Thaai Kizhavi title card Sivakarthikeyan Productions - Youtube
சினிமா

சிரிக்கச் சிரிக்க ஒரு திரைக்காவியம்! - தாய் கிழவி - Movie Review

இப்படி அழகான, நகைச்சுவையான கதாபாத்திரங்கள், இந்தப் படமெங்கும் நிரம்பியிருக்கின்றன. அதுவே இந்தப் படத்தின் பலமாக மாறி நிற்கிறது.

ஆதி தாமிரா

தமிழ் சினிமாக்களில் நாம் அதிகமாக ரஜினி ரசிகர்களைப் பார்த்திருக்கிறோம். கமல் ரசிகர்களைப் பார்ப்பது அரிதுதான். இந்தப் படத்தில், விசேஷ வீடுகளில் சவுண்ட் சர்வீஸ் கொடுக்க, மைக் செட் வைத்திருக்கும் ஒரு கமல் ரசிகர் வருகிறார். கல்யாண வீடோ, எழவு வீடோ கமல் பாட்டாகப் போட்டுத் தள்ளுகிறார் அவர். ஒரு விசேஷ வீட்டில், ‘நாங்களும் காலைலருந்து பார்க்கிறோம், பூரா கமல் பாட்டா போட்டுகிட்டிருக்க, ஒரு ரஜினி பாட்டாவது போடுடா’ என்று ஒரண்டை இழுக்கிறார்கள். சரி என்று சொல்லிவிட்டு இவர், நினைத்தாலே இனிக்கும் படத்திலிருந்து பாட்டுப் போட, பிரச்சினை பெரிதாகிறது. சமாதானப்படுத்த வரும் ஒரு பெரியவர், ’ரெண்டு பேரு பாட்டும் வேண்டாம்டா, இந்த சிவகுமார் பையனுக இருக்கானுகல்ல, அதுல மூத்தவன் படத்துலருந்து போடுடா பாட்டை’ என்று ஒரு நல்ல தீர்ப்பு சொல்கிறார். அடுத்து, ஏழாம் அறிவு படத்திலிருந்து ஏலேலமா பாட்டைப் போடுகிறார் நம்மாள். சரிதான் திருந்திவிட்டார் என்று நாம் கூட முதலில் நினைத்து விடுகிறோம். அந்த ரஜினி ரசிகர்கள், ‘எலே, இவன் கமல் மவள் பாட்டை போட்டுட்டான்லே’ என்று தாங்க முடியாமல் அவரை அடிக்கப் பாயும் போதுதான் நமக்கே அது உறைக்கிறது.

இப்படி அழகான, நகைச்சுவையான கதாபாத்திரங்கள், இந்தப் படமெங்கும் நிரம்பியிருக்கின்றன. அதுவே இந்தப் படத்தின் பலமாக மாறி நிற்கிறது.

Raadhika Sarathkumar in Thaai Kizhavi

மதுரைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 'பவுனுதாயி' எனும் கிழவி ஓர் அதிரடியான பெண்மணி. வாயைத் திறந்தாலே வசவுதான். ஊர் மக்கள் அனைவருக்கும் வட்டிக்குக் கடன் கொடுத்து மிரட்டலாக வசூல் செய்கிறார். பெற்ற மூன்று மகன்களையுமே, சொத்தெல்லாம் என் சாவுக்குப் பிறகுதாண்டா, போங்கடா போக்கத்தவன்களா என்று விரட்டியவர். நகை கேட்டு டார்ச்சர் செய்யும் மருமகன் பிரச்சினையால், மகளை மட்டும் தன்னுடனேயே வைத்துக் கொண்டிருக்கிறார் பவுனுதாயி. மகளைத் தவிர, பெற்ற பிள்ளைகள் உட்பட ஊரே இவளுக்கு ஒரு சாவு வராதா என்றுதான் ஆவலோடு காத்துக்கிடக்கிறார்கள். அப்படி ஒரு நாள் வந்தும் விடுகிறது. உடல்நலமில்லாமல் பவுனுதாயி சுயநினைவற்ற நிலைக்குச் செல்ல, அதன் பின் நடக்கும் கூத்துகள் என்ன என்பதுதான் முழு படமுமே!

அனுபவம் என்ன தரும் என்பதை ராதிகா, நிரூபித்திருக்கிறார். பிராஸ்தடிக் மேக்கப்பில் பவுனுவாகவே வாழ்ந்திருக்கிறார். சில க்ளோஸப் காட்சிகளைத் தவிர்த்து மேக்கப்பும் பெரிய உறுத்தலில்லாமலிருந்தது சிறப்பு. பால சரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், முத்துக்குமார், இளவரசு என அத்தனை பேரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். முத்துக்குமாரெல்லாம் ரவுண்டு கட்டியடித்திருக்கிறார் எனலாம். இன்னும் பெயர் தெரியாத அத்தனை நடிகர்களின் பங்களிப்பும் அட்டகாசமாக இருந்தது.

புதிய வரவான இயக்குநர் சிவகுமார் முருகேசன், தன் முதல் படத்திலேயே தன்னை நிரூபித்திருக்கிறார். இப்படி ஒரு கலகலப்பான, நகைச்சுவைப் படத்தில் கிடைத்த இடங்களிலெல்லாம் கல்வியின் முக்கியத்துவம், பெண் சுதந்திரம் குறித்தெல்லாம் கருத்துகளைப் பிசிறு தட்டாமல் செருகி வைத்திருக்கிறார். அதற்காகவே அவரைத் தனியாக பாராட்ட வேண்டும். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பெல்லாம் தேவையைப் பூர்த்தி செய்திருக்கின்றன. தியேட்டரில், இப்படி வாய்விட்டுச் சிரித்து நீண்ட நாட்களாகின்றன. தியேட்டரில் தவறவிடக்கூடாத சினிமா, நிச்சயம் காணுங்கள்!