Toy Story 5 www.disney.in
சினிமா

அட்டகாசமான அனிமேஷன் படங்கள்- 2026 #Animatedmovies

வழக்கம் போல இந்தாண்டும் பல அனிமேஷன் படங்கள் நம் கண்ணுக்கும், சிந்தைக்கும் விருந்தாகக் காத்திருக்கின்றன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு வளையத்துக்குள்ளிருக்கும் சில படங்களை இங்கே காண்போம்.

ஆதி தாமிரா

நகைச்சுவை, சாகசம், மற்றும் உணர்ச்சிகரமான கதைகளை, நிஜ உலகில் படம்பிடிக்க முடியாத பேசும் விலங்குகள், பறக்கும் கார்கள், வேற்று கிரக மனிதர்கள் என எல்லையில்லாத கற்பனையின் அற்புதங்களை அனிமேஷன் சினிமாக்கள் மூலம் எளிதாகக் காட்சிப்படுத்த முடியும். அனிமேஷன் படங்கள் குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்க்கின்றன, நிஜ உலகிற்கு அப்பாற்பட்ட புதிய உலகங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்துகின்றன. இந்தப் படங்கள், குழந்தைகள் மட்டுமின்றி வயது வரம்பில்லாது அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும் வல்லமை கொண்டவை.

வழக்கம் போல இந்தாண்டும் பல அனிமேஷன் படங்கள் நம் கண்ணுக்கும், சிந்தைக்கும் விருந்தாகக் காத்திருக்கின்றன. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு வளையத்துக்குள்ளிருக்கும் சில படங்களை இங்கே காண்போம்.

1. டாய் ஸ்டோரி- 5 (Toy Story-5)

அனிமேஷன் திரையுலக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய படம் 'டாய் ஸ்டோரி' (Toy Story). 1995-இல் வெளியான இந்தப் படம், சினிமா உலகையே புரட்டிப் போட்டது. இதுவே கணினித் தொழில்நுட்பத்தை (CGI) மட்டும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதல் முழு நீள 3d அனிமேஷன் திரைப்படமாகும். இந்தப் படம் தான் 'பிக்ஸர்' நிறுவனத்தை உலகிற்கு அடையாளம் காட்டியது. ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களுள் ஒருவராக இருந்தார். பின்னாளில், இந்நிறுவனம் டிஸ்னியுடன் இணைந்தது.

குழந்தைகள் இல்லாத போது பொம்மைகள் என்ன செய்யும்? என்ற அழகான கற்பனைக் கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டது. வூடி (Woody) மற்றும் பஸ் லைட்டியர் (Buzz Lightyear) முதலான கதாபாத்திரங்கள் அனிமேஷன் வரலாற்றில் மறக்க இயலாத இடத்தைப் பிடித்தன. இதுவரை இந்தப் படவரிசையில் 4 படங்கள் உருவாகியிருக்கின்றன. அனைத்துமே பெருவெற்றி பெற்றவை. அதன் வரிசையில் 5வது படம் இந்தாண்டு வெளியாகவிருக்கிறது.

Minions & Monsters

2. மினியன்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ் (Minions & Monsters)

பிக்ஸரைத் தொடர்ந்து இந்தத் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் இன்னொரு நிறுவனம் இல்லுமினேஷன் (Illumination). இல்லுமினேஷனிலிருந்து இதுவரை Despicable me, The Lorex, The Secret Life of Pets போன்ற சிறப்பான சினிமாக்கள் பல பாகங்களாக வெளியாகியிருக்கின்றன. Despicable me எனும் படத்தின் கதாபாத்திரங்களாகத் தோன்றி, பின்னர் தனி ஸ்பின் ஆஃப் சினிமா சீரிஸில் கலக்கிக் கொண்டிருப்பவை நமது மினியன்ஸ். 

இந்த வரிசையில் Minions எனும் முதல் படம் 2015லும், இரண்டாவது படமான, Minions – The Rise of Gru 2022லும் வெளியாகி உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் வைத்திருக்கின்றன. அந்த வரிசையில் ரசிகர்களை மகிழ்விக்க வரும் மூன்றாவது படம்தான், இந்த Minions & Monsters!

