The Odyssey Universal Pictures
சினிமா

2026- எதிர்பார்ப்பிலிருக்கும் ஹாலிவுட் படங்கள் #HollywoodMovies2026

தமிழ்ப்படங்களைப் போலவே 2026 ல் வெளியாகப்போகும் ஒருசில ஹாலிவுட் படங்களுக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது. அவற்றில் சில..

ஆதி தாமிரா

1. தி ஒடிஸி (The Odyssey) – கிரிஸ்டோபர் நோலன் 

தி ஒடிஸி திரைப்படத்தின் கதை, கி.மு 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த பழம்பெரும் கிரேக்கக் கவிஞர் ஒமர் எழுதிய ஒடிசியஸ் (Odysseus) எனும் கவிதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஒடிசியஸின் கதை இதற்கு முன்பாகவும், Ulysses (1954), Helen of Troy (1956), Nostos: The Return (1989) உட்பட சினிமாக்களாகவும், டிவி தொடர்களாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் மிகைபுனைவுக் கற்பனைக்கதை இத்தாக்கா (Ithaca) நாட்டின் மன்னன் ஒடிசியஸ், டிரோஜன் போர் எனும் 10 ஆண்டுகளாக நடந்த ஒரு மிக நீண்ட போருக்கு பின்னர் தனது எஞ்சியிருந்த படையுடன் சொந்த நாட்டிற்குத் திரும்புகிறான். திரும்பும் வழியில் அவன் பெரும் சவால்களை எதிர்கொள்கிறான். அந்தப் பயணமும் 10 ஆண்டுகளாக நீடிக்கிறது. அவனது அந்தப் பயணமே ஒடிசியஸ்! 

இந்த புகழ்பெற்றக் கதையை, நவீனக் கதை சொல்லலிலும், தொழில்நுட்பங்களிலும் சிறந்து விளங்கும் கிரிஸ்டோபர் நோலன் எப்படி அணுகியிருப்பார் எனும் கருத்துதான், உலக சினிமா ரசிகர்களிடையே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற விட்டிருக்கிறது. இந்தப் படத்தில், மேட் டாமன், அனா ஹாத்வே, டாம் ஹாலண்ட் போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பது இன்னும் ஆவலைத் தூண்டியிருக்கிறது.

2. டூன் பகுதி 3 (Dune: Part 3) - டெனிஸ் வில்லெனுவ் 

1965ல் பிராங்க் ஹெர்பர்ட் எழுதிய ’டூன்’ (Dune) எனும் சயின்ஸ் ஃபிக்ஷன் நாவலைத் தழுவி, டெனிஸ் வில்லெனுவ் (Denis Villeneuve) இயக்கத்தில் உருவாகும், மூன்று பாக ’டூன்’ பட வரிசையின் மூன்றாவது படம்தான் இந்தாண்டு வெளியாக இருக்கிறது ’டூன் பகுதி 3’. இதன் முதல் இரண்டு பகுதிகள் ஏற்கனவே Dune- Part one (2021), Dune- Part two (2024) எனும் பெயர்களில் வெளியாகி சினிமா ரசிகர்களை வியப்பிலாழ்த்தியது நினைவிருக்கலாம்.  

எதிர்காலத்தில், பேரண்டத்திலேயே மிக முக்கியமான இடமாகக் கருதப்படுவது அராக்கிஸ் என்ற பாலைவனக் கோள். இங்கு மட்டுமே 'ஸ்பைஸ்' (Spice) என்ற அரிய பொருள் கிடைக்கிறது. இது விண்வெளிப் பயணத்திற்கும், மனிதர்களின் ஆயுளை நீட்டிக்கவும், மன ஆற்றலை வளர்க்கவும் அத்தியாவசியமானதாகும். இந்தப் பொருளைக் கைப்பற்றவே பெரும் போர்கள் நடக்கின்றன. கோள்களை ஆளும் குடும்பங்கள், பேரரசர், அவர்களுக்குள் நிகழும் சூழ்ச்சிகள், போர்கள் என ஒரு வித்தியாசமான கதையமைப்பைக் கொண்டது இந்தப் படம். டூன் நாவல், ஏற்கனவே 1984ல் சினிமாவாகவும், 2000களில் டிவி தொடராகவும் எடுக்கப்பட்டிருந்தலும், டெனிஸ் வில்லெனுவின் இயக்கம் 'டூன்' உலகிற்கு ஒரு புதிய பிரம்மாண்டமான காட்சியனுபவத்தை வழங்கியுள்ளதால் ஏற்படுகிறது இந்த எதிர்பார்ப்பு.

3. மேண்டலோரியன் அண்ட் க்ரோகு (Star Wars: The Mandalorian and Grogu) -ஜான் ஃபேவரு

விண்வெளி சாகசப் படங்களுக்கு என்றிருந்த இலக்கணத்தையே மாற்றியமைத்த படம் 'ஸ்டார் வார்ஸ்' (Star Wars- 1977). அதை நிகழ்த்தியவர் இயக்குநர் ஜார்ஜ் லூகாஸ். லூகாஸ் உருவாக்கிய 'ஸ்டார் வார்ஸ்' கதையை தொடக்கத்தில் பல தயாரிப்பு நிறுவனங்கள் நிராகரித்தன. இறுதியில் '20th Century Fox' நிறுவனம் லூகாஸோடு கைகோர்த்து இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்தது. அதன் பின் நடந்தது வரலாறு! ஒரு படத்தின் நினைவாக உலகெங்கும் ஒரு நாள் கொண்டாடப்படுகிறது என்றால் அது இந்தப் படத்துக்காகத்தான். அந்த அளவுக்கு இந்தப் படம் சாதனைகளைப் படைத்தது. ஸ்டார் வார்ஸ் படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற வசனமான ‘May the Force be with you’ எனும் வசனம், ‘May the Fourth be with you’ என்று எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4ம் தேதி ஸ்டார் வார்ஸ் நாளாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

