Ne Zha 2 
சினிமா

பிரமிப்பூட்டிய ’நே ஜா -2’ (Ne zha -2)

சென்ற ஆண்டு வெளியாகி, உலகெங்கும் பெரும் பரபரப்பைக் கிளப்பி, அனிமேஷன் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளையெல்லாம் அடித்து நொறுக்கிய படமான நே ஜா-2 (Ne zha 2) இப்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில்? 

ஆதி தாமிரா

டாய் ஸ்டோரி (Toy story), ஃப்ரோஸன் (Frozen), தி லயன் கிங் (The Lion King) போன்ற, வசூல் சாதனைகளை நிகழ்த்தி பாக்ஸ் ஆஃபிஸ் தரவரிசையில் அசைக்கமுடியாத இடத்திலிருக்கும் ஹாலிவுட் படங்களை, சமீப காலங்களில் வெளியான இன்சைட் அவுட் 2 (Inside out-2: 1.7 பில்லியன்) மற்றும் ஸூடோபியா 2 (Zootopia-2: 1.86 பில்லியன்) ஆகிய படங்கள் முறியடித்து அடுத்தடுத்து முதலித்துக்கு வந்தன. இவை மட்டுமல்ல, இந்தத் தரவரிசையில் இருக்கும் ஏறத்தாழ அத்தனைப் படங்களுமே ஹாலிவுட் படங்கள்தான். ஹாலிவுட்டின் பிரபலமான, வால்ட் டிஸ்னி அனிமேஷன், பிக்ஸார் ஸ்டுடியோஸ், இல்லுமினேஷன், ட்ரீம் ஒர்க்ஸ் போன்ற நிறுவனங்களின் படைப்புகள்தான் முதல் ஐம்பது இடங்களில் இருந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில்தான், பெய்ஜிங் என்லைட் மீடியா (Beijing Enlight Media) எனும் நிறுவனம் உருவாக்கிய, 2019ல் வெளியான ’நே ஜா 1’ எனும் சீனப்படம் ஒன்று முதல் முறையாக இந்த வரிசைக்குள் நுழைந்து 32வது இடத்தைப் பிடித்தது. சென்ற ஆண்டு வெளியான, அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ’நே ஜா -2’ எனும் இந்தப்படம்தான், சுமார் 790 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, சுமார் 2.21 பில்லியன் டாலர்களை (20 ஆயிரம் கோடி ரூபாய்) வசூல் செய்து, அத்தனை ஹாலிவுட் படங்களின் சாதனைகளையும் முறியடித்து முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 

நே ஜா -1 படத்தின் முடிவிலிருந்து தொடங்கும் இந்தப்படத்தின் கதை, உடல்களை இழந்த நே ஜா மற்றும் ஆவ் பிங் ஆகியோரின் ஆன்மாக்களுக்காக, புதிய உடல்களை உருவாக்குகிறார் மாஸ்டர் தாயி சென்ரன். செண்டாங் பாஸ் கோட்டையின் தலைவர்களான லேடி ஜின் மற்றும் லீ ஜிங் ஆகியோரின் மகன்தான் நே ஜா. நான்கு திசைக் கடல்களையும் ஆளும் நான்கு டிராகன்களுள் முதன்மையானவரான ஆவ் குவாங்கின் மகன்தான் ஆவ் பிங். நே ஜா, ஆவ் பிங் இருவரும் சூழல் காரணமாக ஒரே உடலில் சிறிது காலம் இருக்க வேண்டியதாகிறது. அதன் பின்னர், ஆவ் குவாங்கின் குழப்பத்தில் தொடங்கும் கதை, அவரது பெரும் அசுரர் படைக்கும், நே ஜாவுக்கு ஆதரவாக களமிறங்கும் வூலியாங் எனும் புனிதரின் பெரும்படைக்கும் இடையே போராக உருவெடுக்கிறது. செண்டாங் பாஸ் கோட்டை அழிக்கப்பட, தன் பெற்றோருக்காக, தன் உடலில் இருக்கும் நண்பன் ஆவ் பிங்கின் தந்தைக்கு எதிராகவே களமிறங்குகிறான் நே ஜா. அதன் பின் என்னவெல்லாம் நடந்தது என்பது பரபரப்பான, ஆக்‌ஷன் கதையாகவும், உணர்ச்சிப் பூர்வமான கதையாகவும் விரிகிறது. 

Ne Zha 2


பெய்ஜிங் என்லைட் மீடியாவின் தயாரிப்பில், ஜியோஸி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில், சுமார் 4 வருடங்களாக, 4000 தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். சீனர்களின் பழமையான புராணங்களுள் ஒன்றான, இன்வெஸ்டிசர் ஆஃப் தி காட்ஸ் (Investiture of the Gods) எனும் கதையைத் தழுவி இதன் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும் பிரமிப்பூட்டுகிறது. அழகு, பிரம்மாண்டம், நேர்த்தி என உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. வூலியாங்கின் அரண்மனையின் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. இறுதியில் அசுரர் படை, வூலியாங்கின் சிறைக்குள் இருக்கும் போது அதை இறுக்கிக் கட்டிவைக்க, வூலியாங்கின் வேர்கள் சூழ, அவரது படை அந்த மரத்தின் இலைகள் போல பரவி நிற்கும் காட்சிகளெல்லாம் கூஸ்பம்ஸ்! 

இத்தனை உணர்ச்சிகரமான, பரபரப்பான சண்டைக் காட்சிகளுக்கூடாக, காமெடியையும் மிக வெற்றிகரமாக கொண்டு சென்றதில் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. இந்தப் படம் இந்தச் சாதனையை நிகழ்த்தாமலிருந்தால்தான் அது ஆச்சரியம்!