Trisha in Ponniyin Selvan Madras Talkies
சினிமா

சாதனை நிகழ்த்தும் திரிஷா! #Trisha

சினிமாவில் தனது முந்தைய தலைமுறை நடிகை சிம்ரனையும், சகநடிகை நயன்தாராவையும் விஞ்சியவர் என்றே திரிஷாவை நிச்சயமாகக் குறிப்பிடலாம். 2002 சூர்யா நடித்த மௌனம் பேசியதே தொடங்கி...

ஆதி தாமிரா

பொன்னியின் செல்வன் படத்தில், இலங்கை சென்று திரும்பும் வந்தியத் தேவனை, ஆற்றின் நடுவே இருக்கும் தீவுத்திட்டு ஒன்றில் கண்களைக் கட்டிச் செல்லச்சிறை வைத்துவிட்டு, அவரைச் சீண்டுவதற்காக வருவார் குந்தவை. அதீத நகைகள் இல்லாது, கொண்டையலங்காரம், ஆடையலங்காரமில்லாமல், மெல்லிய இளஞ்சிவப்பு நிறச் சேலை தழையத் தழைய, ஒரு சிற்பத்தின் நடையைப் போல நடந்து வந்து வந்தியத் தேவனை நெருங்குவார் குந்தவை. அப்படியொரு பேரழகு ததும்பும் பெண்மையின் நளினம் எப்படியிருக்கும் என்பதை நம் கண்களுக்குக் காண்பித்தவர் திரிஷா.

தமிழ்த் திரையுலகில் 2000-க்கு பிறகு கொடிகட்டிப் பறந்த நடிகைகள் யார் என்று கேட்டால், யோசிக்காமல் சட்டென நம்மால் சொல்ல முடியும் பெயர்கள் சிம்ரன், திரிஷா, நயன்தாரா. இன்னும் எத்தனையோ நடிகைகள் தங்கள் பேரழகால் நம்மைக் கவர்ந்திருக்கிறார்கள். திறமையான நடிப்பை வெளிப்படுத்தி நம் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். ஆனாலும், ஏதோ ஒரு வகையில் இந்த மூவரும் அவர்களை விட ஒரு படி கூடுதல் உயரத்தைத் தொட்டிருக்கிறார்கள் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஏற்கனவே இந்திப்படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், 1997-இல் ஒன்ஸ்மோர் எனும் படத்தில் விஜய் மற்றும் சிவாஜியோடு நடிக்கும் வாய்ப்போடு தமிழுக்கு அறிமுகமானவர் சிம்ரன். அதே ஆண்டில் வெளியான நேருக்கு நேர் படத்தில் இடம்பெற்ற, ‘எங்கெங்கே எங்கெங்கே’ படம் முழுதும் சிம்ரன் ஓடிக்கொண்டே இருப்பார். அதன் பின் வந்த எத்தனையோ பாடல்களில் அவரது நடனத்திறன் நம்மை மயக்கியிருந்தாலும், அதெற்கெல்லாம் முன்னோட்டமாக அந்தப் பாடலில் அவரது ஓட்டமே ஒரு நடனத்தைப் போல ஒரு மேஜிக்கை நிகழ்த்திக் காண்பித்தது. தொடக்கத்திலேயே அவரது பயணம் டாப் கியரில்தான் தொடங்கியது. கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பிரியமானவளே என அன்று தங்களது கேரியரைத் தொடங்கியிருந்த இன்றைய ஸ்டார்கள், விஜய் மற்றும் அஜித்துடன் நடித்தார். அடுத்த பத்தாண்டுகள் அவரது கொடிதான் உச்சத்திலிருந்தது. 2000-களில் பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற பெரிய ஹிட் படங்களில் கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்தார். கன்னத்தில் முத்தமிட்டால் எனும் மணிரத்தினத்தின் முக்கியமான படம் அவரது நடிப்புத் திறனுக்குச் சான்றாக அமைந்தது. ரஜினியோடு அவர் நடிக்காத குறை, பின்னாளில் ’பேட்ட’ (2019) படம் மூலமாக தீர்ந்தது. 2007க்குப் பிறகு ஹீரோயின் அந்தஸ்திலிருந்து இறங்கி மற்ற கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தவர், இன்று வரை நடித்துக் கொண்டிருக்கிறார். 

