினிமா

Pan India படங்கள்... ஒரு பார்வை!

பாகுபலி, ஆர்ஆர்ஆர், கல்கி, புஷ்பா, கேஜிஎஃப் போன்ற படங்கள் புராணம், கற்பனை, அரசியல், குடும்பம், வீர உணர்வு என பல்வகை உணர்வுகளை இணைத்து மொழி தாண்டிய அளவில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டு, அதில் வெற்றியும் அடைந்தன.

ஆதி தாமிரா

இப்போதெல்லாம் திரைக்கதை எழுத அமரும் போதே நம் எழுத்தாளர்களும், இயக்குநர்களும் ‘வாழ்க பேன் இந்தியா, வளர்க பேன் இந்தியா’ என்ற பிள்ளையார் சுழியுடன்தான் ஆரம்பிக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்.

இன்று இந்த இடத்துக்கு வந்திருக்கும் இந்திய சினிமா, நீண்ட காலமாக மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட தனித்தனி தீவுகளாக இருந்தது. தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா, ஹிந்தி சினிமா, மலையாள சினிமா, கன்னட சினிமா என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பார்வையாளர்கள், தனித்தனி கதைசொல்லல் முறைகள். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக அந்த எல்லைகள் மெதுவாகக் கரைந்து கொண்டிருக்கின்றன. அதற்கான முக்கியக் காரணம் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி. இப்போது பார்வையாளர்கள் மொழி எல்லைகளுக்குள் சிக்கிக் கிடக்க விரும்புவதில்லை. OTT தளங்கள், சமூக ஊடகங்கள், யூடியூப் போன்றவை எல்லாம் ஒன்றிணைந்து இந்த உலகையே ஒரு திரையாக மாற்றியிருக்கின்றன. 

இந்த மாற்றத்தின் மையத்தில் உருவானதே ’பேன் இந்தியா’ (Pan India) திரைப்படங்கள். சற்றேறக்குறைய கொரோனா பேரிடர் சமயத்தில், ஓடிடி தளங்களும், யூடியூபும் பெரு வளர்ச்சியடைந்தன. அந்நேரத்தில் கணிசமான எண்ணிக்கையிலிருக்கும் வட இந்திய ரசிகர்களின் தேவைக்காக தமிழ், தெலுங்கிலிருந்து ஏராளமான கமர்ஷியல் படங்கள் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாக யூடியூபில் வெளியிடப்பட்டன. அவை அடைந்த வெற்றி யாரும் எதிர்பாராதது. 

குறிப்பாக Goldmines, Pen Movies, RKD Studios போன்ற சேனல்கள் வெளியிட்ட, ஜெய ஜானகி நாயகா, சர்ரைனோடு, நேனு சைலஜா போன்ற தெலுங்குப் படங்கள் 80 கோடி, 90 கோடி பார்வைகளைப் பெற்று சினிமாத் துறையை அதிர வைத்தன. பூஜை, ராட்சசி, தெறி, காஞ்சனா போன்ற தமிழ்ப் படங்களும் கோடிக்கணக்கான பார்வைகளை மிக எளிதாகப் பெற்றன. இதற்கு சற்று முன்பாகவே, எஸ். எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி (2015, 2017) திரைப்படங்கள் ’பேன் இந்தியா’ என்ற கருத்தை வலுவாக ரசிகர்களிடம் கொண்டு சென்றிருந்ததால், எல்லாம் ஒரு சேர அமையவும், மார்க்கெட் காரணமாக சிறிய பட்ஜெட்டுக்குள் தங்களை ஒடுக்கி வைத்திருந்த படைப்பாளிகளுக்கு பெரிய கதவுகள் திறந்ததைப் போல ஆயிற்று. 

Pan World Movies

உண்மையில் ‘பேன் இந்தியா’ சினிமா என்றால் என்ன?

அவதார், அவெஞ்சர்ஸ், ஜுராஸிக் பார்க் போன்ற ஹாலிவுட் கமர்ஷியல் படங்கள், அமெரிக்க, ஐரோப்பிய மொழிகள் மட்டுமல்லாது, உலகெங்கும் ஏராளமான மொழிகளில் ஒரே நேரத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. இவை க்ளோபல் மூவிஸ் (அல்லது) Pan World Movies என அழைக்கப்படுகின்றன. அதைப்போலவே இந்தியாவுக்குள் ஒரு சினிமாவை, ஒரு மொழிக்குள் அடக்கிவிடாமல், இந்தியா முழுமைக்குமான சந்தையைக் குறிவைத்து, ஒரே நேரத்தில் பல மொழிகளில் வெளியிடப்படும் படங்களே பேன் இந்தியா படங்கள் என்று பொதுவாகச் சொல்லப்படுகின்றன.