தொழில்நுட்பத்தில் புரட்சிகள் செய்து கொண்டிருக்கும் இன்றைய ஹாலிவுட் இயக்குநர்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் ஜார்ஜ் லூகாஸ் மற்றும் அவரது நண்பர் ஜேம்ஸ் கேமரூன் போன்றோர். லூகாஸ், கணினிகள் இல்லாத 1970 காலகட்டத்தில், ஸ்டார் வார்ஸ் படங்களின் காட்சி நுணுக்கங்களுக்காக ILM எனும் நிறுவனத்தையே உருவாக்கியவர். அப்படிப்பட்ட புகழ்வாய்ந்த ஸ்டார் வார்ஸ் படங்களின் தொடர்ச்சியாக ‘மேண்டலோரியன் அண்ட் க்ரோகு’ எனும் புதிய படம் இந்த ஆண்டு வெளியாகவிருக்கிறது. 

Spider Man Brand New Day

4. ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே (Spiderman: Brand new day) - டெஸ்டின் டேனியல்

எந்தவொரு சூப்பர் ஹீரோவுக்குமில்லாத சாதனைகள் ஸ்பைடர்மேனுக்கு உண்டு. உலகளாவிய அளவில் வசூல் சாதனை புரிந்த படங்களின் வரிசையின் முதல் 30 இடங்களில் வேறெந்த தனி (கூட்டமாகத் தோன்றும் அவெஞ்சர்ஸ் படங்கள் தவிர்த்து) சூப்பர் ஹீரோக்களும் இல்லாத நிலையில் 1.92 பில்லியன் டாலர்கள் வசூல் செய்து 6வது இடத்தில் கெத்தாக இருப்பவர் ஸ்பைடர்மேன் (Spiderman: No way home- 2021) மட்டும்தான். போலவே டிசியோ, மார்வலோ புகழ்பெற்ற சூப்பர் ஹீரோக்களான சூப்பர்மேன், பேட்மேன், அயர்ன்மேன் போன்ற அத்தனை மேன்களையும் விட மிக அதிக ரசிகர்களையும், வியாபார முகமும் கொண்டவர் இந்த ஸ்பைடர்மேன்தான்.

1970களிலேயே ஸ்பைடர்மேன் சினிமாக்கள் வெளியாகியிருந்தாலும் 2000க்குப் பிறகான நவீன ஸ்பைடர்மேன் படங்கள்தான் மிக அதிகமாக ரசிகர்களை வசீகரித்தன. டோபி மக்வைர், ஆண்ட்ரூ கார்ஃபீல்டு, டாம் ஹாலண்ட் ஆகியோர் இதுவரை ஸ்பைடர்மேனாக வலம் வந்திருக்கிறார்கள். இதுவரை 8 படங்கள் வெளியாகியுள்ள நிலையில் 9வதாக இந்தாண்டு வரவிருக்கும் ‘பிராண்ட் நியூ டே’ படத்தில் ஸ்பைடர்மேனாக மூன்றாவது முறையாக டாம் ஹாலண்ட் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் டெஸ்டின் டேனியல். படம் உலகளாவிய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது.

5. அவெஞ்சர்ஸ்: டூம்ஸ் டே (Avengers: Dooms day) – அந்தோணி ருஸோ மற்றும் ஜோ ருஸோ

சொல்லவே தேவையில்லை என்பது போல, அவெஞ்சர்ஸ் தொடர் சினிமாக்களில் கடைசியாக 2019ல் வெளியான ’அவெஞ்சர்ஸ்- எண்ட்கேம்’ எப்படி பாக்ஸ் ஆஃபீஸ் சாதனைகளை அடித்து நொறுக்கி சாதனைகள் செய்தது, கிளைமாக்ஸில் எப்படி ஒவ்வொரு ரசிகனையும் மயிர்க்கூச்செரிய வைத்தது என்பதை எல்லாம் நாமனைவருமே அறிந்திருப்போம், அனுபவித்திருப்போம். ஒவ்வொரு சூப்பர் ஹீரோவாகக் காண்பித்து நம்மிடம் காசு வசூலிப்பது சிரமமாக இருக்கிறது என்று அத்தனை ஹீரோக்களையும் ஒரே படத்தில் கும்பலாகக் கொண்டுவரும் ஐடியாவுடன் மார்வல் ஸ்டுடியோஸ், 2012ல் களமிறக்கிய படம்தான் ‘அவெஞ்சர்ஸ்’! அவர்களது யோசனை வீண்போகவுமில்லை. இதுவரை இந்தத் தொடரில் வெளியான 4 படங்களுமே பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கிய படங்கள்தான். இந்நிலையில், 5வது படம் (Doomsday) இந்தாண்டு வெளியாகிறது, 6வது படம் (Secret war) 2027ல் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களையும் இயக்கியிருப்பவர்கள், முந்தைய இரண்டு படங்களை இயக்கிய அதே ருஸோ சகோதரர்கள்தான். ஆகவே, விருந்து காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.