சமீபத்தில் ’சின்னர்ஸ்’ (Sinners) திரைப்படம் இதுவரை இல்லாத அளவில் 16 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட செய்திகளைப் பார்த்தோம். இதற்கு முன்னால், டைட்டானிக் (Titanic), லா லா லேண்ட் (La La Land) போன்ற ஒரு சில படங்கள் அதிகபட்சமாக 14 பிரிவுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டதுதான் சாதனையாக இருந்தது. ’சின்னர்ஸ்’ திரைப்படம் அதை முறியடித்திருக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது, அதாவது - யார் இதையெல்லாம் முடிவு செய்கிறார்கள்? ஒரு படம் இத்தனை பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்பவர்கள் யார்?
அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள ’அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் Academy of Motion Picture Arts and Sciences (AMPAS) எனும் அமைப்புதான் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது. அதன் முதலாவது விருது விழா 1929ல் தொடங்கியது. வரும் 2026 மார்ச்சில் நடக்கப்போகும் விழாவானது ஆஸ்கரின் 98வது விருது வழங்கும் நிகழ்வாகும்.
இந்த அகாடமியில் சுமார் 11000+ உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 10000+ உறுப்பினர்களுக்கு வாக்குரிமை உள்ளது. இவர்கள் உலகெங்கிலுமுள்ள பல்வேறு நாடுகளின், திரைத்துறையிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் நடிகராக, இயக்குநராக, கதாசிரியராக, இசையமைப்பாளராக, எடிட்டராக, மேக்கப் கலைஞராக என சினிமாவின் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலைகளில் நேரடிப் பங்களிப்பைச் செய்தவர்களாவார்கள். இப்படியான கலைஞர்கள் தவிர்த்து, விமர்சகர்கள், ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், பட நிறுவனங்கள், பொதுமக்கள் என வேறு யாருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை.
இந்த10000+ உறுப்பினர்களிடம்தான் ஒரு படத்தை, சிறந்த படம் எனும் வகையிலேயோ அல்லது அந்தப் படத்தின் ஒரு குறிப்பிட்ட உட்பிரிவின் பங்களிப்பை, அதன் வகைமையிலேயே சிறந்தது என்றோ தீர்மானிக்கும் முடிவை எடுக்கக்கூடிய வாக்குரிமை உள்ளது.
ஓர் ஆங்கில சினிமா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ், நியூ யார்க், சிகாகோ முதலான 6 முக்கிய நகரங்களுள் ஒன்றில் வெளியாகி பொதுமக்களின் பார்வைக்கு குறைந்தபட்சம் ஒரு வாரமாவது காட்சிப்படுத்தப்பட்டிருந்தால்தான், அது அந்த ஆண்டின் ஆஸ்கர் நிகழ்வில் தவிர்ந்து கலந்து கொள்ளும் தகுதியைப் பெறுகிறது. அதன் பின்னர், அந்த படத்தின் தயாரிப்பாளர் விருதுகளுக்காக அகாடமிக்கு அந்தப் படத்தை சமர்ப்பிக்கலாம்.
அப்படி விண்ணப்பிக்கப்பட்ட படங்களிலிருந்து அகாடமியின் உறுப்பினர்கள் விருதுக்குரிய படங்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த உறுப்பினர்கள் நடிகர்கள், இயக்குநர்கள், கதாசிரியர்கள் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருப்பார்கள். அதிலிருந்து நடிகர்களின் குழு சிறந்த நடிகர்களைப் பரிந்துரைக்கும், இயக்குனர்களின் குழு சிறந்த இயக்குனர்களைப் பரிந்துரைக்கும், இப்படியாக அந்தந்தத் துறைகளைச் சார்ந்த வல்லுனர்களே அந்தந்தத் துறைகளில் விருதுக்குரியவர்களைப் பரிந்துரைப்பார்கள். சிறந்த படம் என்ற பிரிவுக்கு மட்டும் அனைத்து குழுவினர்களும் வாக்களிக்க முடியும்.
அதிக வாக்குகள் எனும் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து படங்கள் இறுதிப் போட்டிக்குப் பரிந்துரை செய்யப்பெறும். சிறந்த படம் எனும் பிரிவில் மட்டும் 10 படங்கள் இடம்பிடிக்கும். இது பரிந்துரையில் இடம்பெறுவதற்கான வழி! இப்படியாக பரிந்துரை நிறைவு பெற்ற பிறகு இறுதிப் போட்டி நடக்கும்.
இதிலும் அகாடமியின் அதே உறுப்பினர்கள்தான் வாக்களிப்பார்கள். ஆனால், இம்முறை அனைவரும், அனைத்துப் பிரிவுகளுக்கும் வாக்களிக்கும் தகுதி பெறுவார்கள். ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குகள் பெறும் படங்கள் வெற்றியடையும். சிறந்த படம் எனும் பிரிவில் மட்டும் அதிக வாக்குகள் போதாது, பதிலாக Preference Voting எனும் முறையில் படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதாவது, இந்த முறையில் வாக்காளர்கள் ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்காமல், போட்டியிடும் 10 படங்களையும், அவர்களுக்குப் பிடித்த ஆர்டரில் ஒன்றிலிருந்து பத்து வரை வரிசைப்படுத்துவார்கள். அதில் அதிக ஓட்டுகளை வாங்கும் படம் வெற்றிப்படமாக அறிவிக்கப்படும்.
ஒரு ஜனநாயக அரசைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர்களாகிய நம்மைப் போலவே, அகாடமியிலும் வாக்களிக்கும் உரிமையிருக்கும் அத்தனை பேரும் வாக்களிக்க வேண்டும் எனும் கட்டாயமில்லை. குறிப்பாக பரிந்துரைச் சுற்றில், அத்தனைப் படங்களையும் பார்க்கும் நேரமில்லாத ஒரு கலைஞர், தார்மீக அடிப்படையில் வாக்களிப்பது தவறு என்று வாக்களிக்காமலிருக்கலாம். போலவே, இறுதிப் போட்டியில் சிறந்த நடிப்பைத் தீர்மானிக்கும் தகுதி எனக்கில்லை என்று நினைக்கும் ஒரு இசையமைப்பாளரோ, சிறந்த இசையமைப்பாளரைத் தேர்ந்தெடுக்கும் தகுதி எனக்கில்லை என்று நினைக்கும் மேக்கப் கலைஞரோ வாக்களிக்காமல் போகலாம். பொதுவாக ஒவ்வொரு பிரிவிலும் சுமார் 65% வாக்குகள் பதிவாகின்றன என்று சொல்லப்படுகிறது. சிறந்த படம் பிரிவுக்கு மட்டும் சற்று அதிகமாக இருக்கலாம்!