ஆனால், இது வெறும் மொழிமாற்றம் சம்பந்தமான விஷயம் மட்டுமேயல்ல. இது ஒரு மனநிலை மாற்றம். ஓர் இயக்குநர் தனது கதையை ஒரு மாநில பார்வையாளர்களுக்காக மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்காக கற்பனை செய்வதே இதன் மையம்.

பாகுபலி, ஆர்ஆர்ஆர், கல்கி, புஷ்பா, கேஜிஎஃப் போன்ற படங்கள் புராணம், கற்பனை, அரசியல், குடும்பம், வீர உணர்வு என பல்வகை உணர்வுகளை இணைத்து மொழி தாண்டிய அளவில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டு, அதில் வெற்றியும் அடைந்தன. இவற்றின் வெற்றி இந்தியத் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தந்தது. ’ஒரு மாநில மொழிப்படம், சரியான கதையமைப்போடு வந்தால் தேசியச் சந்தையையும் வெல்ல முடியும்.’ என்பதுதான் அது. 

இதனால் திரையுத்துறைக்கு கிடைத்த சாதகங்கள் என்று சிலவற்றைப் பட்டியலிடலாம். 

1. ஏற்கனவே சினிமா தயாரிப்பு என்பது இந்தியாவில் மிகுந்த பொருட்செலவு பிடிக்கும் ஒரு தொழிலாக மாறிக் கொண்டிருந்த நேரத்தில் இப்படியான சந்தை வாய்ப்பு, படைப்பாளிகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது.

2. ஒரு மாநிலத்தில் உருவான நல்ல கதை, மற்றொரு மாநிலத்திலும் ரசிக்கப்படுகிறது. கதைகள் என்பன ஒரு நிலத்தின் பண்பாட்டைப் பரவலாகக் கொண்டு செல்லும் கருவிகளாகும்.

3. பெரிய பட்ஜெட்டில் படங்களை உருவாவதால், VFX, Production Design, Sound Design போன்ற தொழில்நுட்பங்களில் இந்தியப் படங்கள் உலகத் தரத்தை நோக்கி நகர்கின்றன.

4. நட்சத்திரங்களின், படைப்பாளிகளின் எல்லை விரிவடைகிறது. முன்பு ஒரு நடிகர், இயக்குநர் தனது மொழியில் மட்டுமே பிரபலமாக இருந்தார். இப்போது அவர்கள் தேசிய அளவில் அறியப்படுகிறார்கள்.

ஆனால், இதற்கு ஒரு மறுபக்கமும் உள்ளது. இந்தப் பேன் இந்தியா அலையில் சில புதிய சிக்கல்களும் இல்லாமலில்லை.

1. ஒருவேளை படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களைக் கவராது போனால், இழப்பும் பெரிய அளவில் ஏற்படும். ’பெரிய படம்’ என்ற இந்த அழுத்தம் படைப்பாளிகளின் கிரியேட்டிவிடியை பாதிக்கக்கூடும்.


2. கதையை விட காட்சியின் பிரம்மாண்டத் தன்மையில் படைப்பாளிகள் சிக்கிக் கொள்வார்கள். இதனால், ஒரே மாதிரி சினிமா உருவாகும் அபாயம் ஏற்படும். மாஸ் அப்பீல், ஆக்ஷன், ஹீரோயிசம் — இவைதான் அதிகமாக மறு உருவாக்கம் செய்யப்படும் நிலை ஏற்படும்.

3. கலைத் தன்மை கொண்ட, இயல்பான சிறிய படங்கள்  குறைந்து போகும். அப்படியே உருவானாலும், பெரிய படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் போது, அப்படியான சிறிய படங்களின் இடம் கேள்விக்குறியாகிவிடலாம்.

இறுதியில், பேன் இந்தியா என்பது ஒரு மார்க்கெட்டிங் சொல் மட்டுமல்ல. அது இந்திய சினிமா வளர்ச்சியின் அடுத்த கட்டம். ஆனால், ஒரு அடிப்படை உண்மையை நாம் மறக்கக் கூடாது. ஒரு படம் உருவாக்கத்தில் பெரியதாக இருப்பதால் மட்டுமே, அது நல்ல படம் ஆகிவிடாது. உள்ளடக்கத்திலும் அது பெரிதாக இருந்தால் மட்டுமே மொழிகள் கடந்து மக்களைச் சென்றடைந்து சாதிக்கும்!