Sarvam Maya JioHotstar Tamil - Youtube
சினிமா

இவ்வளவு சுவாரஸ்யமாக ஒரு பேய்க்கதையா! #SarvamMaya #moviereview #Delulu

டெலூலுவின் இறப்பில், யார் ‘எஸ்’ சொன்னது என்ற முடிவு வெளிப்படும் இடமும், அந்த இடத்திலேயே டெலூலு காற்றில் கரைந்து போவதும் ஓர் அழகான கவிதை!

ஆதி தாமிரா

ஒரு பெண் இறந்து போகிறாள். அது கொலையா, தற்கொலையா, விபத்தா என்று நமக்கு எதுவும் தெரியவில்லை. நமக்குத் தெரியாவிட்டால் பரவாயில்லை, அந்தப் பெண்ணுக்கே அது தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறாள். இன்னொரு முக்கியமான விஷயமும் அதில் இருக்கிறது. அவள் சாகும் தருவாயில் யாரோ, ‘எஸ்’ என்று சொல்லும் குரல் அவள் காதுகளில் ஒலித்திருக்கிறது. 'நான் இறப்பதை யாரோ விரும்பியிருக்கிறார்கள். அப்படி நான் யாருக்கு என்ன செய்தேன்? அதை யார் சொன்னது? அது எதற்காகச் சொல்லப்பட்டது?' இந்தக் கேள்விகள்தான் இறந்து போன அந்தப் பெண்ணின் மனதில் உறுத்திக்கொண்டிருப்பவை. டெலூலு எனும் அந்த இளம் பெண்ணுக்கு அதற்கான விடை தெரிந்தாக வேண்டும்! நமக்குமேதான்!

மரபார்ந்த வைதீகத் தொழில் செய்யும் ஒரு நம்பூதிரிக் குடும்பம் ஒன்று, அதில் அப்பா, பெரியப்பா, அண்ணன் எனப் பலரும் விஐபிக்களுக்குப் புரோகிதம், பூஜைகள் செய்து சம்பாதிக்கிறார்கள். அந்தச் குடும்பத்திலிருந்து, 20 வயது வரை பூஜை செய்யும் வழிமுறைகளை நன்கு தெரிந்துகொண்டும், மந்திரங்களை மனனம் செய்தும் வைத்திருக்கும் பிரபேந்து எனும் ஓர் இளைஞன், ஒரு கட்டத்தில் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகனாகவும், சாதிக்கத்துடிக்கும் ஒரு கிடார் இசைக் கலைஞனாகவும் மாறி நிற்கிறான். ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் அவன், வேலையில்லா சமயத்தில் செலவுக்காக அவனது கஸினுடன் இணைந்து லோக்கலில் சின்னச்சின்ன பூஜைகள் செய்து சம்பாதிக்க இறங்குகிறான்.

இன்ன பூஜை என்றில்லாமல், புதுமனைப் புகுதல், தொழில் தொடக்கம், ஆண்டுவிழாக்கள், காதுகுத்து என சரமாரியாகச் செய்கிறார்கள் இருவரும். அதில் பேய் பிடித்ததாகக் கருதப்படும் ஒரு சிறுவனுக்காகவும் பூஜை செய்யப்போகிறார்கள். அந்தப் பூஜையில் அந்தப் பையன் சரியாகிவிடுகிறான். ஆனால், அந்த இடத்தில்தான் திக்கற்றுத் திரிந்துகொண்டிருந்த நமது டெலூலு. பூஜை செய்த பிரபேந்துவுடனே இணைந்து கொள்கிறாள்!

ஆஹா, மற்றுமொரு காமெடி, ஹாரர் படத்துக்கான கதை போலத் தெரிகிறதல்லவா?

Nivin Pauly and Riya Shibu

ஆனால், ஹாரர் எனும் வகைமைக்குள் வராமலேயே ஒரு பேய்ப்படம் எடுக்கமுடியும், ஒரு அழகான காதல் கதையைச் சொல்வதற்கும் பேய் ஜானரில் இடமிருக்கிறது என்று சொல்லி வியக்க வைத்திருக்கிறார் அகில் சத்யன். இது இவரது இரண்டாவது படம். இவர், பிரபல இயக்குநர் சத்யன் அந்திக்காடுவின் புதல்வர்.

அத்தனை இயல்பான, மலையாளப் படங்களுக்கே உரிய மென் நகைச்சுவைக் காட்சிகளோடு எடுக்கப்பட்டிருக்கிறது சர்வம் மாயா. புரோகிதத் தொழில் வெளிநாடுகளிலும் கொடிகட்டிப் பறப்பதைக் காட்டியிருக்கிறார்கள். பிரபாவின் அண்ணன், நாடு நாடாக பறந்து புரோகிதம் செய்கிறார். அந்தக் காசில் உதவியாளருக்கே காரெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார். ‘கென்யாவில் ஹோமத்துக்கு கருங்காலி மரத்துண்டுகள் கிடைக்காதே?’ எனும் பையனின் கேள்விக்கு அப்பா, ‘மரத்துண்டு இல்லையென்றால் பூக்களைப் போட்டு சமாளி, நமக்கெல்லாம் ஒன்றுதான்’ என்பதாகச் சொல்கிறார்.

பிரபாவாக நவீன் பாலி, பல வருடங்களுக்குப் பிறகு தனித்துவமான அவரது அழகான, ஈர்ப்பு மிக்க நடிப்பை வழங்கியிருக்கிறார். டெலூலுவாக வரும் ரியா ஷிபுவின் காரெக்டரும், அதற்கு அவரது நடிப்பும் நம் கண்களையும், மனதையும் நிறைத்து விடுகிறது. அஜு வர்கீஸின் நகைச்சுவைக் காட்சிகள், நிவினுக்கும், அவரது தந்தைக்கும் இடையே இருக்கும் உறவு, அது வெளிப்படும் இடம் என குறிப்பிட்டுச் சொல்ல இப்படத்தில் நிறைய இருக்கிறது.

டெலூலுவின் இறப்பில், யார் ‘எஸ்’ சொன்னது என்ற முடிவு வெளிப்படும் இடமும், அந்த இடத்திலேயே டெலூலு காற்றில் கரைந்து போவதும் ஓர் அழகான கவிதை!

நம்மைப் பிரிந்து சென்றுவிட்ட, நம் மனதுக்கு நெருக்கமானவர்கள், இந்தப் படத்தில் வருவதைப்போல நம்முடனே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற சிந்தனை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நமக்குப் பேய் பிடிக்கும் என்பார்கள் அல்லவா, இந்தப் படத்தைப் பார்த்தால், நிச்சயமாக நமக்குப் பேயைப் பிடிக்கும்!

இந்தக் கதையில் தவிர்க்க முடியாத அம்சமான, நாத்திகனிலிருந்து, ஆத்திகனாக மாறும் ஹீரோவின் கதாபாத்திரம், கதையின் எந்தக் கண்ணியை வேண்டுமானாலும் தூக்கிவிடலாம், இடம் மாற்றிவிடலாம் என்பதான கதையமைப்பு போன்ற சிற்சில குறைகள் இருப்பினும் நிச்சயம் பார்க்க வேண்டிய சினிமாவாகியிருக்கிறது சர்வம் மாயா. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.