Vijay Sethupathi in Train Movie 
சினிமா

வரிசையாகப் படங்கள்.. கோலிவுட்டைக் கலக்கும் விஜய் சேதுபதி!

இன்றைய தேதியில் ஷூட்ட்டிங்குக்குத் தயாராக வரிசையாக படங்கள் இருக்க, பிஸியாகவே இருக்கும் ஸ்டாரென்றால் விஜய் சேதுபதிக்கு முதலிடம் கொடுக்கலாம். வித்தியாசமாக கதாபாத்திரங்கள் என்றாலே உற்சாகமாக ஒப்புக்கொள்ளும் அவரது மனோபாவமும் இதற்கு ஒரு காரணம்.

ஆதி தாமிரா

பொதுவாக ஹீரோ நடிகர்கள் காலம் காலமாக, நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற பிடிவாதத்துடன், கட்டுப்பெட்டித் தனமாக இருந்த சூழலில், வில்லன் பாத்திரங்களிலும், கேரக்டர் ரோல்களிலும் நடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்ததோடு தனது ஹீரோ பயணத்தையும் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. போலவே வேற்று மொழி சினிமாக்களிலும், வெப் சீரிஸ் போன்ற வேற்று வடிவங்களிலும் தயக்கமின்றி நடித்து ஒரு நடிகனாக எப்படி பரந்துபட்டுச் சிந்திக்க வேண்டும் என்பதற்கு முன்னோடியாகவும் இருந்து வருகிறார். இவர் கொடுத்த துணிவிலேயே, சக நடிகரான சிவகார்த்திகேயன் படத்திலேயே ரவி மோகன் வில்லனாக நடித்ததையும் பார்த்தோம். அப்படியான விஜய் சேதுபதியின் கைகளில் இருக்கும் அடுத்தடுத்த படங்கள் என்னவென்பதைப் பார்க்கலாம்.

டிரெயின்


2020ல் வெளியான சைக்கோ படத்துக்கு அடுத்து மிஷ்கின் திரைக்கதை எழுதி, இயக்கியுள்ள படம் டிரெயின். விஜய் சேதுபதியோடு, மிஷ்கின் இணையும் முதல் படமென்பதால் ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்புக்குள்ளாகியிருக்கிறது இது. விஜய் சேதுபதியோடு, டிம்பிள் ஹயாதி, சுருதிஹாசன், நாசர் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் முழுதும் தயாராகிய நிலையில், சென்ற ஆண்டு இறுதியிலேயே வெளியாகியிருக்க வேண்டிய படம், சில காரணங்களால் தள்ளிப்போயிருக்கிறது. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம் என்று சொல்லப்படுகிறது. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்தப் பத்தை, நாம் விரைவிலேயே தியேட்டர்களில் எதிர்பார்க்கலாம்.

பாக்கெட் நாவல்

ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் என்ற இரண்டு முக்கியமான தமிழ் சினிமாக்களை இயக்கிய தியாகராஜர் குமாரராஜா, 7 வருடங்கள் கழித்து தனது மூன்றாவது படத்துக்காக விஜய் சேதுபதியோடு கரம் கோர்த்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர், ‘பாக்கெட் நாவல்’. இருவரும் ஏற்கனவே, சூப்பர் டீலக்ஸில் இணைந்து பணியாற்றியிருந்தார்கள். இந்தப் படத்தில், விஜய் சேதுபதியுடன் சேர்ந்து, மாளவிகா மோகனன், ராஜ்.பி.ஷெட்டி, கிஷோர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியிருந்தன.

ஸ்லம்டாக்-33 டெம்பிள் ரோடு


போக்கிரி, பிஸினஸ்மேன், டெம்பர் போன்ற பிளாக்பஸ்டர் தெலுங்குப் படங்களை இயக்கியவர் இயக்குநர் பூரி ஜெகந்நாத். இவரது இயக்கத்தில் கடைசியாக 2022ல் வெளியான, விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ படம் சரியாகப் போகவில்லை. அடுத்த வெற்றிக்காக பூரி ஜெகந்நாத், விஜய் சேதுபதியோடு இணைந்திருக்கிறார். இது தமிழ், தெலுங்கு என இருமொழிப்படமாக வெளியாகிறது. இது ஒரு ரத்தக்களறியான ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

Vijay Sethupathi in Arasan

அரசன்


விடுதலை பாகம் 1, பாகம் 2 படங்களுக்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் ஒரு மல்டி ஸ்டாரர் படம் அரசன். இந்தப் படத்தின் ஹீரோவாக சிலம்பரசன் நடிக்க, படப்பிடிப்பு நடந்து வந்த வேளையில், முக்கியமான ஒரு பாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார். விஜய் சேதுபதிக்கும், சிலம்பரசனுக்கும் இணையான பாத்திரங்களாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது. இது வரை ஒவ்வொரு படத்திலும் தன் மீதிருக்கும் எதிர்பார்ப்புகளை உயர்த்திக்கொண்டே போகும் இயக்குநர் வெற்றிமாறன் என்பதாலும், அவருடைய வடசென்னை படத்தின் ஸ்பின் ஆஃப் கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் இருப்பதில் ஆச்சரியமில்லை.

காட்டான்
காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கிய எம். மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கக்கூடிய வெப் சீரிஸ்தான் இந்தக் ’காட்டான்’. இதன் வித்தியாசமான டிரைலர், ரசிகர்களில் ஆவலைத் தூண்டியிருக்கிறது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து, ஒரு வித்தியாசமான கிரைம், ஆக்‌ஷன் திரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிற இந்தக் காட்டான், இந்த மார்ச் இறுதியில், ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. 

இவை தவிரவும், பாலாஜி தரணீதரன், மணிரத்னம், மகிழ் திருமேனி ஆகிய இயக்குநர்களின் அடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.