3. ஹெக்ஸ்ட் (Hexed)

நூற்றாண்டை நெருங்கப்போகும் உலகப்புகழ்பெற்ற, நிறுவனம் டிஸ்னி அனிமேஷன்ஸ். 1937லிருந்து கைகளாலேயே உருவாக்கப்படும் அனிமேஷன் சினிமாக்களைத் தயாரித்து இத்துறையின் முன்னோடி நிறுவனமாகவும், முன்னணி நிறுவனமாகவும் விளங்குகிறது இது. 1990களின் இறுதியில் டிஸ்னியும் தனது 3D டிஜிடல் அனிமேஷன் பயணத்தை ஆரம்பித்தது. அதன் பின், Bolt, Frozen, Big Hero 6, Zootopia போன்ற புகழ்பெற்ற படங்களை உருவாக்கியிருக்கிறது. சமீபத்தில் Zootopia -2 படம் வெளியாகி உலகளாவிய அளவில் பெரும் வரவேற்புக்கு உள்ளானதை நாம் அறிவோம். இந்த நிறுவனம் 2026ல் கொண்டு வரும் அடுத்த படமான ’ஹெக்ஸ்ட்’ மீது ஒரு எதிர்பார்ப்பு உருவாகியிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

Angry Birds 3 Posters

4. ஹாப்பர்ஸ் (Hoppers)

பிக்ஸர் நிறுவனம், டாய் ஸ்டோரி படத்தைத் தொடர்ந்து, Finding Nemo, Cars, Incredibles போன்ற புகழ்பெற்ற படங்களைத் தந்திருந்தாலும் Wall-E, Up, Inside out போன்ற இணையற்றப் படைப்புகளையும் தந்திருக்கிறார்கள். இவ்வகைப் படங்கள் பொழுதுபோக்கு மற்றும் சிலிர்ப்பூட்டும் சாகசங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தராமல், மனித உணர்வுகளைப் புரிந்துகொள்வது, இயற்கையை, அதன் சிறப்புகளைப் புரிந்துகொள்வது, சமூகத்தை, கல்வியை, குடும்ப உறவுகளைப் புரிந்துகொள்வது, அதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வது போன்ற வாழ்க்கைப் பாடங்களையும் அத்தனை சுவாரசியமாகக் குழந்தைகளுக்குச் சொல்வதில் மிகவும் கை தேர்ந்தவை.

அந்த வரிசையில் இந்தாண்டு வெளியாகவிருக்கிற ’ஹாப்பர்ஸ்’ படமும் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.  

5. ஆங்கிரி பேர்ட்ஸ்-3 (Angry Birds-3)

அறிமுகமே தேவையில்லாத அளவுக்கு, 2009ல் வெளியான 'ஆங்கிரி பேர்ட்ஸ்' மொபைல் கேம் உலகம் முழுவதும் பிரபலமான ஒன்று. அதிலிருந்து தழுவி, அந்த கேமை உருவாக்கிய ரோவியோ அனிமேஷன்ஸ் எனும் நிறுவனத்தாலேயே சினிமாவாக உருவாக்கப்பட்டது இந்த இந்த ஆங்கிரி பேர்ட்ஸ். இதை சினிமாவாக மாற்றுவதில் சவால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2016-ல் வெளியான முதல் படம், ஒரு சாதாரண விளையாட்டை எப்படி ஒரு முழு நீளக் கதையோடு, உணர்ச்சிகரமான சினிமாவாக மாற்றலாம் என்பதற்குச் சிறந்த உதாரணமாகவே அமைந்துவிட்டது. பறக்க முடியாத பறவைகள் வாழும் ஒரு அழகான தீவு. அங்குள்ள அனைத்துப் பறவைகளும் எப்போதும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்கின்றன. அந்தப் பறவைகளையும், தீவிற்குள் நுழையும் பச்சை நிறப் பன்றி வில்லன்களையும் வைத்துப் பின்னப்படும் இந்தப் படங்களின் கதைகள் இயல்பிலேயே கியூட்டாக அமைந்துவிடுவதில் ஆச்சரியமில்லை.

2016ல் இந்த வரிசையின் இரண்டாவது படம் வெளியானது. இந்த ஆண்டு 3 வது படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.