கடந்த 1990ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் 'அஞ்சலி ' படம் வெளியானது. இந்த படத்தில் குட்டி தேவதையாக மனநலம் பாதித்த குழந்தையாக நடித்து இந்திய ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்தான் பேபி ஷாமிலி. இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. அப்போது, பேபி ஷாமிலிக்கு 2 வயதுதான் ஆகியிருந்தது. இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் தேசிய விருதைப் பெற்றவர் என்ற பெருமையும் இந்தக் குழந்தைக்குக் கிடைத்தது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துப் புகழ் பெற்றவர் ஷாமிலி. 1990 ம் ஆண்டு சீரஞ்சிவி நடித்த Jagadekaveerudu Athilokasundari என்ற தெலுங்கு படத்தில் தனது சகோதரி ஷாலினியுடன் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. பாசில் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் நடித்த 'ஹரிகிருஷ்ணன்ஸ் ' படத்திலும் நடித்திருக்கிறார்.
கன்னடத்தில் விஷ்ணுவர்த்தன், அம்பரீஷ் ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கர்நாடக அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதையும் பெற்றுள்ளார். இப்படி பல தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களுடன் நடித்திருந்தாலும் ஷாமிலியால் வளர்ந்தபிறகு சகோதரி ஷாலினி போல சோபிக்க முடியவில்லை.
நடிகை ஷாலினியும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்தான். ஷாலினி வளர்ந்த பிறகு 'அனியத்திப்றாவு ' என்ற மலையாளப் படத்தில்தான் நாயகியாக அறிமுகமானார். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. இதுதான், பின்னர் 'காதலுக்கு மரியாதை' என்ற பெயரில் தமிழில் வெளியானது. தமிழிலும் அவரே நாயகியாக விஜய்யுடன் நடித்தார். இதனால், மலையாளம் மற்றும் தமிழில் முதல் படமே பெரிய ஹிட்டாக ஷாலினிக்கு அமைந்து விட்டது. பின்னர், அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் என தமிழில் பல ஹிட் படங்களில் நடித்தார் ஷாலினி. இத்தகயை ஓபனிங்தான் ஷாமிலிக்கு அமையவில்லை.
சரியான கதை களம் அமையாததே ஷாமிலியால் முன்னணி நடிகையாக மாற முடியவில்லை என்றே சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
ஷாமிலி வளர்ந்த பிறகு, 2009 ம் ஆண்டு தெலுங்கு படமான 'ஓயே 'வில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார். சிறந்த அறிமுக நடிகைக்கான விருது அவருக்குக் கிடைத்தது. ஆனால், படம் பெரிய அளவில் ஓடவில்லை. பின்னர், என்ன நினைத்தாரோ தெரியவில்லை 2010 முதல் 2015ம் ஆண்டு வரை சிங்கப்பூருக்கு படிக்கச் சென்று விட்டார். இந்த சமயத்தில் அவருக்கு கிடைத்த பல வாய்ப்புகளை அவர் நிரகரித்ததாக தெரிகிறது.
பின்னர், நாடு திரும்பிய ஷாமிலி மீண்டும் தமிழ்ப்படத்தில் தலை காட்டினார். 2016ம் ஆண்டு விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'வீர சிவாஜி' என்ற படத்தில் நடித்தார். இந்த படம் பிளாப் ஆனது. இதே ஆண்டு மலையாள படமான' வல்லீம் தெட்டி புல்லீம் தெட்டி' யிலும் நடித்தார். இந்த படத்துக்கும் வரவேற்பு இல்லை. கடைசியாக 'அம்மாமகரில்லு' என்ற தெலுங்கு படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார்.
கடந்த 2018ம் ஆண்டு சிங்கப்பூரின் புகழ் பெற்ற Lasalle College of Arts - ல் இளங்கலை மற்றும் பிலிம் ஸ்டடியில் டிப்ளமோ பட்டமும் பெற்றார். அவரது கலை ஆர்வம் அதோடு நிற்கவில்லை. பாரிஸ் கலைக் கல்லூரியில் ஓவியப் பயிற்சி, இத்தாலியின் கண்ணாடியில் ஓவியம் வரையும் பயிற்சிகளை பெற்றார்.
தற்போது, ஷாம்லி ஓவியக் கண்காட்சி கலைஞராக உருவெடுத்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள ஃபோகஸ் ஆர்ட் கேலரியில் "SHE" என்ற பெயரில் கண்காட்சி நடத்தினார். பெங்களூருவில் புகழ் பெற்ற சித்ரகலா பரிஷத்திலும் கண்காட்சி நடத்தியுள்ளார்.
ஏதோவொரு கலை வடிவத்தில் இன்னும் தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறார் ஷாம்லி!