முன்னதாகவே மலையாளப்படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், 2005-ல் ஐயா படம் மூலமாக தமிழுக்கு வந்தவர் நயன்தாரா. அதே ஆண்டிலேயே ரஜினியின் சூப்பர்ஹிட் படமான சந்திரமுகியிலும், சூர்யாவின் சூப்பர்ஹிட் படமான கஜினி படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து பில்லா, ஆதவன், யாரடி நீ மோகினி, தனி ஒருவன் என பெரிய ஹிட் படங்களில் பெரும்பாலும் அனைத்து பெரிய நடிகர்களோடும் நடித்தார். அறம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட வித்தியாசமான படங்களையும் செய்ய முடிந்த, சிம்ரனை விடவும் கூடுதலாக, சுமார் 15 ஆண்டுகள் வரை மோஸ்ட் வாண்டட் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 2020க்குப் பிறகே, அவரது பயணம் சற்றுத் தணிந்திருக்கிறது.

Trisha

1999ல் மிஸ் சென்னை பட்டத்தை வென்ற திரிஷா, சினிமாவுக்குள் வந்தது 2002ல் சூர்யா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலமாக. மிக அதிக காலம் முன்னணியில் இருந்ததாகக் கருதப்படும் நயன்தாராவையே முந்திய ஒருவர் இருக்கிறார் எனில் அது திரிஷா மட்டும்தான். எடுத்த எடுப்பிலேயே சாமி, கில்லி எனும் சூப்பர் ஹிட்டுகளில் நடித்த திரிஷா, துறைக்குள் வந்த ஓரிரு ஆண்டுகளிலேயே மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்திலும் ஹீரோயினாக நடித்தார். நடிகர் அஜித்துடன் ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால், விடாமுயற்சி என அன்றிலிருந்து இன்று வரை 5 படங்கள் நடித்திருக்கிறார். நடிகர் விஜயுடன், கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ என 5 படங்கள் நடித்திருக்கிறார். நடிகர் அஜித் மற்றும் விஜயுடன் அதிக படங்கள் இணையாக நடித்த ஒரே நடிகையும் திரிஷாதான்! மங்காத்தா, கில்லி போன்ற படங்கள் அஜித், விஜயின் கேரியரிலேயே மிகப்பெரிய வெற்றிப்படங்கள் என்று சொல்லத்தக்கவை. கமல்ஹாசனுடன் மன்மதன் அம்பு, தூங்காவனம், தக் லைஃப் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். இது தவிர, அவரது நடிப்புத் திறனுக்குச் சான்றாக குறிப்பிடப்பட வேண்டிய விண்ணைத் தாண்டி வருவாயா, அபியும் நானும், 96, பொன்னியின் செல்வன் போன்ற பெருவெற்றிப் படங்களின் கதாநாயகியாகவும் ஜொலித்திருக்கிறார். 

சினிமாவில் தனது முந்தைய தலைமுறை நடிகை சிம்ரனையும், சகநடிகை நயன்தாராவையும் விஞ்சியவர் என்றே திரிஷாவை நிச்சயமாகக் குறிப்பிடலாம். 2002 சூர்யா நடித்த மௌனம் பேசியதே தொடங்கி, 2026 சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் கருப்பு படம் வரை தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமே 24 வருடங்களாக நடித்து வந்திருக்கிறார். இன்னுமே பயணித்துக் கொண்டிருக்கிறார். இவரது இந்தச் சாதனையை இன்னொரு நடிகை முறியடிப்பது மிகச் சிரமமே!