Mammootty with Indrans RECREATED WITH AI
சினிமா

'நடிப்பால் அனைவரையும் வெட்கப்பட வைத்து விட்டார்!'- இந்திரன்ஸ் குறித்து மம்முட்டி

உடல்ரீதியாக கேலி செய்யப்படும் விதத்தில் பல ரோல்களில் இந்திரன்ஸ் நடித்துள்ளார். இப்போது, நடிப்பால் நம்மை வெட்கப்பட வைத்து விட்டார்- மம்முட்டி

எம். குமரேசன்

"உடல்ரீதியாக கேலி செய்யப்பட்ட இந்திரன்ஸ் இப்போது தனது நடிப்பால் அனைவரையும் வெட்கப்பட வைத்து விட்டார்" என்று மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி திரைப்பட விழா ஒன்றில் பேசியுள்ளார்.

மலையாளத் திரையுலகின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான இந்திரன்ஸ் 1994-ல் ஜெயராம் நடித்த 'CID Unnikrishnan B.A. B.Ed.' படம் மூலம் மிகவும் பிரபலமானார். சிறந்த குணச்சந்திர நடிகரும் கூட. கிட்டத்தட்ட 250 மலையாளப்படங்களில் நடித்துள்ளார். சிறப்பான நடிப்புக்காக கேரள மாநில விருதை பெற்றவர். தற்போது, ஜான்பால் ஜார்ஜ் எழுதி இயக்கியுள்ள 'ஆஷான்' படத்தில் இந்திரன்ஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். பிப்ரவரி 5ம் தேதி வெளியான இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவில் நடிகர் மம்முட்டி கலந்து கொண்டு இந்திரன்சுக்கு புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, ''முன்பெல்லாம் இந்திரன்ஸ் நடித்த பல படங்களில் அவரின் உடலை கேலி செய்யும் விதத்திலேயே கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் காலக்கட்டத்தில் அது சாதாரமானது. ஆனால், தற்போது இந்திரன்ஸ் தன் நடிப்புத்திறமையால் அவரை , கேலி செய்யும் விதத்தில் படம் எடுத்தவர்களை வெட்கப்பட வைத்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த பல படங்களை பார்த்து நான் வியந்து போனேன். தனது குறைபாட்டையும் தனது பலமாக அவர் மாற்றிக் கொண்டுள்ளார். இந்திரன்ஸ் நடித்த 'ஜலதாரா பம்ப் செட் ' படத்தை மிகவும் என்ஜாய் செய்து பார்த்தேன். 'குட்டந்தே ஷினிகாமி' படத்தில் அவர் நடித்த ரோல் என்னை வியக்க வைத்து விட்டது. எப்படி இந்த ரோலை செய்தார் என்றே என்னால் நம்ப முடியவில்லை. மலையாள சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்ட ரோல் கிடைத்தால், இந்திரன்ஸ் போன்றவர்கள் பின்னி எடுத்து விடுவார்கள் என்பதற்கு இந்தப் படமே சாட்சி. 'ஆஷான் ' படமும் நல்ல வெற்றியை பெறும். ஒரு சாதாரண மனிதனின் சினிமா கனவு, நிஜ வாழ்க்கையின் கஷ்டங்களுடன் இணைத்து காமெடியாக கூறியிருக்கிறார்கள். இந்திரன்ஸ் நடிப்பும் பிரமாதமாக உள்ளது.''

இவ்வாறு மம்முட்டி பேசினார்.

Mammootty with Director Rajkumar

நடிகர் மம்முட்டியும் கடந்த 2018ம் ஆண்டுக்கு பிறகு, மீண்டும் தமிழ்ப்படத்தில் நடிக்கவுள்ளார். தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘D55’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். 2018ல் மம்முட்டி இயக்குநர் ராமின் 'பேரன்பு ' என்ற தமிழ்ப்படத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வருகிறார் மம்முட்டி. நடிகர் மம்முட்டியும் தனுசும் 13 ஆண்டுகளுக்கு பிறகு, இணைந்து நடிக்கிறார்கள். முன்னதாக, கடந்த 2013ம் ஆண்டு ‘Proprietors: Kammath & Kammath என்ற மலையாளப்படத்தில் மம்முட்டியின் ஹோட்டலை திறந்து வைப்பது போன்ற சிறப்பு தோற்றத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத, D55 படத்தில் சாய் பல்லவியும் , ஶ்ரீ லீலாவும் கதாநாயகிகள். சாய் பல்லவியும் ஸ்ரீ லீலாவும் நன்றாக நடனம் ஆடக் கூடியவர்கள் என்பதால், இந்த திரைப்படத்தில் நடனத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாடல்கள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். படத்துக்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார். படத்தின் திரைக்கதையை ராஜ்குமார் பழனிச்சாமி, விக்னேஷ் ராஜா மற்றும் ஆல்பிரட் பிரகாஷ் ஆகியோர் இணைந்து உருவாக்கி வருகின்றனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராகவும் , ஸ்ரீஜித் சாரங் எடிட்டராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தத் திரைப்படத்தை ஆர்டேக் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து , தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் தொடங்குகிறது.